இசையமைப்பாளர் வித்யாசாகர் 1989ம் ஆண்டு வெளியான பூ மனம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கொடி கட்டிப் பறந்தார். குறிப்பாக, மெலோடி என்றால் வித்யாசாகர் என்று சொல்லும் அளவுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தார். மெலடிகிங் என அழைக்கப்பட்டார்.
200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த அவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார். இன்று வித்யாசாகருக்கு பிறந்தநாள். அவருடன் பணியாற்றி அனுபவங்கள் குறித்து பிரபல பாடகர், பாடகிகளிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
ஓ நண்பனே (தில்), சூரத்தேங்காய் (கில்லி), ரா ரா (சந்திரமுகி)
பட மூலாதாரம், Sun Music
படக்குறிப்பு, கில்லி படத்தில் இடம்பெற்றிருந்த சூரைத்தேங்காய் அட்ரா அட்ரா பாடல்
பாடகர் திப்பு வித்யாசாகர் இசையில் தான் பாடிய பாடல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“வித்யாசாகர் இசையில் நான் பாடிய பாடல்களில் ‘பள்ளி தோழியே வந்து போனாயா பாவாடை பூவே வந்து போனாயா’ என்ற பாடல் ரொம்பப் பிடிக்கும். அந்த மெலோடி மனதை மாயம் செய்யும். ஜீவா நடித்த ‘தித்திக்குதே’ படத்தில் அந்த பாடல் இடம் பெற்றது.
வித்யசாகர், தரணி கூட்டணிக்குத் தனி இடம் உண்டு. அந்த வகையில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தில்’ படத்தில் நான் பாடிய ‘ஓ நண்பனே’ இன்றும் என் ஃபேவரைட். அந்த பாடல் நட்பை கொண்டாடும் பாடலாகவும், ஒரு தன்னம்பிக்கை பாடலாகவும் அமைந்தது சிறப்பு.
‘இயற்கை’ படத்தில் இடம் பெற்ற ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்’ ரொம்பே ஸ்பெஷல். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஷாம் நடித்த அந்த படத்தில் கடல் பின்னணியில் வரும் இந்தப் பாடல் ரம்மியமானது.
அதேபோல் சந்திரமுகியில் வரும் ரா ரா பாடலை மறக்க முடியுமா? வித்யாசாகர் இசை, ஜோதிகா டான்ஸ், அந்த கதைக்களம் அனைத்தும் ஒன்று சேர்ந்த பாடல் அது.
அதேபோல், கில்லி படத்தில் விஜய்க்காக பாடிய ‘சூரத்தேங்காய் அட்ரா அட்ரா’ பாடலை ஏகப்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறேன். விஜயின் டான்ஸ் அவ்வளவு அருமையாக இருக்கும்” என்கிறார் திப்பு
காற்றின்மொழி (மொழி), நீ காற்று (நிலாவே வா)
பட மூலாதாரம், KalaignarTV Movies
படக்குறிப்பு, மொழி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காற்றின் மொழி’ பாடல்
பிரபல பாடகி சுஜாதா மோகனிடம் இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்கள் குறித்து பிபிசி சார்பில் கேட்டபோது, “அவரின் அனைத்து பாடல்களும் பிடிக்கும். ஆனாலும், உடனே என் மனதில் வரும் பாடல்களை வரிசைப்படுத்துகிறேன்” என்று பேசினார்.
”அவர் இசையில் நான் பாடிய ‘காற்றின் மொழி ஒலியா இசையா… பூவின் மொழி நிறமா மணமா… கடலின் மொழி அலையா நுரையா… காதல் மொழி விழியா இதழா…’ என்ற பாடலை இப்போது கேட்டாலும் ஒருவித இனம் புரியாத சுகம். ஜோதிகாவும் அந்த பாடலுக்கு அழகாக நடித்து இருப்பார். ராதாமோகன் இயக்கத்தில் உருவான மொழி படத்தில் அந்த பாடல் இடம் பெற்றது.
நான் பாடிய டாப் 5 பாடல்களில் காற்றின் மொழிக்கு கண்டிப்பாக இடம் உண்டு. இசையமைப்பாளர் வித்யாசாகரும், பாடலாசிரியர் வைரமுத்துவும் போட்டி போட்டு தங்கள் பங்களிப்பு செய்து இருப்பார்கள். அதனால் அந்த பாடல் காற்றில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.” என்கிறார் சுஜாதா மோகன்
பட மூலாதாரம், Ayngaran Music
படக்குறிப்பு, தில் படத்தில் இடம்பெற்ற உன் சமையல் அறையில் பாடல்
உன் சமையல் அறையில் உப்பா சர்க்கரையா? (தில்) பாடல் பற்றிப் பேசிய சுஜாதா மோகன், “தரணி, வித்யாசாகர் கூட்டணியில் வந்த ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த வரிகளை வித்தியாசமாக அழகாக கொடுத்திருப்பார் கபிலன். ஒவ்வொரு வரிக்கும், அடுத்த வரிக்கும் ஒரு தொடர்பு இருக்கும். கேள்வி பதில் மாதிரியான பாணியில் அந்தப் பாடல் பலரால் முணுமுணுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த பாடலின் வரிகள் பலருக்கு பரீட்சயம்.
அதேபோல, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான பேராண்மை படத்தில் ‘ஏறத்தாழ ஏழு என் இமையை பறித்து சென்றாய்’ பிடிக்கும். அந்த பாடலை, அவ்வளவு ரசித்து பாடியிருப்பார் சாதனா சர்க்கம். சுகமான அனுபவத்தை இந்த பாடல் தரும். நான் அடிக்கடி கேட்கிற பாடல்” என்று கூறினார் சுஜாதா மோகன்.
பட மூலாதாரம், Star Music India
படக்குறிப்பு, தித்திக்குதே படத்தில் சுஜாதா மோகன் பாடிய ‘தித்திக்குதே’ பாடல்
”’நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்… ‘ இந்தப் பாடலும் ரொம்ப இஷ்டம். அந்த பாடல் வரிகளும், வித்யாசாகர் இசையும் இணைந்த காம்பினேஷன் அபாரம். காதல் பாடல்களில் இதை அல்டிமேட் என்பேன். இதிலும் வரிகளும், இசையும் கலந்த கலவை தனிசுவை” என்றும் சுஜாதா மோகன் கூறினார்.
“தித்திக்குதே படத்தில் ‘சில்லென்ற தீப்பொறி ஒன்று’ பாடலை வித்யாசாகர் இசையில் நான்தான் அனுபவித்து பாடினேன். இந்த பாடலின் சரணம் ஒரு மாதிரி இருக்கும். அடுத்து வேறு மாதிரி இசை செல்லும். ஜீவா, ஸ்ரீதேவி அந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்து இருப்பார்கள்.” என்கிறார் சுஜாதா மோகன்