• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Rs 5 lakh compensation each to families of 5 people died in air show cm Stalin

Byadmin

Oct 8, 2024


சென்னை: சென்னை மெரினாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுக்க விமானப் படை கோரியிருந்தது. அதற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கென தமிழக அரசின் காவல், தீயணைப்பு, சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகள், சென்னை மாநகராட்சி ஆகியவை ஒருங்கிணைந்து மக்களுக்கு சிறந்த நிகழ்ச்சியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால், கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், எதிர்பார்த்ததைவிட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்ததால், நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொது போக்குவரத்தை பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன்.

அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது, கூடுதல் கவனமும், ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்த நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவ காரணங்களால் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.



By admin