0
இறுதி யுத்தத்திலே கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய காலத்திலே தற்போதைய அரசும் கடந்த கால சூழ்நிலைகளை அவதானிக்கின்ற போது போரிலே இறந்த அனைவருக்குமான ஒரு பொது நினைவுத் தூபி ஒன்றை அமைக்க திட்டமிடுறார்கள்.
அதுவும் முள்ளிவாய்க்காலிலே நாங்கள் நிறுவ இருக்கின்ற தூபியும் வித்தியாசமானது. அது எங்களுடைய இன அழிப்பை இல்லாமல் போக செய்கின்ற ஒரு முயற்சியாக இருக்கிறது.
இது நாங்கள் இனமாக அழிக்கப்பட்டோம் என்பதை உரத்து கூறுகின்ற ஒரு நிகழ்வாக இருக்கிறது. ஆகவே அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் செய்ய முனைந்தாலும் நாங்கள் எங்களுடைய உணர்வுகளின் அடி தளத்திலே இந்த இடத்திலே நிறுவுகின்ற நினைவுத்தூபி என்பது வருடாவருடம் காலாகாலமாக நாங்கள் அழிக்கப்பட்டோம் சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் தொகைவகையின்றி கொல்லப்பட்டோம் உரத்து கூறுகின்ற ஒரு விடயமாகவே நாங்கள் அதனை பார்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.
இன்றையநாளிலே கனடாவில் பிரண்டன் நகரில் பிரண்டன் மேஜருடைய ஒத்துழைப்பில் பிரமாண்டமான நினைவுத்தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட அந்த நிகழ்விலே நானும் பிரசன்னமாகி கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது.
இன்றைய நாளில் அதனை நிறைவேற்றி இருக்கிறார்கள் அந்த இடத்திலேயே அவர்களுக்கு இருக்கிற சுதந்திரம் நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கின்றது.
எமது மண்ணிலும் அவ்வாறான ஒரு நினைவுத் தூவியை நாங்கள் அமைக்க வேண்டும். இந்த இடத்திலே அதற்குரிய பல்வேறு விடயங்களை நாங்கள் உருவாக்க வேண்டும்.
அதற்கு இந்த காணியை உரியவர்களிடமிருந்து பெற்று மிக விரைவிலே தொடர்கின்ற ஆண்டுகளிற்குள்ளே இந்த இடத்திலே அதனை நினைவு கூரக்கூடிய வகையில் இங்கே கொல்லப்பட்ட மக்கள் இந்த இடத்திலே இறுதி யுத்தத்திலே இறந்து போனவர்களை நாங்கள் நினைவு கூருகின்ற வகையில் அவர்களுடைய பெயர்களையும் தாங்கி வரக்கூடிய வகையில் சில நினைவு விடயங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
ஆகவே அதற்கான காலம் எமக்கு நெருங்கி வருகின்றது. அதனை தொடர்கின்ற நாட்களிலேயே நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். அதற்கு பலருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
அதற்கு நாங்கள் ஆரம்பிக்கின்ற போது அத்தனை சிவில் சமூகங்களோடும், மக்களோடும் அரசியல் சமூகங்களோடும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுடைய ஒத்துழைப்போடும் இங்கு வாழ்கின்ற மக்களுடைய ஒத்துழைப்போடும் நினைவு முற்றத்தை நிச்சயமாக நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதை இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.