பட மூலாதாரம், EPA
மூன்றாவது முறையாக அதிபராக வேண்டும் என்று ஆசைப்படுவது பற்றி தான் ‘நகைச்சுவையாகக் குறிப்பிடவில்லை’ என்று கூறியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
‘எந்த நபரும்…. இரண்டாவது முறைக்குப் பிறகு தேர்வாகக்கூடாது,” என்று அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் அதற்கு வேறு வழிகள் இருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறார்கள்.
மூன்றாவது ஆட்சிக்காலத்தைப் பற்றி டிரம்ப் பேசுவது ஏன்?
மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி என்பிசி ஊடகத்துக்குக் கொடுத்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் ”அதற்கென உள்ள சில வழிமுறைகளின் மூலம் அதைச் செய்ய முடியும்”, என்று கூறினார்.
”நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை… நிறைய பேர் நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்றவர் தொடர்ந்து, ”ஆனால் நாம் அதற்கு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும் என்று சொல்கிறேன். உங்களுக்கே தெரியும் இது நிர்வாகத்தின் ஆரம்பகாலம்தான்.” என கூறினார்.
இரண்டாவது பதவிக்காலம் முடியும் சமயத்தில் 82 வயதை நிறைவு செய்யப் போகும் டிரம்பிடம், ‘இந்த நாட்டின் மிகக் கடினமான வேலையில்’ தொடர்ந்து சேவை புரிய விருப்பமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு, ”எனக்கு வேலை செய்யப் பிடிக்கும்” என்று அவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக அவர் கருத்து சொல்வது இது முதன்முறையல்ல. ஜனவரி மாதம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, ”ஒருமுறை அல்ல அதற்கும் அதிகமாக இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு முறைகள் சேவை செய்ய முடிவது என் வாழ்வில் மிகுந்த பெருமைக்குரிய விஷயம்”, என்று குறிப்பிட்டார். ஆனால் பின்னர் இது ”பொய்யான செய்தி ஊடகங்களுக்காக” சொல்லப்பட்ட நகைச்சுவை என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?
வெளிப்பார்வைக்குப் பார்க்கப் போனால், யாரும் மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. அதன் 22வது சட்டத்திருத்தம்:
“அதிபர் பதவிக்கு யாரும் இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது, அதோடு வேறு ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட அல்லது அதிபராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட யாரும், இரண்டு வருட காலத்துக்கு மேல் பதவியில் இருந்தால், அவர்கள் ஒருமுறைக்கு மேல் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது”, என்கிறது.
அதாவது இடைக்கால அதிபராக பதவி வகிப்பவர்களும், 2 ஆண்டைக் கடந்து பதவியில் இருந்தால், மேலும் ஒருமுறை மட்டுமே நேரடியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு கிடைக்கும்.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டுமென்றால் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், அதோடு நாட்டின் மாகாண அரசுகளிடம் இருந்து நான்கில் மூன்று பங்கு ஆதரவும் வேண்டும்.
டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தினாலும் தேவையான பெரும்பான்மை அதற்கு இல்லை. அதோடு மாகாண அவைகளில் 50ல் 18 ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
டிரம்ப் எப்படி மூன்றாவது முறையாக அதிபராக முடியும்?
பட மூலாதாரம், Getty Images
அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்றத்துக்கு பதில் தெரியாத ஒரு ஓட்டை இருப்பதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
22ம் சட்டத்திருத்தம் ஒரு நபர் இரண்டு ஆட்சிக்காலத்துக்கும் மேல் ‘தேர்வாவதைத்’ தான் தடை செய்கிறதே தவிர – ‘பின்தொடர்வதைப்’ பற்றி அத்திருத்தம் எதுவும் குறிப்பிடவில்லை என்று வாதிடுகிறார்கள்.
இந்தக் கோட்பாட்டின்படி இன்னொரு வேட்பாளருக்கு டிரம்ப் துணை அதிபராக இருக்கலாம் – 2028 தேர்தலின்போது – இப்போது அவருக்கு துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸுக்குக் கூட.
அவர்கள் வென்றால் அந்த வேட்பாளர் அதிபராக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் மற்றும் உடனே ராஜினாமாவும் செய்யலாம் – அவரைத் தொடர்ந்து டிரம்ப் பதவியேற்க வழிவகுக்கலாம்.
டிரம்ப்பின் முன்னால் அறிவுரையாளர்களில் முக்கியமானவரான பாட்காஸ்டர் ஸ்டீவ் பனோன், டிரம்ப் ”மறுபடி போட்டியிட்டு மறுபடி ஜெயிப்பார்” என்று நம்புவதாகவும், அதை எப்படிச் செய்வது என்பதற்கு ‘சில மாற்றுமுறைகளும்’ இருக்கிறது என்றும் கூறினார்.
மக்களைவையில் டென்னிஸி மாகாணப் பிரதிநிதியாக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆண்டி ஆகிள்ஸ் ஒருவர் மூன்று முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை ஜனவரியில் முன்மொழிந்தார். இதன்படி அது தொடர்ச்சியான பதவிக்காலமாக இல்லாத பட்சத்தில் மூன்றாவது முறை தேர்வாகலாம்.
இதன்மூலம் இப்போது உயிரோடு இருப்பவர்களில் இதற்குத் தகுதியான ஒரே நபர் டிரம்பாகத்தான் இருக்க முடியும் என்பதே இதன் பொருள் – பராக் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய அனைவரும் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார்கள் – டிரம்ப் மட்டும்தான் 2016ல் வென்றார், 2020ல் தோற்றார் மற்றும் மறுபடி 2024 வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தொடர்பான ஆகிள்ஸின் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைவுதானென்றாலும் அதைப் பற்றி மக்களைப் பேச வைத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் மூன்றாவது ஆட்சிக்காலத்தை யார் எதிர்க்கிறார்கள்?
ஜனநாயகக் கட்சியினருக்கு ஆழமான எதிர்ப்புகள் உள்ளன.
”இந்த அரசைத் தன்வயப்படுத்தி, ஜனநாயகத்தைக் குலைப்பதற்கான அவரது முயற்சியில் இது இன்னொரு உச்சம்,” என்று கூறியிருக்கிறார் நியூயார்க் பிரதிநியான டேனியல் கோல்டுமேன். இவர் டிரம்பின் முதல் ஆட்சிக்கலைப்புக்கான வழக்கில் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.
” நாடாளுமன்றத்தில் இருக்கும் குடியரசுக்கட்சிப் பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறார்கள் என்றால், டிரம்பின் ‘மூன்றாவது ஆட்சிக்கால விருப்பங்கள்’ பற்றி வெளிப்படையாக எதிர்த்துப் பேசுவார்கள்”.
டிரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்களில் பலருக்கும் இது மோசமான யோசனையாகத் தோன்றுகிறது.
டிரம்ப் மூன்றாவது முறையாக வெள்ளை மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தான் ஆதரிக்கப்போவதில்லை என ஓக்லஹோமா மாகாணத்தின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்வெய்ன் முல்லின் பிப்ரவரியில் குறிப்பிட்டார்.
”முதலில் நான் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தப்போவதில்லை, அமெரிக்க மக்கள் அப்படிச் செய்யத் தேர்ந்தெடுத்தால் தவிர”, என்று என்பிசியிடம் தெரிவித்தார் முல்லின்.
சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
நாட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தேர்தல் சட்டப் பேராசிரியரான டெரெக் முல்லர், அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது சட்டத்திருத்தம், ”அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியில்லாத எந்த நபரும் அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பதற்கும் தகுதியில்லை,” என்று குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார்.
அவர் பார்வையின்படி இரண்டுமுறை பதவிக்குப் போட்டியிடுவதே ஒருவர் துணை அதிபராகப் போட்டியிடுவதையும் தகுதி இழக்கச் செய்கிறது.
”எத்தனை முறை அதிபர் ஆகலாம் என்பதை எந்த ஒரு வினோத உத்தியின் மூலமும் மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்கிறார் அவர்.
பாஸ்டனின் வடகிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அரசியலமைப்புச் சட்ட பேராசிரியரான ஜெரிமி பால், மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ‘எந்த ஒரு நம்பத்தகுந்த சட்ட வாதமும் இல்லை’ என்று சிபிஎஸ் நியூஸ் – இடம் பேசியபோது தெரிவித்தார்.
இரு முறைக்கு மேல் தேர்வான ஒரே அமெரிக்க அதிபர்
பட மூலாதாரம், Getty Images
ஃப்ராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தனது நான்காவது பதவிக்காலம் தொடங்கி மூன்றாவது மாதம் முடிந்த நிலையில் 1945ம் வருடம் ஏப்ரல் மாதம் அவர் உயிரிழந்தார்.
அவர் ஆட்சிக்காலத்தின் முக்கியப் பகுதிகளான பெரும் பொருளாதார வீழ்ச்சியும், இரண்டாம் உலகப்போரும் அவர் அதிபர் காலம் தொடர்ந்ததற்கான காரணிகளாகக் கூறப்படுகின்றன.
அதுவரை அதிபர்கள் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது என்பது சட்டமாக எழுதப்படவில்லை – மாறாக 1796ல் ஜார்ஜ் வாஷிங்டன் மூன்றாவது முறை பதவி ஏற்க மறுத்ததன் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்ட ஒரு சடங்காகத்தான் இருந்தது.
ரூஸ்வெல்ட் தொடர்ந்து பதவியில் இருந்ததால் இந்தச் சடங்கை சட்டமாக, 22வது சட்டத்திருத்தமாக 1951ல் நிறைவேற்றினார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு