7
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று காலை கார் – ரிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
அதேவேளை, காரில் பயணித்த மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியரான ஹினாயத்துல்லாஹ் ஜெம்சித் (வயது 33) என்பவர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் (வயது 25) எனத் தெரியவருகின்றது. ரிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
காரில் பயணித்தவர்கள் தோப்பூரில் இருந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாகச் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த ரிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.