கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. வெயில் காலத்தில் பொதுவாக “மெட்ராஸ்-ஐ” எனப்படும் கண் விழி சவ்வு அழற்சி நோய், மற்றும் வெப்ப அலையில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“மெட்ராஸ்-ஐ” எனப்படும் கண் விழி சவ்வு அழற்சி நோய், வெயில் காலத்தில் ஏற்படக்கூடியது. இது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். என்ட்ரோ அடினோ போன்ற வைரஸ் நுண் கிருமிகளால் இந்த நோய் ஏற்படக் கூடியவை.
இந்த வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படும் “மெட்ராஸ்-ஐ” சுமார் ஒரு வார அளவில் தானாகவே குணமடையக் கூடியது. கண் சவ்வு அழற்சி நோய் ஏற்படும்போது, கண்களில் எரிச்சல், கண்களில் மணல் துகள்கள் இருப்பது போன்ற உறுத்தல், கண்கள் சிவந்து காணப்படுதல், கண்களில் அழுக்கு சேருதல், நீர் வடிதல், இமைகள் ஒட்டிக் கொண்டு கண் திறக்க சிரமப்படுதல் போன்றவை ஏற்படக் கூடும்.
அழுக்கடைந்த கைகள், துணி, பஞ்சு போன்றவற்றை கொண்டு கண்களை தேய்க்கும் போது வைரஸ் தவிர, இதர பாக்டீரியா’ போன்ற நுண்கிருமிகளும் கண்களில் பரவ வாய்ப்புள்ளது. எனவே சரியான சிகிச்சை எடுக்கப்படவில்லையெனில், கண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம்.
மெட்ராஸ்-ஐ பாதிப்பு ஏற்பட்டால், சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பே கண்களை தொட வேண்டும். கண்களை தேய்ப்பதை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி தூய்மையாக வைப்பது நலம் தரும்.
மருத்துவர்களின் ஆலோசனையுடன் சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொள்வது சிறந்தது, பாதுகாப்பானது. மெட்ராஸ்-ஐ குணமாகும் வரை பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க உதவும். சளி, இருமல் போன்றவையும் சேர்ந்து இருக்குமானால், முகக்கவசம் அணிந்து கொள்வது பிறருக்கு பரவாமல் இருக்க பயன்தரும். வெளிச்சத்தால் ஏற்படும் கண் கூச்சத்தை தவிர்க்க குளிர் கண்ணாடிகளையும் அணிந்து கொள்ளலாம். தேவையான அளவு கண்களுக்கு ஓய்வும், உறக்கமும் அவசியம்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே நேரடியாக மருந்து கடைகளில் மருந்துகளை பெற்று உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதும், முகத்தை கழுவுவதும், நல்ல நீரில் கண்களை கழுவுவதும் இந்நோய் வராமல் தடுக்க உதவும்.
கோடை வெயிலின் தாக்கம் வெப்ப அலையாக தற்போது உருவெடுத்துள்ளது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தளர்வான வெளிர் நிற பருத்தி போன்ற வியர்வையை உறிஞ்சக்கூடிய வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்லும் பொழுது பாதுகாப்பாக வெளிர் நிறத்திலான குடை, தொப்பி, குளிர் கண்ணாடிகள் மற்றும் காலணிகள் போன்றவை பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் பொழுது குடிப்பதற்கு தேவையான நீரை தங்களுடன் எடுத்துச் செல்வது நல்லது. குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் 3 முதல் 5 லிட்டர் வரையிலான தண்ணீரை அருந்துவது சிறந்தது. தாகம் இல்லாவிடினும் கூட அவ்வப்பொழுது தண்ணீரை முடிந்தவரை உட்கொள்வது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும். இது ஏசி அறையிலேயே வாழ்பவர்களுக்கும் பொருந்தும். தண்ணீர் மட்டுமன்றி இளநீர், மோர், எலுமிச்சை சாறு, இதர பழரசங்கள், உப்புச் சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ் கரைசல்) ஆகியவற்றையும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.
இது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்கவைக்க உதவியாக அமையும். உடலில் நீரிழப்பு ஏற்பட காரணமான ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது தவிர நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், தர்பூசணி போன்ற பழங்களை உட்கொள்வது பயன் தரும். அதிக புரதச்சத்து உணவுகள் மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்கவும். பச்சிளம் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர். நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் தேவையின்றி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். மதிய வேளையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை அனுமதிக்க வேண்டாம்.
வெயிலில் மயக்கம் அடைந்து பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விசிறி விட வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். உட்காரும் நிலையில் இருந்தால் குளிர்ந்த குடிநீரை பருக விழிப்புணர்வுடன் கொடுக்கலாம். முழு மயக்கத்தில் இருப்பவர்களுக்கு வாய் வழியாக நீரையோ வேறு எதனையும் தரக் கூடாது.
வெப்ப அலை தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப அலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு தயார் நிலையில் போதுமான படுக்கைகள், ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் இதர மருந்துகளும் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.