படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம்
பிகாரில் திங்கள்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவரின் ஹிஜாபை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கழற்றிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிதிஷ் குமாரைக் குறிவைக்கும் எதிர்க்கட்சிகள், அவரது மனநிலை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நிதிஷ் குமார் ஒரு முஸ்லிம் பெண் ஆயுஷ் மருத்துவரிடம் பணி நியமனக் கடிதத்தை கொடுக்கும் போது, அவர் முகத்தில் இருந்து ஹிஜாபை இழுப்பது போல் தெரிகிறது.
நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதலமைச்சரைத் தடுக்க முயல்வது வீடியோவில் தெரிகிறது. ஆனால், பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமாருடன் சேர்ந்து சிரிப்பதையும் காண முடிகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட அந்த மருத்துவர், ஹிஜாப் அணிந்து நியமனக் கடிதத்தைப் பெற வந்தார். அப்போது, மேடையில் நின்றிருந்த 75 வயதான முதல்வர் நிதிஷ்குமார், “என்ன இது?” என்று கூறி அவரது ஹிஜாபைக் கீழே இறக்கினார்.
ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவின் புகைப்படங்களை நிதிஷ் குமாரின் அதிகாரப்பூர்வ கணக்கு பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படங்களுடன், “இன்று, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள ‘சம்வாத்’ என்ற இடத்தில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவில் நான் கலந்துகொண்டேன்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
பட மூலாதாரம், @NitishKumar
படக்குறிப்பு, நியமனக் கடிதங்களுடன் ஆயுஷ் மருத்துவர்கள்
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோவைப் பகிர்ந்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் நிதிஷ் குமாரை குறிவைத்தன.
காங்கிரஸ் தனது முந்தைய கணக்கிலிருந்து வீடியோவை வெளியிட்டு, “இவர் பிகார் முதல்வர் நிதிஷ் குமார். அவரது வெட்கமின்மையை பாருங்கள். ஒரு பெண் மருத்துவர் தனது நியமனக் கடிதத்தை வாங்க வந்தபோது, நிதிஷ் குமார் அவருடைய ஹிஜாபை கீழே இறக்கினார்” என்று கூறியது.
“பிகாரில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் வெளிப்படையாகவே இதுபோன்ற நடத்தையில் ஈடுபடுகிறார். மாநிலத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த இழிவான செயலுக்காக நிதிஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அநாகரிக செயல் மன்னிக்க முடியாதது” என்று காங்கிரஸ் எழுதியது.
பிகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம், “நிதிஷ் ஜி-க்கு என்ன நேர்ந்தது? அவரது மனநிலை பரிதாபகரமான நிலையை எட்டியுள்ளது…” என்று எழுதியது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் பேசுகையில், எந்தவொரு குறிப்பிட்ட வீடியோ காட்சியையும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கூறினார்.
“பிகாரில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக நிதிஷ்குமார் நிறைய செய்துள்ளார்” என்று நீரஜ் குமார் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பேவ்பந்து மதகுரு காரி இஷாக் கோரா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேச மக்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணின் முகத்திரையை நிதீஷ் குமார் கழற்றியிருப்பது தெரிகிறது. ஒருபுறம் பெண்களின் மரியாதையைப் பற்றிப் பேசுகிறீர்கள், மறுபுறம் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாட்டு பெண்களிடமும் நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொது நிகழ்ச்சிகளில் நிதிஷ் குமாரின் நடத்தை சமீப காலமாக பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானிலும் விவாதம்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பற்றி கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். நிதிஷ் குமாரின் வீடியோவைப் பகிர்ந்த பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர் அம்மார் மசூத், “இந்தியாவில் முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சோகமான உதாரணம். பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரிடம் பணி நியமனக் கடிதத்தை வழங்கும்போது அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக கழற்றியிருக்கிறார்” என்று கூறினார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் மொயீத் பிர்சாதா எக்ஸ் தளத்தில், “இது ஆணாதிக்கத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான கலாசார மோதலை பல நிலைகளில் காட்டுகிறது?” என்று எழுதியிருக்கிறார்.
சமீபத்திய ஆண்டுகளில், பொதுக் கூட்டங்களிலும், சட்டப் பேரவையிலும் நிதிஷ் குமாரின் நடத்தை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, ஒரு மதரஸா நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் தொப்பி அணிய மறுத்த வீடியோ வைரலானது.
2013-ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்தபோது, திலகம் மற்றும் தொப்பி இரண்டையும் அணிந்திருப்பதாகக் கூறி பாஜக-வை நிதிஷ்குமார் விமர்சித்திருந்தார். அப்போது இப்தார் விருந்துகளில் தொப்பியை அவர் வெளிப்படையாகவே அணிந்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரியின் தலையில் நிதிஷ்குமார் சிறிய பூந்தொட்டியை வைத்தார்.
இந்த ஆண்டு ஜனவரியில், மகாத்மா காந்தியின் 77வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, திடீரென அவர் கைதட்டத் தொடங்கினார்.
மார்ச் மாதம், தேசிய கீதம் பாடப்பட்டுக் கொண்டிருந்த போது அவர் தனது முதன்மைச் செயலாளரிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு தர்பங்காவில் பிரதமர் நரேந்திர மோதியின் பாதங்களை அவர் தொட முயன்றார்.