• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு ‘கலைத்துறை வித்தகர் விருது’ – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | CM MK Stalin gave kalaithurai vithagar viruthu to singer Susheela and Kavingar Mu Metha

Byadmin

Oct 4, 2024


சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.4) தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை கவிஞர் மு. மேத்தா-வுக்கும், பின்னணிப் பாடகி பி. சுசிலா-வுக்கும் வழங்கி சிறப்பித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசின் சார்பில், மறைந்த முதல்வர் கருணாந்தியின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளான்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ம் ஆண்டுக்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத் துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ்-க்கு கடந்த 3.6.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட தமிழக முதல்வர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலா-வுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தா-வுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, தமிழக முதல்வர் இன்றைய தினம், கருணாநிதி நூற்றாண்டு நினைவாக கவிஞர் திரு. மு. மேத்தா-வுக்கும், பின்னணி பாடகி பி.சுசிலா-வுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin