படக்குறிப்பு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களை செகண்ட் இயர் சிண்ட்ரோம் பிரச்னை அதிகம் பாதிக்கிறது (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்
பிரியா, பிலிப்பைன்ஸில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்தையும் வகுப்பறையில் படித்தவர், நான்காம் ஆண்டில் நோயாளிகளைப் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டார். அப்படி நோயாளிகளை நேரடியாகப் பரிசோதிக்கத் தொடங்கியதும் அவரிடம் ஒரு மாற்றம் தென்பட்டது.
“அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகத்துடன் இருப்பது மற்றும் அதிகமாக இனிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருப்பது ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறி. இந்தப் பிரச்னை இருக்கும் நோயாளிகளைப் பார்த்தப் பின்னர், நான் இனிப்புகளைச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் எனக்கும் நீரிழிவு நோய் இருப்பதாக எண்ணி அஞ்சினேன்.”
“அதேபோல அதிக வேலைப் பளுவால் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது பொதுவானதே. ஆனால் க்ரோனிக் கிட்னி நோய் இருப்பதாக நினைத்தேன். அது எனது மன அழுத்தத்தை அதிகரித்ததோடு, எனக்கு மனப் பதற்றத்தையும் ஏற்படுத்தியது” என்று தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்று சந்தேகித்த பிரியா, செவிலியரான தனது தாயிடம் இதுகுறித்துப் பேசினார்.
“ஒரு செவிலியர் என்பதால் எனது பிரச்னையை அம்மாவிடம் தெரிவித்தேன். அப்போதுதான் மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் பற்றித் தெரிய வந்தது. அதன் பிறகுதான் என்னால் இதிலிருந்து வெளியே வர முடிந்தது,” என்று விவரித்தார் அவர். பிரியா மட்டுமில்லை, மருத்துவ மாணவர்கள் பலரும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டால் அவர் செய்யும் முதன்மையான வேலை என்னவாக இருக்கும்? அதிகமாகத் தண்ணீர் குடிக்கலாம், எளிதாகச் செரிக்கும் உணவை உட்கொள்ளலாம்.
ஆனால் இந்த வரிசையில் அவர் ஈடுபடும் மற்றொரு செயல், தனக்கு இருக்கும் அறிகுறியை கூகுள் போன்ற ஆன்லைன் தேடுதளங்களில் ஆராய்ந்து பார்ப்பதாக இருக்கும்.
அந்தத் தேடலில் வரும் விடை மிகவும் அச்சமூட்டுவதாகக்கூட இருக்கலாம், அவருக்கு இருக்கும் அறிகுறியை மிகைப்படுத்தும் வகையில்கூட இருக்கலாம். அதைப் பார்க்கும் நபர் தனக்கு அந்த நோய் இருக்குமோ என்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டு, பதற்றம் அடையலாம். அதன் விளைவாக அவருக்கு மன அழுத்தமும்கூட ஏற்படலாம்.
ஆனால் இதேபோன்று பெரிய அச்சமூட்டும் நோய்கள் தனக்கும் இருப்பதாக மருத்துவம் பயிலும் மாணவர்களும் அச்சம் கொள்கின்றனர். அந்தப் பிரச்னைதான் செகண்ட் இயர் சிண்ட்ரோம் அல்லது மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.
அது என்ன மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம்? இது ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்ன? இது யாருக்கெல்லாம் ஏற்படும்?
மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் நோய்களின் அறிகுறிகள் தங்களுக்கு இருப்பதாகவோ அல்லது அந்த நோய் ஏற்படும் அபாயம் தங்களுக்கு இருப்பதாகவோ எண்ணி அச்சத்திற்கு உள்ளாகும் நிலையே மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்கிறது அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம்.
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா, “பயிற்சி மருத்துவர்கள் இதுபோன்ற பிரச்னையைச் சந்திப்பது மிகவும் பொதுவானது. மருத்துவப் படிப்பின் முதல் ஆண்டில் மனித உடலின் கட்டமைப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் உடலில் உள்ள வேதியியல் பரிமாற்றங்கள் ஆகியவற்றைப் பாடங்களாகவே படிப்பார்கள்.
அதில் நோயைப் பற்றியோ, அதன் அறிகுறிகளைப் பற்றியோ அவர்கள் படிக்க மாட்டார்கள். ஆனால், இரண்டாம் ஆண்டில் மனித உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றி விளக்கும் நோயியல் (pathology) என்ற பாடத்தைப் படிப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் ஒரு பதற்றம் மற்றும் பயம் ஏற்படுகின்றது,” என்று விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ வசதிகளை அணுகும் நடைமுறை எளிதாக இருப்பதால், உடல்நிலையில் சந்தேகம் இருக்கக் கூடிய மாணவர்கள் அதை அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
“உதாரணமாக ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்ற சோதனைகளை அவர்கள் செய்துகொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதன் முடிவுகளைப் பார்த்து, தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரிந்த பின்னரே அவர்களின் மனம் அமைதியடையும்.”
“முதல் முறையாக இரண்டாம் ஆண்டில்தான் மருத்துவ மாணவர்கள் நோயாளிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள். இத்தகைய பல்வேறு மனநலம் சார்ந்த காரணிகளால், இது அனைத்து மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சில பேருக்கு அவ்வாறான பயம் ஏற்பட்டாலும் அதை எளிதில் கடந்துவிடுவர், சிலருக்கு அது கடினம்” என்கிறார் தமிழ்நாடு பயிற்சி மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் கீர்த்தி வர்மன்.
சொந்த அனுபவத்தை பகிர்ந்த மருத்துவர்
பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர், “நான் மருத்துவம் படித்து முடித்த சில நாட்களுக்குப் பிறகு எனது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டது. அது சாதாரண தசைப் பிடிப்புதான். ஆனால் அதை என் மனம் ஏற்கவில்லை. எனக்கு ஆங்கிலூசிங் ஸ்பான்டிலைசிஸ் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அஞ்சி ரூ.14,000 செலவு செய்து ஹெச்.எல்.ஏ பி27க்கான பரிசோதனையை மேற்கொண்டேன். அதன் முடிவு நெகட்டிவ் என்ற வந்த பிறகே என் மனம் அமைதியடைந்தது,” என்று தெரிவித்தார்.
இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், 2016ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இதுபோன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் கதாநாயகனின் தோழி, தனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருப்பது போலவும் மயங்கி விழுவது போலவும் காட்சிகள் இடம்பெறும். தோழியை ஆய்வு செய்த மருத்துவர், அவருக்கு செகண்ட் இயர் சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறுவார்.
மீண்டு வரும் வழிமுறைகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது என்று கூறுகிறார் மருத்துவர் திருநாவுக்கரசு (சித்தரிப்புப் படம்)
“இதுபோன்ற மனநிலையைச் சந்திக்கும் மாணவர்கள் அவர்களது கல்லூரியின் மூத்த மருத்துவர்களிடம் அறிவுரை பெறுவது, தெளிவு பெற உதவும். ஆனால் சிலருக்கு, அதாவது தொடக்கத்தில் இருந்தே பயந்த சுபாவமாக இருப்பவர்களுக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்குவது தீர்வு தரும்,” என்கிறார் மருத்துவர் திருநாவுக்கரசு.
“ஆனால் சில நேரங்களில் நம்மால் இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமலும் இருக்க இயலாது. ஏனென்றால் நோயைத் தடுப்பதே மருத்துவத் துறையின் முதன்மையான நோக்கம். பெரிய நோய்களைச் சிறிய அறிகுறி வாயிலாகவே கண்டறிய முடியும். ஆனால் அதையே நினைத்துக்கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை” என்கிறார் அவர்.
அதோடு, தொடர்ந்து படிக்கப் படிக்க மாணவர்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியம் ஏற்படுவதால் இந்த நிலை மாறிவிடுவதாகவும் இதைப் பற்றி கவலைப்படக்கூட அவர்களுக்கு நேரம் இருக்காது என்கிறார் மருத்துவர் கீர்த்தி வர்மன்.
மருத்துவ மாணவர் அல்லாதவர்களையும் பாதிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இப்பிரச்னை மருத்துவ மாணவர் அல்லாத நபர்களையும் பாதிக்கலாம் என்கிறார் பூர்ணசந்திரிகா (சித்தரிப்புப் படம்)
இதை மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்று அழைப்பதால் இது மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு பயம் சார்ந்த பிரச்னையா என்ற கேள்விக்கு மருத்துவர் பூர்ணசந்திரிகா, “இல்லை” என்று பதிலளித்தார்.
மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்பது ஹைபோகான்ட்ரியாசிஸ் எனப்படும் ஒருங்கின்மையின் (disorder) ஒரு வகை என்கிறார் அவர்.
“அதாவது தனக்கு ஏதோ தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளதாகவோ அல்லது ஏற்படப் போகின்றதோ என்று நினைத்து அச்சப்படும் பிறழ் மனநிலை. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவும் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மொபைலில் தேடுகிறார்கள், ஒன்றுக்கு பத்து மருத்துவர்களை அணுகுகிறார்கள், நிறைய பரிசோதனைகளைச் செய்து கொள்கிறார்கள். இதனால் மக்களிடம் இந்த அச்சம் மிகுந்துள்ளது,” என்கிறார் அவர்.
மருத்துவர்கள் அடுத்தடுத்து வரும் பயிற்சி ஆண்டுகளில் இந்த நிலையைப் பற்றிய புரிதலைப் பெறுகின்றனர். ஆனால் இது சாமானியர்களுக்கு ஏற்படும்போது அவர்களுக்குப் புரிய வைப்பது சற்று கடினமாகவே உள்ளது என்கிறார் அவர்.
இந்த மனநிலையில் இருப்பவர்கள் நோயைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி மேற்கொள்வது, இதயத் துடிப்புப் போன்ற உடலில் நடக்கும் சாதாரண செயல்கள், தங்களின் உடல்நிலை குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பது, சிறிதாக இருக்கும் அறிகுறிகளை மிகைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கிளீவ்லேண்ட் கிளீனிக் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.