பட மூலாதாரம், Getty Images
புதன் கிழமையன்று தோன்றும் முழுநிலவானது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் கடைசி முழுநிலவாகும். (அங்கு இது பனிநிலவு என அழைக்கப்படுகிறது). பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள புகோளப் பகுதிகளுக்கும் இது கோடையின் கடைசி நிலவாக உள்ளது.
இந்த ஆண்டில் பிப்ரவரி 14ம் தேதியிலும் முழுநிலவாகவே இது காட்சியளிப்பது காதலர் தின மாலைக்கு இன்னமும் காதல் உணர்வைக் கொடுக்கும்.
பூமியின் எதிரெதிர் திசைகளில் சூரியனும் நிலவும் இருக்கும் போது முழுநிலவு தோன்றுகிறது. எனவே நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழுபகுதியும் ஒளிர்கிறது.
உலகமெங்கிலும் கலாசாரத்தையும், மரபையும் கட்டமைப்பதில் முழுநிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வான் நிகழ்வுடன் தொடர்புடைய சில கட்டுக் கதைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் அவற்றின் பொருள் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன.
நம் முன்னோர்களுக்கு முழு நிலவு முக்கியமானதாக இருந்தது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை கட்டங்கள் பண்டைய காலம் முதலே நேரத்தைக் கணிக்க பயன்படுகின்றன.
மேலே உள்ள படத்தில் இருக்கும் இஷாங்கோ எலும்பு, நவீன கால காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் 1957ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
பபூன் குரங்கின் தாடையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் இந்த எலும்பானது, சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னது என கணக்கிடப்பட்டுள்ளது. நாட்காட்டியின் ஆரம்ப வடிவமாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த புவியியலாளரால் தோண்டி எடுக்கப்பட்ட இந்த எலும்பின் மீது தனித்துவமான செதுக்கல் வேலைப்பாடுகள் உள்ளன. இவற்றில் சில ஒளி வட்டங்களின் வடிவிலும், இருள் வட்டங்களாகவும் அல்லது பகுதியளவு வட்டங்களாகவும் உள்ளன.
ஹார்வர்டு பல்கலைக் கழக தொல்பொருள் ஆய்வாளர் அலெக்சாண்டர் மார்ஷாக் இவை நிலவின் வெவ்வேறு கட்டங்களைக் குறிக்கலாம் என கருதினார், மேலும் இந்த எலும்பானது ஆறுமாதங்களைக் கொண்ட சந்திர நாட்காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்
இலையுதிர்க்கால சம இரவு பகலுக்கு அருகில் (செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபரின் முற்பகுதி) நிகழும் முழுநிலவுக்கு அறுவடை நிலவு என பெயரிடப்பட்டுள்ளது.
வருடத்தின் இந்த நேரத்தில் சூரியன் மறைந்த உடனேயே நிலவு உதிக்கும். அதாவது அறுவடை செய்யப்பட்ட பயிர்களை சேகரிக்கும் விவசாயிகள் சூரியன் மறைந்த பின்னரும் பின் மாலைப் பொழுதுகளில் நிலவொளியில் தங்களின் பணியைத் தொடர முடிந்தது. தற்போதுதான் தெருவிளக்குகளின் பயன்பாடு வந்துள்ளது.
முழுநிலவு நாட்களில் வரும் பண்டிகைகள்
பட மூலாதாரம், Getty Images
சீனாவில் இலையுதிர்க்காலத்தின் நடுப்பகுதியில் ஜோங்க்கி ஜீ விழா (நிலவு விழா) கொண்டாடப்படுகிறது. அறுவடை நிலவு நாளன்று நடைபெறும் இதற்காக பொது விடுமுறையும் விடப்படுகிறது. 3000 ஆண்டுகள் பழமையான இந்த விழா நிறைவான அறுவடையை எதிர்நோக்கி கொண்டாடப்படுகிறது.
இதே போன்று கொரியாவில் சுசியோக் அறுவடை நிலவுடன் சேர்த்து கொண்டாடப்படும் மூன்று நாள் நிகழ்வாகும். அறுவடையைக் கொண்டாடுவதற்காகவும், முன்னோர்களை வணங்குவதற்காகவும் குடும்பங்கள் ஒன்று கூடுகின்றன.
இந்து கலாச்சாரத்தில் பூர்ணிமா என அழைக்கப்படும் முழுநிலவு நாட்கள் விரதத்திற்காகவும், பிரார்த்தனைக்காகவும் அறியப்படுகின்றன. இந்து நாட்காட்டியில் புனித மாதமாக கருதப்படும் நவம்பரில் கார்த்திகை பவுர்ணமி கொண்டாடப்படுகிறது. இது திரிபுராசுரனை சிவன் வென்றதையும், மகா விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரதத்தையும் குறிக்கிறது. ஆறுகளில் நீராடுவது, அகல் விளக்குகளை ஏற்றுவது ஆகியவை இம்மாதத்திற்கான சடங்குகளாகும்.
முழுநிலவு நாளில் தொடங்கும் கும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.
பட மூலாதாரம், Getty Images
2,500 ஆண்டுகளுக்கு முன்னர் முழுநிலவு நாளில் புத்தர் பிறந்ததாக புத்த மதத்தினர் நம்புகின்றனர். புத்தர் ஞானம் பெற்றதும், மறைந்ததும் முழுநிலவு நாளில்தான் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்வுகள் புத்த பூர்ணிமா என்று பெயரிடப்பட்டு, ஏப்ரல் அல்லது மே மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகின்றன.
இலங்கையில் அனைத்து மாதங்களின் முழுநிலவு நாளும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போயா என பெயரிடப்பட்டுள்ள இந்நாட்களில் மது மற்றும் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
பாலி தீவில் முழுநிலவு நாள் பூர்ணமா என குறிப்பிடப்படுகிறது, அன்றைய நாளில் ஆண், பெண் தெய்வங்கள் பூமிக்கு இறங்கி வந்து தங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவார்கள் என நம்பப்படுகிறது. இந்த நாள் பிரார்த்தனை, தெய்வங்களுக்கான காணிக்கை செலுத்துதல் மற்றும் தோட்டங்களில் பழ மரங்களை நடுவதற்கான நேரமாக கருதப்படுகிறது.
முஸ்லிம்கள் முழுநிலவின் போது மூன்று நாட்கள் நோன்பிருக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்நாட்கள் வெண்மை நாட்கள் அல்லது அல்-அய்யாம் அல்-பித் என்று அறியப்படுகின்றன. இருண்ட இரவுகளை ஒளிரச் செய்ததற்காக அல்லாவுக்கு நன்றி தெரிவிக்க நபிகள் நாயகம் இந்த நாட்களில் நோன்பிருந்ததாக கூறப்படுகிறது.
கிறிஸ்தவ மதத்தில் வசந்த காலத்தின் சம இரவு நாளுக்குப் (Spring Equinox) பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
மெக்ஸிகோ மற்றும் வேறு சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் பூர்வீக அமெரிக்கர்களின் “நிலவு நடனம்” மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதில் பெண்கள் முழுநிலவில் ஒன்று கூடி மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நடனமாடி வழிபாடு நடத்துகின்றனர்.
முழுநிலவைப் பற்றிய கட்டுக்கதைகளும் புனைவுகளும்!
பட மூலாதாரம், Getty Images
முழுநிலவு சிலருக்கு சித்தக் கலக்கத்தை தூண்டுவதாக பண்டையக்காலம் முதலே ஐரோப்பாவில் கருதப்படுகிறது.
பைத்தியக்காரத்தனத்தைக் குறிக்கும் “Lunacy” என்ற ஆங்கில வார்த்தை நிலவைக் குறிக்கும் லத்தீன் வார்த்தையான “Luna” என்பதிலிருந்து பெறப்பட்டது.
கட்டுப்பாடற்ற நடத்தையை முழுநிலவு தூண்டுகிறது என்ற கருத்து, ஓநாயாக மாறும் மனிதர்கள் பற்றிய கட்டுக்கதைகளுக்கு வழிவகுத்தது.
இதன்படி முழுநிலவு நாளில் மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ஓநாயாக உருமாறி மக்களை அச்சுறுத்துவதாக கூறப்பட்டது.
கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாசிரியரான ஹெரோடோடஸ், சித்தியா (இன்றைய ரஷ்யா) என்ற பகுதியில் வசிக்கும் நியூரி பழங்குடிகள் பற்றி எழுதும் போது, ஒவ்வொரு ஆண்டும் பலநாட்கள் அந்த மக்கள் ஓநாயாக மாறினர் என குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் 15 மற்றும் 17ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பலர் ஓநாய்களாக இருந்ததாகக் கூறி விசாரிக்கப்பட்டனர்.
இந்த மோசமான காரணத்திற்காக அறியப்பட்ட வழக்குகளில் ஒன்று 1589ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த நில உரிமையாளர் ஒருவர் மீதானதாகும். பீட்டர் ஸ்டம்ப் என்ற அந்த நபர் ஓநாயிலிருந்து மனிதனாக மாறியதை தாங்கள் பார்த்ததாக உள்ளூர் வேட்டைக்காரர்கள் கூறினர். சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பீட்டர் தன்னிடம் ஒரு மாய பெல்ட் இருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி ஓநாயாக மாறியதாகவும், மனிதர்களை வேட்டையாடி தின்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.
அன்றாட வாழ்க்கையை முழுநிலவு எப்படி பாதிக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
முழுநிலவு தூக்கத்திற்கு இடையூறு செய்வதாக சிலர் நம்புகின்றனர்.
முழுநிலவு நாட்கள் அல்லது அதனையொட்டிய நாட்களில் மக்கள் படுக்கைக்கு சென்ற பின் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். குறைந்த நேரமே ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளனர், குறைவான நேரமே தூங்குகின்றனர். தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனான மெலடோனின் அவர்களில் உடலில் அன்றைய நாளில் குறைவாகவே உள்ளது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முழுநிலவு நாளில் திருப்திகரமான தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளனர். நிலவொளியால் எழுப்ப முடியாத அளவுக்கு முழுவதும் அடைக்கப்பட்ட அறைகளில் தூங்கியவர்கள் கூட இதனைத் தெரிவித்தனர்.
பல தோட்ட பராமரிப்பாளர்கள் முழுநிலவு நாளில் விதைகள் மற்றும் தளிர்களை நடுகின்றனர். பூர்ணமா நாளில் பாலி தீவினர் செய்வது போல) மண்ணின் தரத்தை நிலவு மேம்படுத்தும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முழுநிலவு நாளில் நிலவின் ஈர்ப்பு விசை புவியின் ஒரு புறத்தை தன்னை நோக்கி இழுக்கிறது. மறு புறம் சூரியனின் ஈர்ப்பு விசையும் இதே வேலையை செய்கிறது. இது நீர்ப்பரப்பில் தீவிரமான அலைகளை ஏற்படுத்துவதோடு, அதிக ஈரப்பதத்தை புவியின் மேற்பரப்பிற்கு இழுக்கும் எனவும் கருதப்படுகிறது.
பிரிட்டனின் பிராட்ஃபோர்டில் கடந்த 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, முழு நிலவு நாட்களில் விலங்குகள் கடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஆய்வின்படி 1997 மற்றும் 1999ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விலங்குகளால் கடிக்கப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முழுநிலவு நாட்களில் கணிசமாக அதிகரித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏமாற்றமளிக்கும் விதமாக, மனித ஓநாய்கள் கடித்ததாக எதுவும் பதிவாகவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.