பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை ஒரு முக்கிய முடிவை எடுத்தது. வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து நீக்குமாறு அது உத்தரவிட்டது.
இதையடுத்து, பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரிலேயே முஸ்தஃபிசுர் ரஹ்மான் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக கேகேஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடந்த இந்த நிகழ்வுக்கு வங்கதேசம் தற்போது கடும் எதிர்வினையாற்றியுள்ளது. வங்கதேச விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகரான ஆசிஃப் நஸ்ருல், தனது நாட்டில் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பைத் தடுக்க வேண்டும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர, அடுத்த மாதம் அதாவது பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆசிஃப் நஸ்ருல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதேபோல், இந்தியாவிலும் பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
விளையாட்டை அரசியல் பதற்றங்களிலிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.
இது ஒரு விவேகமற்ற முடிவு என்றும், இதனால் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கருதுகிறார்.
இருப்பினும், பிசிசிஐ-யின் இந்த முடிவு நாட்டின் அனைத்து இந்துக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறி பாஜக தலைவர் சங்கீத் சோம் வரவேற்றுள்ளார்.
முன்னதாக, முஸ்தஃபிசுர் ரஹ்மானை கேகேஆர் அணியில் சேர்த்ததற்காக ஷாருக்கான் மீது இந்தியாவில் உள்ள வலதுசாரி அமைப்புகளும் சில பாஜக தலைவர்களும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா சனிக்கிழமை தெரிவித்தார்.
முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக மற்றொரு வீரரை அணியில் சேர்க்க கேகேஆர் அணிக்கு வாரியம் அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Munir UZ ZAMAN/AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty
ஆசிஃப் நஸ்ருல் என்ன கூறினார்?
வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல், பிசிசிஐ-யின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் வங்கதேசத்திற்கு வருகை தந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தவர்களில் ஆசிஃப் நஸ்ருலும் ஒருவர்.
தனது ஃபேஸ்புக் பதிவில் அவர், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர வகுப்புவாத குழுக்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டு, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் மற்றும் எதிர்க்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
மேலும் ஆசிஃப் நஸ்ருல் கூறுகையில், “விளையாட்டு அமைச்சகத்தின் பொறுப்புள்ள ஆலோசகர் என்ற முறையில், இந்த முழு விஷயம் குறித்தும் ஐசிசி-க்குத் தெரிவிக்குமாறு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் நான் கேட்டுக்கொண்டேன். ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்பட முடியாத போது, முழு வங்கதேச கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாதுகாப்பாக உணர முடியாது என்று வாரியம் கூறியது,” என்றார்.
வங்கதேச விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவர், ‘உலகக் கோப்பையில் வங்கதேசம் ஆடும் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஐசிசி-யிடம் கோரிக்கை விடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்’ என்று கூறினார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.
ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு குறித்து ஆசிஃப் நஸ்ருல் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, “வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை நிறுத்தும்படி தகவல் மற்றும் ஒலிபரப்பு ஆலோசகரைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
அவர் மேலும், “எந்தச் சூழ்நிலையிலும் வங்கதேச கிரிக்கெட், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வங்கதேசம் மீதான எந்த அவமானத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் இப்போது முடிந்துவிட்டன,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
‘விவேகமற்ற நடவடிக்கை’
வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹா தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில், “இது ஒரு மிகவும் முட்டாள்தனமான நடவடிக்கை. வங்கதேசத்துடன் நல்லுறவைப் பேணுவது இந்தியாவின் தேசிய நலனுக்கு முக்கியமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகள் இதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். ஆனால் இந்த முடிவு வங்கதேசத்தை பாகிஸ்தானுக்கு நெருக்கமாக்கக் கூடும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிசிசிஐ-யின் முடிவு பற்றி கேள்வி எழுப்பியுள்ள மூத்த பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டாக்கா சென்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் கைகுலுக்க முடிந்தால், ஏன் கிரிக்கெட் ஒரு வீரரால் இந்தியாவுக்கு வர முடியாது” என்று கூறியுள்ளார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தையும் பிசிசிஐ ரத்து செய்யுமா? முடிவெடுப்பதில் ஏன் நிலைத்தன்மை இல்லை? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டாக்கா சென்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் கைகுலுக்க முடிந்தால், ஏன் ஒரு வீரரால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது?” என்று எழுதினார்.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச லீக் டி20 தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
வெள்ளிக்கிழமை, எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய ஷகிப் அல் ஹசன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டம், இரண்டாவது தகுதிச் சுற்றில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, எம்ஐ எமிரேட்ஸ் அணி அந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவியது.
தனது ஆட்டத்திற்காக ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கூறுகையில், இந்த விவகாரத்தில் முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஷாருக்கான் மற்றும் கேகேஆர் அணி ஆகியோர் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அவர் தன எக்ஸ் பக்கத்தில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணியின் நட்சத்திர வீரராக ஷகிப் அல் ஹசன் இருக்கிறார் என்பதை ஒரு கிரிக்கெட் பத்திரிகையாளர் எனக்கு நினைவூட்டினார். வங்கதேச பிரீமியர் லீக்கை ஏற்பாடு செய்யும் குழுவில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அவர்களுக்கு டாக்காவில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முஸ்தஃபிசுர், ஷாருக்கான் மற்றும் கேகேஆர் ஆகியவை எளிதான இலக்குகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2025ஆம் ஆண்டை டாக்கா பயணத்துடன் நிறைவு செய்தார். டிசம்பர் 31-ஆம் தேதி வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜெய்சங்கர், டாக்கா சென்றார்.
தி இந்து நாளிதழின் தூதரக விவகாரங்கள் ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேசத்திற்குச் செல்லலாம், ஆனால் ஒரு கிரிக்கெட் வீரர் இந்தியாவில் விளையாட முடியாதா?” என்று கூறினார்.
“வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டாக்கா செல்லலாம், பிரதமர் மோதி வங்கதேசத் தலைவரைச் சந்திக்கலாம், ஆனால் ஒரு கிரிக்கெட் வீரர் இந்தியாவில் விளையாட முடியாது.”
பட மூலாதாரம், Getty Images
பிசிசிஐ மீது காங்கிரஸ் விமர்சனம்
சமீபத்தில், வங்கதேசத்தின் மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் படுகொலை செய்யப்பட்டதை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டித்திருந்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் உட்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், சிறுபான்மையினர் பிரச்னைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு வங்கதேசம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனுடன், இந்தியாவில் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட சில சமீபத்திய சம்பவங்கள் ‘கவலை அளிப்பதாக’ இருப்பதாகவும், இது குறித்து இந்தியா ‘பாரபட்சமற்ற விசாரணை’ நடத்தும் என்று நம்புவதாகவும் வங்கதேசம் கூறியிருந்தது.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் சர்தானா தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், பாஜக தலைவருமான சங்கீத் சிங் சோம், முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்த்ததற்காக ஷாருக்கானை ‘துரோகி’ என்று அழைத்திருந்தார்.
தேவகிநந்தன் தாக்கூர், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் வன்முறைகளைக் குறிப்பிட்டு, கேகேஆர் அணியின் முடிவை கேள்விக்குள்ளாக்கினார்.
ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிரிக்கெட்டைக் குறை கூறக்கூடாது என்று சசி தரூர் கூறினார்.
அவர், “முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஒரு கிரிக்கெட் வீரர், இதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வெறுப்புப் பேச்சையும் பேசியதாகவோ அல்லது எந்தத் தாக்குதலையும் ஆதரித்ததாகவோ அல்லது பாதுகாத்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் இணைப்பது தவறு,” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அரசு அமைச்சருமான பிரியங்க் கார்கேவும் பிசிசிஐ-யின் முடிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
“ஒரு அணியையும் அதன் உரிமையாளரையும் கேள்வி கேட்பதில் என்ன பயன்? இந்த விதிகள் பிசிசிஐ-யால் உருவாக்கப்பட்டவை. பிசிசிஐ, ஐசிசி மற்றும் உள்துறை அமைச்சகத்தை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?” என்று அவர் கூறினார்.
“பிசிசிஐ உண்மையிலேயே மக்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்பட்டால், ஐபிஎல் ஏலம் ஏன் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படுகிறது? கோவிட் காலத்தில் ஐபிஎல் ஏன் அபுதாபியில் நடத்தப்பட்டது? இங்கிலீஷ் பிரீமியர் லீக் அல்லது என்எஃப்எல் போன்றவை தங்கள் ஏலங்களை நாட்டிற்கு வெளியே நடத்துவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் கருத்து
பாஜக மூத்த தலைவரும் உத்தரப் பிரதேச மாநில அமைச்சருமான நரேந்திர காஷ்யப், பிசிசிஐ-யின் இந்த முடிவை வரவேற்றார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “பிசிசிஐ-யின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் மக்களுடைய மற்றும் நாட்டின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ளனர்,” என்று கூறினார்.
“நிராயுதபாணியான இந்துக்கள் கொல்லப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது திருப்தி அளிக்கிறது. இது குறித்து நாட்டின் பிரதமர் மோதி கூட கவலை தெரிவித்துள்ளார்.”
பட மூலாதாரம், Getty Images
ரூ. 9.20 கோடிக்கு வாங்கிய கேகேஆர்
முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஐபிஎல்-லில் எந்த வங்கதேச வீரரும் இடம்பெற மாட்டார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் இதற்கு முன்பு ஐபிஎல்-லில் விளையாடியுள்ளார்.
கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில், முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
முழு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கியிருந்தது.
ரஹ்மான் கடந்த ஆண்டும் ஐபிஎல்-லில் பங்கேற்றார். அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக 60 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு