• Wed. May 21st, 2025

24×7 Live News

Apdin News

மூடியுள்ள கோயில்களை திறந்து ஒருகால பூஜையாவது நடத்த வேண்டும்: அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் | Closed temples should be opened and at least one puja should be held: HC

Byadmin

May 21, 2025


மூடிக்கிடக்கும் கோயில்களை திறந்து, தினமும் ஒருகால பூஜையாவது நடத்த வேண்டும் என்று அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான திண்டீஸ்வரர், வீரராகவ விநாயகர் கோயில் உள்ளது. பூஜைகள் நடைபெறாமல் இந்த கோயில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘பூஜை நடத்த வசதி இல்லாத கோயில்களில், தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்கீழ், மூடிக்கிடக்கும் திண்டீஸ்வரர் கோயிலை திறந்து, நிர்வாகிகளை நியமித்து, தினமும் ஒருகால பூஜையாவது நடத்த அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூடிக்கிடக்கும் அலங்கியம் திண்டீஸ்வரர் கோயிலை திறந்து தினமும் பூஜை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அறநிலைய துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘மூடப்பட்டுள்ள கோயில்களை திறந்து ஒருகால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, இதுபோல மூடிக்கிடக்கும் கோயில்களை திறந்து, குறைந்தபட்சம் ஒருகால பூஜையாவது மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூஜை நேரங்களில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில் கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும்’’ என அறநிலைய துறைக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.



By admin