மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர அணைக்கு நேற்று முன்தினம் மாலை 7,769 கனஅடியாகவும், நேற்று காலை 7,591 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று மாலை 12,614 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியிலிருந்து 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 118.70 அடியாகவும், நீர் இருப்பு 91.41 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லில்… தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 8,000 கனஅடியாக பதிவான நீர் வரத்து நேற்று காலை 9,500 கனஅடியாகவும், பகல் 1 மணியளவில் 16 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 18 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்