“மெக்காலே கல்வி அமைப்பு பிரிட்டன் காலனித்துவ அடிமை மனநிலையை இந்தியர்கள் மத்தியில் விதைத்தது. இந்த அடிமை மனநிலை அடுத்த 10 வருடங்களில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்,” என பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் பேசியிருந்தார்.
அதன் பிறகு மெக்காலே பற்றிய விவாதங்கள் கவனம் பெற்றன. யார் இந்த மெக்காலே? இந்திய கல்வி அமைப்பில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் என்ன? பிரதமர் மோதி அவரைப் பற்றி குறிப்பிட்டது ஏன்?
மோதி கூறியது என்ன?
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனரான ராம்நாத் கோயங்காவின் நினைவாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஆறாவது ஸ்மிரிதி வியாகனா நிகழ்ச்சியில் பேசுகின்றபோது இந்த கருத்தை தெரிவித்திருந்தார் பிரதமர் மோதி.
“மெக்காலே இந்தியர்களின் மனங்களை பிரிட்டன்மயமாக்கினார். பண்டைய இந்திய கல்வி அமைப்பை அவர் முற்றிலுமாக அழித்தார். பிரிட்டன் மொழி மற்றும் சிந்தனையை இந்தியாவில் அறிமுகம் செய்தார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த இந்திய அறிவு, அறிவியல், கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறை அழிக்கப்பட்டது.” என்றார் மோதி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரிட்டன் சித்தாந்தம் பற்றி பிரதமர் மோதி பேசியிருந்தார்
“பிரிட்டிஷார் சொல்வதைப் போல இந்தியர்கள் வாழத் தொடங்கினர். இதனால் நம்முடையது என்னவென்பதை நாம் மறந்துவிட்டோம். நம்முடைய கலாசாரம், பாரம்பரியங்கள் மற்றும் கல்வியை புகழாமல் குறைவாக பார்க்கத் தொடங்கிவிட்டோம். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணங்கள், சரக்குகள், வசதிகள் மற்றும் மாதிரிகளின்படி நாம் வாழத் தொடங்கினோம். மற்றவர்களுடைய கருத்துக்கள் முதன்மையானது என சிந்திக்கத் தொடங்கினோம்.” எனத் தெரிவித்தார் மோதி.
“இவ்வாறு சுதேசியத்தை நிராகரிக்கும் அணுகுமுறை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. இந்த அடிமை முறை 1835-ஆம் ஆண்டு மெக்காலே-வால் தொடங்கப்பட்டது. 2035-இல் இது 200 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே அடுத்த 10 ஆண்டுகளில் நாம் இந்த மனநிலையிலிருந்து விடுபட வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.
யார் இந்த மெக்காலே?
மராத்தி தகவல் களஞ்சியத்தில் கொடுத்துள்ள தகவலின்படி, பிரிட்டன் அதிகாரியான தாமஸ் பாபிங்டன் மெக்காலே 1832-ஆம் ஆண்டு இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
அவர் இந்தியா பற்றிய பல அம்சங்களை நன்றாக கற்றுத் தேர்ந்தார்.
அதன் பின்னர் இந்திய சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினராக 1834 – 1838 வரை இந்தியாவில் வாழ்ந்தார். இந்தியாவில் இருந்தபோது அவருக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவை இந்தியர்களின் கல்விக்காக ஒரு கல்வி அமைப்பை உருவாக்குவதும், இந்தியாவிற்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தை உருவாக்குவதும் ஆகும்.
‘இந்திய தண்டனை சட்டத்தை (தற்போது மாற்றப்பட்டுள்ளது)’ உருவாக்கும் பணி மெக்காலேவால் மேற்கொள்ளப்பட்டது. 1813-ஆம் ஆண்டு இந்தியாவில் கல்வி தன்மை பற்றி பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றியிருந்தது.
அந்தச் சட்டத்தின்படி மிஷனரிகள் இந்தியாவில் தங்கி இந்திய மக்களுக்கு சமயக் கல்வி மற்றும் மேற்கத்திய கல்வி வழங்க அனுமதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மெக்காலே
எனினும், இந்த ஷரத்து தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பெட்டிங்கின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரான மெக்காலே, 1835-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி அவரிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தார்.
அது மெக்காலேவின் கல்வி மீதான குறிப்பு என அழைக்கப்பட்டது.
இந்தியாவில் தனது பணியை முடித்த பிறகு 1838-ஆம் ஆண்டு மெக்காலே பிரிட்டன் திரும்பினார். அங்கு சென்ற பிறகு பிரிட்டன் வரலாற்றை எழுதும் பணியைத் தொடங்கினார்.
மெக்காலே இந்தியர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதில் இந்தியர்களுக்கு மேற்கத்திய இலக்கியமும், இலக்கிய அறிவும் கற்பிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதில் ஆங்கில வழியில் கல்வி இருக்க வேண்டும் என்றும் சமஸ்கிருதம் மற்றும் அரபிக் மொழியை கற்பிக்கும் நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, மெக்காலே இந்தியர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்
இந்திய கல்வி அமைப்பில் மெக்காலே செய்த மாற்றங்கள்
இந்தியாவில் மேற்கத்திய இலக்கியம், ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து சமஸ்கிருதம் மற்றும் அரபிக் மொழி கல்வி நிறுவனங்களை படிப்படியாக மூட வேண்டும் என மெக்காலே பரிந்துரைத்தாக மராத்தி தகவல் களஞ்சியம் தெரிவிக்கிறது.
1835-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?
இந்தியர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியின் மூலம் மேற்கத்திய இலக்கியம் மற்றும் அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும்
சமஸ்கிருதம் மற்றும் அரபிக் மொழியை கற்பிக்கும் பள்ளிகள் மூடப்படக்கூடாது. எனினும் புதிய பள்ளிகள் தொடங்குவதற்கான நிதியுதவியும் மாணவர்களுக்கான உதவித் தொகையும் வழங்கப்படக்கூடாது.
பாரம்பரிய புத்தகம் அச்சிடுவதற்கு அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டாம்.
மேற்கத்திய இலக்கியம் மற்றும் அறிவியலைக் கற்பிக்க நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
பட மூலாதாரம், Shri Sarvottam
படக்குறிப்பு, முனைவர்கள் ஜனார்தன் வாட்வே மற்றும் விஜய் ஆஜ்கோவாங்கர் எழுதிய ‘மெக்காலே எஸ்டர்டே அன்ட் டுடே’ புத்தகம்
“மோதியின் கருத்து பிரிட்டன் கல்வி முறைக்கு முன்பாக இங்கிருந்த கல்வி முறை சிறப்பாக இருந்தது என்பதைக் குறிக்கிறது. ஆனால் வரலாறு இதனை முழுமையாக ஆதரிக்கவில்லை. பிரிட்டிஷ் வருவதற்கு முன்பாக நம்முடைய கல்வி அமைப்பு எப்படி இருந்தது? அதைச் செய்தவர்கள் யார்? பேஷ்வாக்கள் ஆட்சி செய்தபோது இங்கிருந்த கல்வியின் நிலை என்ன?” எனக் கேள்வி எழுப்பினார் அவர்.
மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வி அமைப்பால் ஆங்கிலம் கற்ற ஒரு மக்கள் திரள் உருவானது உண்மை தான் எனக் கூறும் அவர், “அதன் விளைவுகள் என்ன? வெறுமை மற்றும் அடிமை மனநிலை கொண்ட கருப்பு ஆங்கிலேயர்கள் உருவானார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் விளக்கிப் பேசிய அவர், “விஷ்ணு சாஸ்திரி சிப்லுங்கரின் வரியில் கூற வேண்டுமென்றால் ஆங்கிலம் என்பது புலியின் பால். தாதாபாய் நாரோஜி, ஜஸ்டிஸ் ரனடே, சுரேந்திரநாத் பானர்ஜி, வியோமெஸ் சந்திர பானர்ஜி, ஃபெரோஸ்ஷா மெஹ்தா போன்ற பலரும் அதனைப் பருகினர். ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள் ஆகிவிடவில்லையே. மாறாக அவர்கள் ஆங்கில சக்திக்கு எதிராகவே நின்றனர். பின்னர் மகாத்மா காந்தி, பகத் சிங், நேரு, படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவருமே ஆங்கில கல்வி அமைப்பால் உருவானவர்கள் தானே.” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மெக்காலே இந்தியர்களின் மனங்களை பிரிட்டன்மயமாக்கினார். பண்டைய இந்திய கல்வி அமைப்பை அவர் முற்றிலுமாக அழித்தார் எனத் தெரிவிக்கிறார் பிரதமர் மோதி.
இந்தியாவை அடிமையாக்க வேண்டும் என மெக்காலே கனவு கண்டாரா?
இந்தியாவை அடிமையாக்க வேண்டும் என்பது மெக்காலேவின் கனவாக இருந்தது என பிரதமர் மோதி சமீபத்தில் பேசியிருந்தார். மெக்காலேவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. மோதி பேசிய பிறகு அந்தக் குற்றச்சாட்டு மீண்டும் விவாதிக்கப்படுகிறது.
இதற்கு மேற்கோளாக மெக்காலேவின் கருத்துக்கள் எனக் கூறப்படும் சில விஷயங்கள் காட்டப்படுகின்றன.
“நான் இந்தியா முழுவதும் அதிகம் பயணித்துள்ளேன். இங்கு ஒரு பிச்சைக்காரனையோ அல்லது திருடனையோ பார்த்தது இல்லை. இந்த நாடு மிகவும் பணக்கார நாடு, இந்த மக்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்காக உள்ளனர். நம்மால் இந்த நாட்டை கைப்பற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. பக்தி மற்றும் கலாசார பாரம்பரியமே இந்த நாட்டின் முதுக்கெலும்பு, இந்த நாட்டை நாம் கைப்பற்ற வேண்டுமென்றால் அதனை உடைக்க வேண்டும். அதற்கு பண்டைய கல்வி அமைப்பும் அவர்களின் கலாசாரமும் மாற்றப்பட வேண்டும். இந்திய மக்கள், ஆங்கிலேயர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவரும் அவர்களின் கலாசாரத்தை விட சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் மற்றும் மேலானவர்கள் என நினைக்கத் தொடங்கினால் மட்டுமே அவர்கள் தங்களின் சுய மரியாதையை இழந்து நாம் நினைத்தபடி ஒரு அடிமை நாடாக மாறுவார்கள்” இந்தக் கருத்து மெக்காலே 1835-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மெக்காலேவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
ஆனால் ‘மெக்காலே எஸ்டர்டே அன்ட் டுடே’ என்கிற தங்களுடைய புத்தகத்தில் முனைவர்கள் ஜனார்தன் வாட்வே மற்றும் விஜய் ஆஜ்கோவாங்கர், மெக்காலே கூறியதாகப் பரவும் இந்தக் கருத்துக்கள் ஆதாரமாற்றவை என்றும் உண்மை இல்லையென்றும் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரையின் ஒரு பகுதி எனப் பரவும் இந்த பத்தி உண்மையான உரையிலிருந்து இல்லை என தங்களுடைய புத்தகத்தில் தெரிவிக்கின்றனர்.
இதைப்பற்றி பேசுகையில் ரவி அம்லே, “மெக்காலேவிற்கு அடிமை மனநிலை கொண்ட குமாஸ்தாக்களின் படையை உருவாக்க வேண்டும், கருப்பு ஆங்கிலேயர்களை உருவாக்க வேண்டும், சுயமரியாதையை இழந்த அடிமை நாட்டை உருவாக்க வேண்டும் என்பது போன்ற மறைமுக நோக்கங்கள் இருந்தாதாகக் கூறப்படுகிறது. அதற்கு இந்த கருத்துக்கள் ஆதாரங்களாக கூறப்படுகின்றன.” என்றார்.
மேலும் அவர், “பெல்ஜிய எழுத்தாளர் கோயன்ராட் எல்ஸ்ட், மெக்காலே 1835-இல் பிரிட்டனில் இல்லை என்றும் அப்போது இந்தியாவில் இருந்ததாகவும் தெரிவிக்கிறார். அதற்கும் மேலாக அந்த ஆங்கில பத்தியில் உள்ள எண்ணங்களை விடுங்கள், அந்த மொழியே அப்போது பயன்படுத்தப்பட்ட ஒன்று கிடையாது. அது மிக சமீபத்திய ஒன்று தான். இந்த நிலையில் யார் இதனை திரித்தது?
எல்ஸ்ட் கூற்றுப்படி, இந்த பத்தி அமெரிக்காவில் உள்ள சமய இலக்கியம் பிரசுரிக்கும் அமைப்பின் இதழான ‘தி ஆவேகனிங் ரே’வில் முதலில் வந்துள்ளது. அதிலிருந்து இந்துத்துவ இதழ்களால் இது எடுக்கப்பட்டது. எல்ஸ்ட் இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. இதன் மூலமாக ஆங்கிலத்தைக் கொண்டு வருவதன் பின் இருந்த மெக்காலேவின் நோக்கங்கள் தூய்மையானவை என கோயன்ராட் எல்ஸ்ட் தெரிவிக்கிறார்.” என்றார்.
ஆசியரும் கல்வி செயல்பாட்டாளருமான பாவுசாகேப் சஷ்கரிடமும் பேசினோம்.
பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “மெக்காலே இந்தியாவில் நவீன கல்விக்கு அடித்தளமிட்டார். அவரின் கொள்கைகள் இந்திய சமூகத்தில் ஆங்கில மொழியையும் உலகைப் பற்றி பரந்த பார்வையையும் வழங்கியது. மெக்காலேவிற்கு முன்பு கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே என்றிருந்தது. அவரின் தலையீட்டிற்குப் பிறகு தான் ‘அனைவருக்கும் கல்வி’ என்கிற உணர்வு இந்திய சமூகத்தில் வலுப்பெற்றது.” என்று தெரிவித்தார்.
கல்வியாளர் சுக்தேவ் தோரட் பிபிசி மராத்தியிடம் பேசுகையில், “மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வி அமைப்பு இந்தியாவில் அடிமை அல்லது குறுகிய மனப்பான்மையை கொண்டு வந்தது என நான் நினைக்கவில்லை. மாறாக மேற்கத்திய அறிவு இந்தியர்களுக்கு கிடைத்தது. மெக்காலே பாரம்பரிய இந்திய கல்வி முறையோடு ஐரோப்பிய கல்வி முறையையும் அறிமுகப்படுத்தினார். அவர் சமஸ்கிருதத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.”
“இந்தியர்களுக்கு மேற்கத்திய கல்விக்கான கதவுகளை திறந்து வைத்தார். அவரால் இந்தியர்களின் அறிவு புலம் விரிவடைந்தது. குறிப்பாக அறிவியல் பார்வை பற்றிய அறிவு இந்தியாவிற்கு வர முடிந்தது. இந்தியர்களின் பார்வை குறுகுவதற்குப் பதிலாக விரிவடைந்தது.” என்றார்.
இந்தியாவில் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ததில் அவருடைய பங்களிப்பு தனித்துவமானது என தெரிவித்தார் பாவுசாகேப் சஷ்கர்.
“மெக்காலே முறை நாம் இந்திய மொழிகளைப் பார்க்கும் விதத்தை மாற்றினாலும் மறுபுறம் நவீன அறிவியல் கல்விக்கான விதை கல்வி மூலம் விதைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.
1. மராத்தி தகவல் களஞ்சியம்
2. மெக்காலே எஸ்டர்டே அன்ட் டுடே – முனைவர்கள் ஜனார்தன் வாட்வே மற்றும் விஜய் ஆஜ்கோவாங்கர் மற்றும் சர்வோட்டம் பிரகாஷன்