மெலனியா டிரம்ப் தனது கணவரின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கு மறுநாள் சமூக ஊடகங்களில் நாட்டு மக்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
“பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இந்த முக்கியமான பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்று மெலனியா டிரம்ப் அதில் குறிப்பிட்டிருந்தார்.
“குடியரசின் முக்கிய அம்சமான சுதந்திரத்தை நாங்கள் பாதுகாப்போம்,” என்று அவர் உறுதியளித்தார். தங்கள் சொந்த சித்தாந்தங்களை விட நாட்டின் நலன்களை முன்னிறுத்துமாறு அமெரிக்கர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இது ஒரு சுருக்கமான அறிக்கை என்ற போதிலும் அமெரிக்காவின் முன்னாள் ‘முதல் பெண்மணி’ (First Lady) மெலனியா, இரண்டாவது முறை வித்தியாசமான பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்பதை அது சுட்டிக்காட்டியது.
2016-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மெலனியா ஆரம்பத்தில் வெள்ளை மாளிகைக்குச் செல்லவில்லை. தனது இளைய மகனுடன் இருக்க நியூயார்க்கில் தங்கினார். கடந்த காலத்தில் இருந்த முதல் பெண்மணிகளோடு ஒப்பிடுகையில், மெலனியா எதிலும் தலையிடாத, மிகவும் அமைதியானவராகத் தெரிந்தார்.
ஆனால், மெலனியா டிரம்ப் இம்முறை, ‘முதல் பெண்மணி’ என்னும் வரையறுக்கப்படாத பாத்திரத்தை மிகுந்த சிந்தனையுடன் அணுகுவார் என்று பலர் கணித்துள்ளனர்.
பொதுவெளியில் இருந்து விலகி நின்ற மெலனியா
மெலனிஜா க்னாவ்ஸ் (Melanija Knavs) என்னும் இயற்பெயர் கொண்ட மெலனியா, ஸ்லோவேனியாவில் பிறந்தார். ஒரு ஃபேஷன் மாடலாக இருந்தார். டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபரான போது, மெலனியா மன்ஹாட்டனில் உள்ள டிரம்ப் டவரின் கவர்ச்சிகரமான வாழ்க்கையில் இருந்து, வெள்ளை மாளிகையின் அரசியல் வாழ்க்கைக்கு மாறினார்.
சிலர் அவரை புரிந்து கொள்ள முடியாத ‘மர்மமானவர்’ என்று வர்ணிக்கின்றனர். முந்தைய முதல் பெண்மணிகளைப்போல இவர் பொது விவகாரங்களில் அதிகம் தலையிடவில்லை. முந்தைய ஆட்சிக் காலத்தின் போது வெள்ளை மாளிகையிலோ அல்லது பரப்புரைகளிலோ அரிதாகவே உரைகளை நிகழ்த்துவார்.
“நவீன முதல் பெண்களில் அவர் தனித்துவமானவர்,” என்று மெலனியாவைப் பற்றி டாமி விஜில் கூறினார்.
டாமி விஜில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புத்துறைப் பேராசிரியராகவும், மிஷெல் ஒபாமா மற்றும் மெலனியா டிரம்ப் பற்றிய நூல்களின் ஆசிரியரும் ஆவார்.
“மெலனியா செய்ய வேண்டியதை அப்படியே செய்யாமல், அவர் விரும்பியபடி செய்கிறார். இருப்பினும், அவர் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறார்,” என்று அவர் கூறுகிறார்.
சமீபத்திய ஆண்டுகளில், அவரது கணவர் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட பரப்புரை செய்த போது பல சட்ட சவால்களை எதிர்கொண்டதால், மெலனியா பொதுவெளியில் இருந்து விலகி இருந்தார். மெலனியா இல்லாததால், “மெலனியா எங்கே?” என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் மெலனியா சில முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் டிரம்புடன் தோன்றினார். 2022-ஆம் ஆண்டின் இறுதியில் அவரது கணவர் தனது மறுதேர்தலை அறிவித்த போது மெலனியா உடனிருந்தார்.
ஜூலை மாதம் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பிரகாசமான சிவப்பு கிறிஸ்டியன் டியோர் உடை அணிந்து கலந்து கொண்ட மெலனியா உரை நிகழ்த்தாமல் பாரம்பரியத்தை உடைத்தார்.
மெலனியா பேசும்போது, அவருடைய வார்த்தைகள் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தோன்றும், அவருடைய பார்வையை அந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும்.
தேர்தல் நாளுக்கு முந்தைய வாரங்களில், மேடிசன் ஸ்கொயர் கார்டன் பரப்புரையில் அவர் பங்கேற்று சுருக்கமான உரை நிகழ்த்தினார்.
டிரம்ப் பரப்புரையின் ‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ என்ற செய்திக்கு ஏற்ப, சக்தி வாய்ந்த கருத்துக்களை முன்வைத்தார். பெரு நகரமான நியூயார்க், அதிகரிக்கும் குற்றச் செயல்களால் வீழ்ச்சியை சந்திப்பதாகக் கூறினார்.
டிரம்ப் மீது நிகழ்த்தப்பட்ட முதல் படுகொலை முயற்சிக்குப் பிறகு, மெலனியா கட்சியினரின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். கொலை முயற்சி செய்தவரை ‘அரக்கன்’ என்று குறிப்பிட்டார்.
பின்னர், ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு அரிய நேர்காணலில், டிரம்பின் அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகங்கள் ‘நச்சுத் தன்மைமிக்கச் சூழலை மேலும் எரியூட்டி தாக்குதலுக்கு வழிவகுத்தன’ என்று குற்றம்சாட்டினார்.
மெலனியாவின் நினைவுக்குறிப்பு
அவரது சமீபத்திய நினைவுக் குறிப்பில் (memoir), மெலனியா கருக்கலைப்புக்கான தனது ஆதரவைக் குறிப்பிட்டார். இந்தக் கருத்து குடியரசுக் கட்சியின் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்களுடன் முரண்படுகிறது.
இருப்பினும், அவரது கருத்துகள் யூகத்தைத் தூண்டியன, ஏனெனில் அந்த சமயத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை வழக்கு தலைகீழாக மாறியது, கருக்கலைப்பு விவகாரத்தில் டிரம்புக்குப் பிரசாரம் செய்வது கடினமாக இருந்தது.
தனது நினைவுக் குறிப்பில், மெலனியா தனது மாடலிங் வாழ்க்கை, தனது கணவர் மீதான அபிமானம் மற்றும் அவர்களின் கடந்தகால அரசியல் கருத்து வேறுபாடுகள் பற்றி எழுதினார்.
ஆனால் சர்ச்சையின் விவரங்களை பற்றி விரிவாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், 2020 அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக டிரம்ப் கூறியது போன்ற சில சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளை மெலனியா பகிரங்கமாக ஆதரித்தார்.
“தேர்தல் முடிவுகளை பற்றி நான் மட்டும் கேள்வி கேட்கவில்லை. பலர் கேட்கின்றனர்” என்று அவர் எழுதினார்.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி அன்று நாடாளுமன்ற கட்டடடத்தில் நடந்த கலவரம் குறித்து, அவர் தனது கடமைகளில் `பிஸியாக’ இருந்ததால், அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று தனக்கு “தெரியாது” என்று எழுதினார்.
அவரது முன்னாள் பத்திரிகைச் செயலர் ஸ்டெபானி க்ரிஷாம், தனது நினைவுக் குறிப்பில் மெலனியா டிரம்ப்பை விமர்சித்து எழுதியிருந்தார், மெலனியா வன்முறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட மறுத்துவிட்டதால், தான் ராஜினாமா செய்ததாக க்ரிஷாம் குறிப்பிட்டிருந்தார்.
முதல் பெண்மணி என்னும் அதிகாரத்தை மெலனியா அனுபவித்தாரா?
சில விமர்சகர்கள் மெலனியா அமெரிக்காவின் முதல் பெண்மணியாக அவரது பாத்திரத்தை அவர் உண்மையிலேயே அனுபவித்தாரா என்று கேள்வி எழுப்பினர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய முன்னாள் சி.என்.என் நிருபர் கேட் பென்னட், மெலனியா முதல் பெண்மணியாக இருக்க ஆரம்பக் கட்டத்தில் தயக்கம் காட்டிய போதிலும், அவர் உண்மையில் அந்தப் பாத்திரத்தை ரசித்ததாக நம்புகிறார்.
“முதல் பெண்ணாக இருப்பதையும் வெள்ளை மாளிகையின் வசதிகளையும் அவர் விரும்பினார்,” என்று பீப்பிள் பத்திரிகைக்கு பென்னட் 2021-இல் அளித்த பேட்டியில் கூறினார்.
“அவர் உண்மையில் அதை மிகவும் ரசிக்கிறார் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.
மெலனியா டிரம்ப் தனது நினைவுக் குறிப்பில், “முதல் பெண்மணியாக இந்த அதிகாரத்தை நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கான வலுவான கடமை உணர்வு எனக்கு உள்ளது,” என்று எழுதியிருக்கிறார்.
1999-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் அவர் தனது அப்போதைய காதலன் டிரம்ப் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டால், முன்னாள் முதல் பெண்மணிகளான ஜாக்குலின் கென்னடி மற்றும் பெட்டி ஃபோர்டு ஆகியோரை முன்மாதிரியாகப் பார்ப்பேன் என்றும், அவர்களை ‘மிகவும் மரபுமிக்கவர்கள்’ என்று கருதுவதாகவும் கூறினார்.
தடகள வீராங்கனையான திருமதி. ஃபோர்டு முதல் பெண்மணியாக இருந்த போது, பெண்களின் உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு உரிமைகளுக்காகப் போராடினார், ஃபேஷன் உலகில் செல்வாக்கு மிக்க திருமதி. கென்னடி வெள்ளை மாளிகையைப் பராமரிப்பதில் உறுதியாக இருந்தார்.
டிரம்ப்பின் முந்தைய பதவிக் காலத்தில், வாஷிங்டனுக்குச் சென்ற பிறகு, மெலனியா டிரம்ப் முதல் பெண்மணியின் பொறுப்புகளை ஏற்கத் துவங்கினார். அதாவது, மதிய உணவு விருந்துகள் மற்றும் வருகைதரும் உலகத் தலைவர்களுக்கு அரசு விருந்துகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகளை ஏற்று கொண்டார்.
அவர் வெள்ளை மாளிகையின் அழகியல் மீது கவனம் செலுத்தினார். விரிவான புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டார். கிறிஸ்துமஸ் அலங்காரங்களை உருவாக்கினார்.
பல சந்தர்ப்பத்தில் அவரது ஆடை ஊடக கவனத்தையும் சர்ச்சையையும் ஈர்த்தது. குறிப்பாக அவர் 2018-இல் குடியேறியக் குழந்தைகள் தடுப்பு மையத்திற்குச் சென்ற போது, “ஐ ரியலி டோன்ட் கேர், டூ யூ?” என்று எழுதப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.
“தன்னை விமர்சித்த இடதுசாரி ஊடகங்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் இந்த ஜாக்கெட் ஒரு பதில்,” என்று அவர் கூறினார்.
மெலனியாவின் முன்னாள் நண்பரும் மூத்த ஆலோசகரான ஒருவர் அவரின் தனிப்பட்ட உரையாடலை ரகசியமாகப் பதிவு செய்தததால் மெலனியா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அந்த உரையாடலில், ‘குடியேறிய குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கும் தனது கணவரின் கொள்கைகளுக்காக அவர் விமர்சிக்கப்படுவது தனக்கு விரக்தியை ஏற்படுத்துவதாகக்’ கூறி இருந்தார்.
இந்தக் கொள்கையைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதை ஆதரிக்கவில்லை என்று டிரம்பிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் அவர் பின்னர் தெரிவித்தார். இறுதியில், சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூன் 2018-இல் இந்தக் கொள்கை அதிபரால் ரத்து செய்யப்பட்டது.
மெலனியாவின் முந்தைய செயல்பாடுகள்
பேராசிரியர் விஜில்-இன் கூற்றுபடி, மெலனியா டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று, அவரின் அரசியல் அனுபவமின்மை தான். அவரது அனுபவமற்ற மற்றும் சில சமயங்களில் விசுவாசமற்ற பணியாட்களும் சர்சைகளுக்கு வழிவகுத்தனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், மெலனியா டிரம்ப் தனது ‘பி பெஸ்ட்’ என்னும் முன்னெடுப்பின் மூலம் குழந்தைகள் நலனை ஊக்குவிப்பதிலும் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும் அமைதியாக மும்முரமாக ஈடுபட்டார்.
ஆனால் சமூக ஊடகங்களில் தனது கணவரின் ஆக்ரோஷமான கருத்துகளின் காரணமாக அவர் தன் இணையம் தொடர்பான முன்முயற்சியை கைவிட வேண்டி இருந்தது. 2016-இல் சி.பி.எஸ் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், “இணையத்தில் டிரம்ப் தன்னை முன்னிறுத்தும் விதம் அவரை சிக்கலில் சிக்க வைக்கிறது, ஆனால் அதிகமான பின்தொடர்பவர்களை ஈர்த்தது,” என்றார்.
அவர் போதைப்பொருள் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தினார். பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கான கல்வி நிதி திரட்ட ஒரு அறக்கட்டளையைத் துவங்கினார்.
அவர் இம்முறை வாஷிங்டனுக்குத் திரும்பியவுடன் இந்தப் பணிகள் தொடரும் என்று பல வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும் அவர் முழுநேரமாக அங்கு வசிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பேராசிரியர் விஜில் கூறுகையில், “அமெரிக்காவின் முதல் பெண்மணியின் பாத்திரம் பல ஆண்டுகளில் பல்வேறு மாற்றத்தை அடைந்திருக்கிறது. மெலனியா டிரம்ப் பொதுவெளியில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பார்,” என்றும் குறிப்பிட்டார்.
“அந்தத் தேர்வுகளைச் செய்வதில் அவர் அதிக விழிப்புணர்வுடன் இருக்கப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.