• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

“மேகேதாட்டு அணையை எதிர்த்தால் கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் ஓடாது” – வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை | Tamil films will not be released in Karnataka if we oppose Mekedatu Dam – Vatal Nagaraj warns

Byadmin

Mar 8, 2025


ஓசூர்: “கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் அறிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது,” என கன்னட சலுவாலி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா – மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மார்ச் 22-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடைபெறும் என்று கன்னட அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், மேகேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருவதால், இதனை கண்டித்து, கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்டோர் இன்று (மார்ச் 8) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக – கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆனேக்கல் போலீஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியது: “மகாராஷ்டிரா மாநிலத்தை மட்டுமல்ல, தமிழக அரசை கண்டித்தும் நாங்கள் பந்த்தில் ஈடுபட உள்ளோம். மேகேதாட்டு அணையைக் கட்ட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல, தமிழக தலைவர்கள் அனைவரும் மேகேதாட்டு அணைக்கு எதிராக இருக்கிறார்கள்.

ஒரு மாதத்துக்குள் அவ்வாறு தெரிவிக்காவிட்டால், முதல் போராட்டமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைப்படங்களை ஓட விடமாட்டோம். மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிராக தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு’ என்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்பில் எந்த தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையாது. அப்படி குறைந்தால் மத்திய அரசுக்கு எதிராக நாங்களும் போராடுவோம். தமிழகத்தில் நடக்கும் இந்தி போராட்டத்தை விட, கர்நாடகா மாநிலத்தில் இந்தி மொழிக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம்.

காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவே நாங்கள் மேகேதாட்டு அணையை கட்டுகிறோம். காவிரி, மேகேதாட்டு, மாதாயி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களை கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடக்கும்” என்று அவர் கூறினார்.



By admin