சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகளுக்கான ஒட்டு மொத்த பயணிகளின் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ்’ ஆய்வில் தெரியவந்துள்ளது. கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் (Community of Metros) என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும்.
இந்த அமைப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2024-ம் ஆண்டில் புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இதற்கிடையில், கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் கடந்த ஆகஸ்டில் இணையதளம் மூலமாக பயணிகள் திருப்தி குறித்த கருத்துப் பதிவை நடத்தியது.
இதில் சுமார் 6,500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பானது சேவைத் தரம், அணுகல், கிடைக்கும் தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த கணக்கெடுப்பில் உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளுக்கான ஒட்டு மொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை விவரம்: இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் சுமார் 64 சதவீதம் பேர் ஆண்கள், 33 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 3 சதவீதம் பேர் மற்றவர்கள் ஆவர். மேலும் பெரும்பாலான பயணிகள் இளம் வயதினர் (30 வயதுக்கு உட்பட்டவர்கள்). பலர் பணி நிமித்தமாக மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
பயணிகள் கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, மெட்ரோ நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு வசதி மற்றும் நிலையங்களை எளிதாக அணுகும் வசதி ஆகியவற்றில் மேம்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அதில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி. பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியான மேம்பாடுகளைச் செய்ய உறுதி அளிக்கிறோம்” என்றனர்.