• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலா ரூ.1 லட்சம் நிதி அறிவிப்பு | Compensation of Rs. 1 lakh each by TNCC to the families of 5 people who died in Airshow – Selvaperunthagai

Byadmin

Oct 7, 2024


சென்னை: “சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும்,” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று (அக்.7) அதிமுக, தமாகாவைச் சேர்ந்த பலர் அக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வபெருந்தகை கூறியது: “சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையினரின் வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 4 பேர் உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். மேலும், வழக்கமாக மாலை நேரத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தும் விமானப் படை, சென்னையில் உச்சிவெயிலில் நடத்தியதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும். மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். அந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும்,” என்று அவர் கூறினார்.



By admin