“நாம் நிறைய ‘மெலடி’ பாடல்களைக் கொடுத்திருக்கிறோம். வெவ்வேறு விதமான பாடல்களைத் தந்திருக்கிறோம். அதை யாரும் சுட்டிக்காட்ட மாட்டேன் என்கிறார்களே, கானா பாடல்களிலேயே முத்திரை குத்திவிட்டார்களே என்று ‘ஃபீல்’ பண்ணுவேன்.” என பிபிசி தமிழுக்கு 2023-ஆம் ஆண்டு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் தேவா.
தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவிற்கு நாளை (நவம்பர் 20) பிறந்தநாள். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் தேவாவும் ஒருவர்.
1989-ஆம் ஆண்டு வெளிவந்த மனசுக்கேத்த மகாராசா என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்கும் தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது. 2022-ஆம் ஆண்டு ‘தேவா தேவாதான்’ இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் இதை சிலாகித்துப் பேசியிருப்பார்.
கானா பாடல்களை திரையுலகில் மையநீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார். தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், X/Deva
“கானாக்கள் என் சிறப்பம்சமாக ஆகிவிட்டன. எத்தனையோ இசையமைப்பாளர்கள் ‘மெலடி’ பாடல்களைத் தருகிறார்கள். அவர்களில் ஒருவராகிப் போயிருப்பேன். ஆனால், கானா பாடல்களைத் தந்ததால்தான் வித்தியாசமாக நிற்கிறேன். உலகமெங்கும் வசிக்கும் தமிழ் மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் அந்த கானா பாடல்களைப் பயன்படுத்துவதைக் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.” என பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
எனக்கு “கானா ஒரு கண் என்றால் மெலடி ஒரு கண்” என சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார் தேவா.
கானா பாடல்கள், மெலடி பாடல்கள், பின்னணி இசை, ஹீரோ அறிமுகப் பாடல்கள் எனப் பல ஜனர்களில் தேவா தடம் பதித்துள்ளார். தேவா தனது திரைப்படங்கள் மட்டுமல்லாது பிற இசையமைப்பாளர்களுக்கும் பாடியுள்ளார்.
தேவா இசையமைத்த பல பாடல்கள் அவருடையது தான் எனத் தெரியாமலே கேட்கப்படுவதுண்டு. கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து திரைப்படத்திலும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது முதியவர் ஒருவர் ‘ராஜா ராஜாதான்’ எனக் குறிப்பிடுகையில் இளைஞர் ஒருவர் இது தேவா பாடல் எனப் பதிலளிப்பார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேவா இதைக் குறிப்பிட்டிருந்தார். “நான் ஒரு கச்சேரிக்காக சென்றபோது அதில் பாட இருந்த பாடல்களின் பட்டியலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கினேன். அதற்கு அவர் ‘உங்கள் பாடல்களை பாடுங்கள் எனக் கூறினார்’. தொடர்ந்து புல்வெளி புல்வெளி’ நீங்கள் இசையமைத்தா என என்னிடமே கேட்டார்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேடை நிகழ்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் தேவா பாடல்
பட மூலாதாரம், Thiyagarajan
படக்குறிப்பு, மேடை இசை பாடகர் தியாகராஜன்
“மேடை இசைக் கலைஞர்களுக்கு தேவா கடவுள் போன்றவர்,” என்கிறார் மேடை பாடகரான தியாகராஜன்.
கடந்த 40 ஆண்டுகளாக மேடை கச்சேரிகள் நடத்தி வரும் தியாகராஜன், திருநெல்வேலி மாவட்ட மேடை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். தேவாவுடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
திரைப்பாடல்களைக் கடந்து தேவாவின் பக்தி பாடல்களும் கச்சேரிகளில் பிரபலமானவை என அவர் குறிப்பிடுகிறார்.
“3 மணி நேர கச்சேரி நடந்தால் அதில் சுமார் 1.5 மணி நேரம் தேவா பாடல்கள்தான் ரசிகர்கள் கேட்பார்கள்.” என அவர் குறிப்பிட்டார்.
“90களில் தொடக்கத்தில் நாட்டுப்புற பாடல்களை மீண்டும் பிரபலமாக்கியதில் தேவாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. தேவா பாடகர்களை மட்டுமல்ல பல இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.” என்று தெரிவித்தார் தியாகராஜன்.
தற்போதும் ஊர்ப்புறங்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் தேவாவின் பாடல்கள் கட்டாயம் இடம்பெறும் எனக் கூறும் தியாகராஜன், “நாட்டுப் புற இசை, நவீன இசை எனப் பல ரகங்களில் தேவா இசையமைத்திருக்கிறார். அதனால் இன்றளவும் அவரின் பாடல்கள் மக்களால் கேட்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
“நடிகர்கள் ரஜினி, கமலுக்கு மட்டுமல்லாது விஜய் மற்றும் அஜித்தின் தொடக்க காலத்தில் பல படங்களில் தேவா பணியாற்றி பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். 90களின் பிரபலமான நடிகர்களை எடுத்துக் கொண்டால் தேவா உடன் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்திருப்பார்கள்.” என்றார்.
தேவாவின் காதல் பாடல், நாட்டுப்புற பாடல், மோட்டிவேஷன் பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலம் எனக் கூறும் தியாகராஜன், தமிழ்நாட்டில் மேடை கச்சேரிகளில் எதிரொலித்த தேவா பாடல்களை பட்டியலிட்டார்.
பட மூலாதாரம், Deva/X
கவலைப்படாதே சகோதரா
காதல் கோட்டை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் படம் நடிகர் அஜித், நடிகை தேவையானிக்கு மட்டுமல்ல தேவாவின் கரியரிலும் முக்கியமான ஒன்று.
கடிதம் வழியாக மட்டுமே கதாநாயகனும் கதாநாயகியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் சந்தித்துக் கொள்கிறார்கள், இதற்கிடையே படத்திற்கு நடுவே ஏக்கத்தில் இருக்கும் கதாநாயகனுக்கு ஆறுதல் சொல்வதைப் போல இந்தப் பாடல் அமைந்திருக்கும். இந்தப் பாடலை தேவாவே பாடியிருப்பார்.
வெற்றி நிச்சயம்
அண்ணாமலை படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இரண்டு நெருக்கமான நண்பர்களாக, செல்வந்த பின்னணி கொண்டவராக நடிகர் சரத்பாபுவும் எளிய பின்னணி கொண்டவராக நடிகர் ரஜினிகாந்தும் நடித்திருப்பார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் எதிரிகளாக மாற வேண்டிய நிலை உருவானது. சரத்பாபுவிடம் ரஜினிகாந்த் கூறுவதைப் போல இந்தப் பாடல் அமைந்திருக்கும்.
காதலா காதலா
அவ்வை சண்முகி படத்தில் இந்த மெலடி பாடல் இடம்பெற்றிருக்கும். ஒரே பாடலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என இருவரையும் உணர்வுகளையும் கடத்திருக்கும் வகை பாடல்களில் இது மிகவும் பிரபலமானது.
பிரியா பிரியா
1993-ஆம் ஆண்டு வெளியான கட்டபொம்மன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்.பி பாலசுப்ரமணியன் மற்றும் கே.எஸ்.சித்ரா பாடியிருப்பார்கள். கச்சேரிகளில் மட்டுமல்ல பேருந்துகளின் ப்ளே லிஸ்டுகளிலும் இந்தப் பாடல் தவறாது இடம்பெற்றிருக்கும்.
முத்துநகையே முழு நிலவே
நடிகர் சரத்குமார் நடித்துள்ள சாமுண்டி படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்.பி பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். சரத்குமார்-தேவா காம்பினேஷனில் ஹிட்டான பாடல்களில் இதுவும் ஒன்று.
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
நடிகர் சரத்குமார் மற்றும் சுகண்யா நடித்த மகாபிரபு படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்.பி பாலசுப்ரமணியன் – தேவா காம்பினேஷனில் ஹிட் அடித்த மெலடி பாடல்களில் இதுவும் ஒன்று.
பட மூலாதாரம், deva/instagram
நலம் நலமறிய ஆவல்
காதல்கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மெலடி பாடல் இது தான். கதாநாயகன், கதாநாயகி இருவரும் கடிதத்தின் மூலம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி எழுதப்படும் கடிதம் ஒன்றை அடிப்படையாக வைத்தே பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.
உன் பேர் சொல்ல ஆசை தான்
நடிகர் விஜய் நடித்துள்ள மின்சார கண்ணா படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். தேவா-ஹரிஹரன் கூட்டணியில் ஹிட் அடித்த மெலடி பாடல்களில் இதுவும் ஒன்று. சேர முடியாத காதலர்கள் தங்களின் ஆசைகளை வெளிப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கும்.
பஞ்சி மிட்டாய் சேலை கட்டி
சமீப நாட்களில் இந்தப் பாடல் இணையம் முழுவதும் ட்ரெண்ட் ஆன ஒன்று. நடிகர்கள் நெப்போலியன், குஷ்பூ மற்றும் ஊர்வசி நடித்த எட்டுப்பட்டி ராசா படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும்.
கரு கரு கருப்பாயி
இந்தப் பாடல் லியோ படத்தில் இடம்பெற்றதன் மூலம் மீண்டும் பிரபலமானது. 2000-ஆம் ஆண்டு வெளியான ஏழையின் சிரிப்பில் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். நடிகர்கள் பிரபுதேவா மற்றும் கௌசல்யா இதில் நடித்திருப்பார்கள்.