0
மேற்கு இலண்டனில் உள்ள HMP Wormwood Scrubs சிறைச்சாலை முன்பு, பாலஸ்தீன் ஆதரவு அமைப்பான Palestine Action தொடர்புடைய ஒரு கைதியை ஆதரித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Metropolitan Police தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறை வளாகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி போராட்டக்காரர்கள் குழுவை தடுத்து வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் உத்தரவை மீறி அந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்ததுடன், சிறை பணியாளர்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் தடையூட்டியதாகவும், பொலிஸ் அதிகாரிகளை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் சிறை கட்டடத்தின் ஊழியர் நுழைவுப் பகுதிக்குள் செல்வதிலும் வெற்றி பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் மீது கடுமையான சட்டவிரோத நுழைவு குற்றச்சாட்டின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், சிறை முன்பு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் நிற்பதும், சிலர் பலகைகள் ஏந்தியிருப்பதும் காணப்படுகிறது.
ஒரு கட்டத்தில், அந்தக் குழு ஒரு கட்டடத்தை நோக்கி நகரும் காட்சிகளும், சிலர் உள்ளே சென்றதாகத் தோன்றும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்த போராட்டம், Prisoners for Palestine என்ற உண்ணாவிரத இயக்கத்தில் தற்போது பங்கேற்று வரும் கடைசி கைதியாகக் கூறப்படும் Umer Khalid என்பவருக்கு ஆதரவாக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.