பட மூலாதாரம், SUJIT JAISWAL/AFP via Getty Images
ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டது ஒரு சர்ச்சையாக மாறி வருகிறது.
இதன் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை, இந்து மதத் தலைவர்கள் மற்றும் ஒரு பாஜக தலைவர் ‘துரோகி’ என்று அழைத்துள்ளனர்.
அதே சமயம், ஷாருக்கானை ‘துரோகி’ என்று அழைப்பதற்குச் சில காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் மீதான தாக்குதல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்து மதகுரு ஜகத்குரு ராமபத்ராச்சார்யா, ஷாருக்கானை விமர்சித்ததுடன் கேகேஆர் அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானைச் சேர்த்தது ‘துரதிர்ஷ்டவசமானது’ என செய்தி நிறுவனமான பிடிஐ-யிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து ரம்பத்ராச்சாரியா கூறுகையில், “இது துரதிர்ஷ்டவசமானது… அவரது (ஷாருக்கான்) அணுகுமுறை எப்போதும் தேசத்துக்கு விரோதமாகவே இருந்து வருகிறது,” என்றார்.
இந்துக்களின் ஆதரவுடன் வங்கதேசம் உருவானது என்றும், ஆனால் இன்று அங்கே இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் ரம்பத்ராச்சாரியா தெரிவித்தார்.
பட மூலாதாரம், ANI
இந்து மதத் தலைவர்களும் பாஜக தலைவர் சங்கீத் சோமும் கூறியது என்ன?
முன்னதாக, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடப்பதாகக் கூறப்படும் வன்முறைகளைக் குறிப்பிட்டு, இந்து மத குரு தேவ்கிநந்தன் தாக்கூர் கே.கே.ஆர் அணியின் முடிவைக் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம், “வங்கதேசத்தில் இந்துக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்படுகின்றன. அவர்களின் தாய்மார்களும் மகள்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வளவு கொடூரமான கொலைகளைக் கண்ட பிறகும், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரைத் தனது அணியில் சேர்த்துக்கொள்ளும் வகையில் ஒருவரால் எப்படி இவ்வளவு இரக்கமற்றவராக இருக்க முடிகிறது? குறிப்பாகத் தன்னை ஒரு அணியின் உரிமையாளர் என்று சொல்லிக்கொள்பவர் எப்படி இவ்வாறு செய்யலாம்?”என்றார்.
ஷாருக்கானைச் சுட்டிக்காட்டிப் பேசிய தேவ்கிநந்தன் தாக்கூர், “இந்த நாடு உங்களை ஒரு ஹீரோவாகவும், சூப்பர் ஸ்டாராகவும் மாற்றியது. உங்களுக்குச் சொந்தமாக ஒரு கிரிக்கெட் அணியை வைத்திருக்கும் அளவுக்குப் பெரும் அதிகாரத்தைக் கொடுத்தது. அதற்கு முன்பு நீங்கள் யாராக இருந்தீர்கள்? தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ஒரு நாளைக்கு 500-1000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்கள்,” என்று கூறினார்.
கே.கே.ஆர் நிர்வாகத்திலிருந்து ‘அந்த கிரிக்கெட் வீரரை’ (முஸ்தபிசுர் ரஹ்மான்) நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தேவ்கிநந்தன் தாக்கூர், அவருக்கு வழங்கப்பட வேண்டிய 9.2 கோடி ரூபாயை வங்கதேசத்தில் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தின் சர்தானா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், பாஜக தலைவருமான சங்கீத் சிங் சோம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானைச் சேர்த்ததற்காக ஷாருக்கானை ‘துரோகி’ என்று குறிப்பிட்டார்.
மேலும் ஷாருக்கானுக்கு இந்தியாவில் வாழும் உரிமையே இல்லை என்றும் அவர் கூறினார்.
கே.கே.ஆர் அணியின் உரிமையாளர்களாக ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் உள்ளனர்.
“ஒருபுறம் வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், மறுபுறம் ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். ரஹ்மானை வாங்க ஷாருக்கான் 9 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இன்று வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன, பிரதமர் அவமதிக்கப்படுகிறார். ஆனால் ஷாருக்கான் போன்ற துரோகிகள் அவர்களுக்கு உதவ 9 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்,” என்றார் சங்கீத் சோம்.
காங்கிரஸ் தலைவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு
இந்தக் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களும், இஸ்லாமிய மத அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீனேட் கூறுகையில், “முதலில், வங்கதேச வீரர்களை அந்த ஏலப் பட்டியலில் சேர்த்தது யார் என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்வி பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகிய அமைப்புகளுக்கானது,” என்றார்.
மேலும், “ஐபிஎல் வீரர்கள் ஏலம் விடப்படும் பட்டியலில் வங்கதேச வீரர்களைச் சேர்த்தது யார் என்பதற்கு உள்துறை அமைச்சரின் மகன் ஜெய் ஷா பதிலளிக்க வேண்டும். அவர் தான் ஐசிசி-யின் தலைவர் மற்றும் உலகளவில் கிரிக்கெட் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பவர்,” என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஷாருக்கான் மீதான இந்தத் தாக்குதல் இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ‘துரோகி’ என்று அழைப்பது இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகும். வெறுப்பு உணர்வு ஒருபோதும் தேசப்பற்றை வரையறுக்க முடியாது. சமூகத்தில் விஷத்தைக் கலப்பதை ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.
இமாம் சங்கத்தின் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி கூறுகையில், இஸ்லாமிய பெயர்கள் சம்பந்தப்படும் போதெல்லாம் இத்தகைய போராட்டங்கள் வெடிப்பது வழக்கமாகிவிட்டது என்று கூறினார்.
அரசியலமைப்பு மற்றும் விளையாட்டு விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட ஒரு முறையான முடிவை எதிர்க்க யாருக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டில், எதையும் யோசிக்காமல், அரசியல் சாசனத்தைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டது. ஒரு இஸ்லாமியரின் பெயர் வரும்போதெல்லாம், எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது. ஷாருக்கான் ஒரு இஸ்லாமியர், அவர் ஏலத்தில் எடுத்த வங்கதேச கிரிக்கெட் வீரரும் ஒரு இஸ்லாமியர். அதனால்தான் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏனெனில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு இங்கே உடனடியாக வெளிப்படுகிறது”
அகில இந்திய இஸ்லாம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்திய இஸ்லாமியர்களும் சமமான அக்கறை கொண்டுள்ளனர், ஆனால் ஷாருக்கானின் முடிவை “தேசத்துரோகம்” என்று கூற முடியாது என்றார்.
பட மூலாதாரம், Getty Images
முஸ்தாபிசுர் ரஹ்மான் யார்?
முஸ்தபிசுர், வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஆவார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 177 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 158 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் முஸ்தபிசுர் ரஹ்மான் நன்கு விளையாடியுள்ளார். அதனால்தான் 30 வயதான இவரை கே.கே.ஆர் அணி ஏலத்தில் எடுத்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு