• Tue. Nov 5th, 2024

24×7 Live News

Apdin News

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் பழுதால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் | Flood water surrounds residences due to broken gate shutters in bhavani river

Byadmin

Nov 5, 2024


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் திடீரென பழுது ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 82 அடியில் இருந்து ஒரே நாளில் 9 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 91 அடியாக உயர்ந்தது.

இதனிடையே பில்லூர் அணைக்கு வரும் நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. சுமார் 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சமயபுரம், வெள்ளிப்பாளையம் தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு தண்ணீர் மீண்டும் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை செய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக கல்லாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீரால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெள்ளிப்பாளையம் தடுப்பணையில் வெள்ள நீர்.

இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த வெள்ளிப்பாளையம் மின் உற்பத்தி நிலைய தடுப்பணையில் உள்ள தண்ணீரை ஷட்டர்கள் மூலம் திறந்துவிட அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் திடீரென தண்ணீர் வெளியேற்ற முடியாத வகையில் தடுப்பணையின் ஷட்டர்கள் அடைத்து கொண்டன. இதனால் பவானி ஆற்றில் இருந்து வந்த நீர் ஆற்றுக்கு திருப்பி விட முடியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

இதனிடையே சிக்கதாசம்பாளையம், ஓடந்துறை ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த நீரால் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக எடுத்தும் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 41 பேர் அருகில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் கதவணை ஷட்டர்கள் சரி செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் நீர் சென்றதால் வெள்ள நீர் வடிந்தது. இதுபற்றி தகவலறிந்த மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா, தலைவர் மெஹரீபா பர்வீன் ஆகியோர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.



By admin