• Thu. Dec 4th, 2025

24×7 Live News

Apdin News

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம் | எம்.ஏ.சுமந்திரன்

Byadmin

Dec 4, 2025


வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம்.சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது.

அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார். அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல்,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.

நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள்.

அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை.

மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும்,மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும்.உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது.

உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும். விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது.

செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும்.

இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம்.

சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள்.

அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என்றார்.

By admin