• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல் நடத்தி முடிக்க முடிவு!

Byadmin

Apr 13, 2025


உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே ஏற்று – அந்த உத்தரவுப்படி உரிய வேட்புமனுக்களை சேர்த்துக் கொண்டு – அதன் அடிப்படையில் திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மே 6ஆம் திகதி முழுமையாக நடத்தி முடிப்பதற்குத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.

இன்று காலை தேர்தல் ஆணைக்குழுவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தேர்தலை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை உள்வாங்கி, அந்த நீதிமன்றம் குறிப்பிட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டு, அவற்றையும் சேர்த்து மே 6ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை ஒன்றாக நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று பிற்பகலில் தேர்தல் ஆணையம் வழிகாட்டல் வழங்கி இருப்பதாகத் தெரியவருகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுகள் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுக்கு முரணாக இருக்கின்றமையால் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்திடம் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று யோசனையை இன்று காலை சட்டமா அதிபருடனான கலந்துரையாடலின் பின்னர் தேர்தல் ஆணையம் கைவிட்டு விட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுயாதீனத் தரப்புகள், ஜனநாயக விடயங்களில் ஈடுபாடு உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்கள் போன்றவை உயர்நீதிமன்றத்திடம் முறையீடு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகத் தெரிகின்றது.

இது நீதிமன்ற விடுமுறை காலமாயினும் நாட்டின் ஜனநாயக விழுமியத்தை பாதிக்கும் மோசமான நடவடிக்கைகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று கருதப்படுவதால், இந்தச் சமயத்திலும் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட வேண்டும் என்று சில தரப்புகள் முனைப்பாக இருக்கின்றன என்று கூறப்படுகின்றது.

பிறப்புச் சான்றிதழ் விவகாரத்தை ஒட்டி பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்த தரப்புகளுக்கு மாத்திரம் நிவாரணத்தை வழங்கி, மற்றத் தரப்புகளை தேர்தலில் போட்டியிடாத நிலையை உறுதிப்படுத்தி, இந்த விடயத்தில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வது குறித்து பலதரப்பினரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இப்போது ஏற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ள வேட்புமனுக்கள் தொடர்பான விடயத்தில், அதேபோன்ற பாதிப்பை வேறு தரப்புகள் எதிர்கொண்டு இருந்தால், அவர்களும் இனிமேல் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் போய் அதேபோன்ற நிவாரணத்தைப்  பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என்றும் சட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கான கால அவகாசம் இன்னும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அப்படி புதிய தரப்புகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடத் தொடங்கினால் தேர்தலைக் குறிப்பிட்ட திகதியில் தேர்தல் ஆணையம் நடத்தி முடிப்பது சிக்கலானதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

By admin