பட மூலாதாரம், Getty Images
ஈரோட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வாழைப் பழம் சாப்பிடும்போது, அது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 4 வயது சிறுவன், மாத்திரை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான்.
இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், இதற்குரிய முதலுதவியை உடனே செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர்.
மேலும், குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக உணவை ஊட்ட வேண்டுமென அறிவுறுத்தும் மருத்துவர்கள், யாராயினும் உணவை நன்கு மென்று கவனமாக உண்பதோடு, சாப்பிடும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த சிறுவன்
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதிக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருந்தனர்.
கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு, தமது இரு குழந்தைகளுக்கும் மகாலட்சுமி வாழைப் பழத்தை ஊட்டியுள்ளார். அதைச் சாப்பிடும்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பெற்றோர் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் இது குறித்து விளக்கிய ஈரோடு அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சசிரேகா, ”அந்தச் சிறுவனை வீட்டிலிருந்து 20 நிமிடங்களில் இங்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இங்கு வரும்போதே உயிர் இல்லை. உணவுக் குழாய்க்குப் பதிலாக மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சென்றதால் ஆக்சிஜன் நுரையீரலுக்குப் போகாமல் சிறுவன் மூச்சுவிடச் சிரமப்பட்டுள்ளான்” என்று தெரிவித்தார்.
இந்தக் காரணத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறிய அவர், “உடற்கூராய்வு முடிந்துவிட்டது. சிறுவனுக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லை. சிறுவனின் வாய்க்குள் வாழைப் பழம் அடைத்து இருந்ததைக் கண்டறிந்தோம்” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
”இதுபோன்ற நேரங்களில் உடனடியாக முதலுதவி செய்வதுதான் உயிரைக் காக்க ஒரே வழி. இந்தச் சிறுவனுக்கே முதலில் முதலுதவியைச் செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். அப்படியில்லாமல், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வரை மூச்சுக்குழாய் அடைபட்டே இருந்தால், எந்த வயதினராக இருந்தாலும், காப்பாற்றுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு,” என்று விளக்கினார் மருத்துவர் சசிரேகா.
அதேவேளையில், உணவுக் குழாயில் பல்வேறு பொருட்கள் சிக்கியதாக வந்தவர்களை, சிறு சிறு சிகிச்சை முறைகள் மூலமாகவும், அறுவை சிகிச்சைகள் மூலமாகவும் காப்பாற்றியுள்ளதாக, ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லாமல் தடுப்பது எப்படி?
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரையை விழுங்கும்போது, அதுவும் இதேபோல தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
மாத்திரை, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கும்போது, சிறுவர்கள் உயிரிழப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை எப்படிக் கையாள்வது என்ற விழிப்புணர்வு இருந்தால் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசியபோது, “எந்த வயதினராக இருந்தாலும், உணவுக் குழாயில் செல்ல வேண்டிய உணவு மூச்சுக் குழாய்க்குச் செல்லும்போது, இந்த விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக” கூறுகிறார். மேலும், இதற்குக் கால தாமதமின்றி உரிய முதலுதவியை உடனே செய்துவிட்டால் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மருத்துவ ஆராய்ச்சியாளர் எரின் காலமன் எழுதியுள்ள கட்டுரையின்படி, மனித உடலில் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் என கழுத்து மற்றும் மார்பு வழியாக இரு குழாய்கள் செல்கின்றன. அதில் உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு, காற்றுப் பாதையில் செல்வதே சுவாசம் தடைபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார்.
மனித உடலின் இயக்கவியல் குறித்து விளக்கிய மருத்துவர் பாலகிருஷ்ணன், “மூச்சுக்குழாய் எப்போதும் திறந்திருக்கும், உணவுக் குழாய் மூடித்தான் இருக்கும். உணவு உள்ளே செல்லும்போதுதான் அது திறக்கப்படும், அப்போது மூச்சுக் குழாய் மூடிக்கொள்ளும்” என்றார்.
“ஆனால், உணவு வருவதை மூளை அறிவுறுத்தி, உணவுக் குழாய் திறக்கப்படுவதற்குள் அவசர அவசரமாக விழுங்கினால், மூடாமல் திறந்திருக்கும் மூச்சுக் குழாய்க்குள் உணவு சென்றுவிடும். அதனால்தான் சுவாசம் பாதிக்கப்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
அதோடு, குழந்தை முதலில் ஊட்டப்பட்ட வாழைப்பழத் துண்டினை விழுங்குவதற்குள் மேன்மேலும் பழத்தைக் கொடுக்கையில், அவற்றை மொத்தமாக விழுங்க எத்தனிக்கையில், இத்தகைய விபரீதம் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் கவனத்துடன், சிறு சிறு அளவில் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் மருத்துவர் சசிரேகா. அதோடு, பல குழந்தைகள், நாணயம், மோமோஸ், பட்டாணி, பாதாம் போன்றவற்றை விழுங்கிவிட்டதாக அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும், ”வேகமாகச் சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது ஆகிய இரண்டு காரணங்களால்தான் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கிறார்கள். எனவே, அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம்” என்று கூறுகிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன்.
இவை மட்டுமின்றி, சிக்கன் பீஸ் உள்படப் பசை போன்ற தன்மையைக் கொண்ட உணவுகள் தொண்டைக்குள் ஒட்டிக் கொள்வதால், தசைகளின் செயல்பாட்டு நேரம் மாறி, உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் விவரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
டிவி, போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது ஆபத்து
யாராக இருந்தாலும் சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் தர்மேந்திரா. “சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் கவனமின்றிச் சாப்பிடும்போது, உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு மூச்சுக்குழாய்க்குச் சென்று புரையேறுதல் நடக்க வாய்ப்புள்ளது” என்கிறார் அவர்.
மேலும், எந்த உணவையும் நன்கு மென்று விழுங்கச் சொல்லி, குழந்தைகளைப் பழக்குவதும் மிக மிக அவசியமென்று அவர் வலியுறுத்துகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”வாழைப்பழம் அவ்வளவு எளிதில் அடைக்க வாய்ப்பில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடும்போது, கவனம் சிதறி மூச்சுக்குழாய் திறந்து அதில் அடைத்திருக்கலாம்.
குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும்” என்கிறார்.
உணவுக் குழாயில் சிக்குவதை சிறு கால அவகாசத்திற்கு உள்ளாகவே எடுத்துவிடலாம் என்று கூறும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் பி.எஸ்.ராஜன், மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிவிட்டால் சில விநாடிகளுக்குள் முதலுதவி தராவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவது எப்படி?
மாதக்கணக்கில் இருமிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, அதன் மூச்சுக் குழாய்க்குள் பட்டாணி இருந்ததைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சையில் அகற்றியதாகச் சொல்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன்.
பல்வேறு மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு பட்டாணி, பாதாம் போன்றவற்றை உணவாகக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறும் அவர், குழந்தைகள் பொம்மைகளில் (Toys) பயன்படுத்தப்படும் பட்டன் பேட்டரிகளையும் வெளிநாடுகளில் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார்.
”இருப்பதிலேயே பொம்மைகளில் பயன்படுத்தும் பட்டன் வடிவிலான பேட்டரிதான் மிக ஆபத்தானது. அதை விழுங்கிய பல குழந்தைகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். விழுங்கிய ஒரு மணிநேரத்தில் இருந்து அதிலுள்ள ரசாயனம் கசியத் தொடங்கிவிடும். அது குடல் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால் நம் நாட்டிலும் அது தடை செய்யப்பட வேண்டும்” என்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன்.

இதுபோல, சாப்பிடும்போது உணவுப் பொருள் தொண்டையில் சிக்கினாலோ அல்லது வேறு ஏதேனும் பொருளை குழந்தைகள் வாயில் போட்டு அது சிக்கிக் கொண்டாலோ, உடனடியாக ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும்.
வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்” என்று விவரித்தார்.
ஆனால், சிறு குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், அவர்களைத் தங்கள் தொடை மீது வயிறு அழுத்தியிருப்பது போலப் படுக்க வைத்து, முதுகில் தட்ட வேண்டுமென்று மருத்துவர் அருண்குமார் விளக்கினார்.
இந்த மிகவும் எளிமையான முதலுதவி முறை பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுவதாகத் தெரிவித்த அவர், “பொது மக்களுக்கும் அதைக் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு