மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார்.
பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா தலைவர்கள் முன்னிலையில், அவர் வங்காள மொழியில் பதவியேற்றார்.
சுவேந்து அதிகாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று காலையில், “இது மேற்கு வங்கத்திற்கு உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காலைப்பொழுதாகும். தொலைநோக்குச் சிந்தனையாளரான தலைவர், பிரதமர் நரேந்திர மோதியை ‘மகிழ்ச்சியின் நகரத்திற்கு’ (City of Joy) வரவேற்பது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு தருணமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், மேற்கு வங்கத்தில் அமையப்பெறும் முதல் பாஜக அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவை இன்று நாம் காணும்போது, நமது தேசத்தை உருவாக்கிய முன்னோடிகளின் கனவுகள் நனவாவதை நாம் காண்கிறோம்.” என்று பதிவிட்டிருந்தார்.
“வரவேற்கிறோம், பிரதமரே,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையைத் தகர்த்து பாஜக ஆட்சியைப் பிடிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அந்தப் பெருமை பெரிய அளவில் சுவேந்து அதிகாரியையே சாரும்.
மேற்கு வங்கத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக முதல் முறையாக அரசு அமைத்துள்ளது.
தனது அரசியல் செயல்பாடுகள் மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறை காரணமாகக் கட்சியின் மத்திய தலைமையின் செல்லப் பிள்ளையாக சுவேந்து மாறியுள்ளார்.
சுவேந்து 2020 வரை மமதா பானர்ஜியின் வலதுகரமாக கருதப்பட்டார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அபிஷேக் பானர்ஜியின் செல்வாக்கு அதிகரித்ததால், சுவேந்து மெல்லமெல்ல ஓரங்கட்டப்பட்டார். 2021 தேர்தலுக்குச் சற்று முன்னதாக அவர் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த நான்கு மாதங்களுக்குள் நடந்த அந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில், சுவேந்து அதிகாரி கட்சியின் பலத்தை 3 இடங்களிலிருந்து 77 இடங்களுக்கு உயர்த்தினார்.
அப்போது கட்சியின் மத்திய தலைவர்கள் ‘இந்த முறை இருநூறைத் தாண்டுவோம்’ (அப்கி பார் தோ சௌ பார்) என்று முழக்கமிட்டனர். அந்தக் கனவு அப்போது நிறைவேறவில்லை. ஆனால் 3 இடங்களிலிருந்து 77 இடங்களுக்குச் சென்றது பாஜகவுக்கு ஒரு பெரிய சாதனையாகவே இருந்தது.
இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மமதா பானர்ஜியின் 15 ஆண்டுகால அரசை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு, முதல் முறையாக வங்காளத்தில் ஆட்சியை பாஜக பிடித்துள்ளது.
பட மூலாதாரம், Sanjay Das
படக்குறிப்பு, 2021-இல் வெற்றி பெற்ற பிறகு அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக்கப்பட்டார்.
களத்தில் நின்ற சுவேந்து அதிகாரி
இதன் மூலம் ‘அங்க-பங்க மற்றும் கலிங்கம்’ (பிஹார், வங்காளம் மற்றும் ஒடிசா) ஆகியவற்றை கைப்பற்றும் பாஜகவின் பழைய கனவு நனவாகியுள்ளது. இவற்றில் அங்கத்தையும் கலிங்கத்தையும் ஏற்கெனவே பாஜக வைத்திருந்தது. ஆனால் முதல் முறையாக வங்காளத்தையும் (பங்கம்) அது கைப்பற்றியுள்ளது.
கட்சியின் இந்தக் கனவை நனவாக்கப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும், வங்காளத்தில் நேரடியாகக் களமிறங்கி அதற்கான அடித்தளத்தைத் தயார் செய்ததில் சுவேந்துவின் பங்கு மிக முக்கியமானது.
2021-இல் வெற்றி பெற்ற பிறகு அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். திரிணாமுல் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளிலும் தனது போராட்டங்கள் மூலம் பாஜகவின் செல்வாக்கைத் தொடர்ந்து வலுப்படுத்தி வந்தார்.
எம்எல்ஏ, இருமுறை எம்பி, மமதா பானர்ஜி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சரான சுவேந்து அதிகாரியின் பெயர், 2020 டிசம்பருக்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு வெளியே யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஆனால் அதே மாதத்தில் பாஜகவில் இணைந்ததும், சில மாதங்களுக்குப் பிறகு நடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மமதா பானர்ஜியைத் தோற்கடித்ததும், அவர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக உருவெடுக்க வழிவகுத்தது.
பட மூலாதாரம், Sanjay Das
படக்குறிப்பு, சுவேந்து அதிகாரி நந்திகிராம் போராட்டத்தின் சூத்திரதாரி என்றும் அழைக்கப்படுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இரண்டாம் இடம் வகித்த போது
இருப்பினும் அவரது செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. கட்சியிலும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மத்திய தலைமை அவருக்கு அளித்த முக்கியத்துவத்தால் பல பழைய தலைவர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர்.
ஆனால், வெற்றி என்பது அனைத்துக் குறைகளையும் மறைத்துவிடும் என்று சொல்வார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய தலைமை அவருக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தது. வங்காளம் தொடர்பான கட்சியின் கொள்கை முடிவுகளில் அவரது கருத்து முக்கியமாக இருந்தது.
சுவேந்து 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு 2009-இல் அவர் தம்லுக் தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 தேர்தலிலும் தனது இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்டார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்று மமதா அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சரானார். மெல்லமெல்ல அவர் அரசில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அவரது அரசியல் வாழ்க்கை மாணவர் பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. பட்டப்படிப்பு படிக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்தார்.
1989-இல் அவர் காங்கிரஸின் மாணவர் அமைப்பான சத்ர பரிஷத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவேந்து தனது 36-வது வயதில் 2006-இல் முதல் முறையாக காந்தி தெற்குத் தொகுதியில் எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு அதே ஆண்டு அவர் காந்தி நகராட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். சுவேந்து 2009 மற்றும் 2014-இல் தம்லுக் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஆனால் 2016-இல் மமதா அவரை நந்திகிராம் தொகுதியில் களம் இறக்கினார், அவர் எளிதாக வெற்றி பெற்றார். சுவேந்துவின் அரசியல் வாழ்க்கை 1990-களிலேயே தொடங்கினாலும், 2007 நந்திகிராம் நிலக் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் தான் அவருக்கு ஒரு வலிமையான தலைவர் என்ற அடையாளத்தைத் தேடித்தந்தது.
பட மூலாதாரம், Sanjay Das
படக்குறிப்பு, கிழக்கு மேதினிப்பூர் மாவட்டம் அதிகாரி குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
நந்திகிராம் போராட்டத்தின் சூத்திரதாரி
அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத எம்பியாக இருந்த சுவேந்து, தனது ஆளுமைத் திறன் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் திரிணாமுல் காங்கிரஸில் ஒரு அதிகார மையமாக மாறினார்.
கிழக்கு மேதினிப்பூர் மாவட்டம் சுவேந்து அதிகாரி குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சுவேந்துவின் தந்தை மற்றும் சகோதரரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எம்பி மற்றும் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று வந்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டு வந்த நந்திகிராம் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் சுவேந்து தான் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2007-இல் காந்தி தெற்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தபோது, அப்போதைய இடதுசாரி முன்னணி அரசுக்கு எதிராக நில வெளியேற்ற எதிர்ப்பு கமிட்டியின் (பூமி உச்சேத் பிரதிஹோத் கமிட்டி) கீழ் உள்ளூர் மக்களைத் திரட்டுவதில் அவரது பங்கு மிக முக்கியமானது.
அந்தச் சமயத்தில் ஹால்டியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் லட்சுமண் சேத்தின் ஆதிக்கம் அந்தப் பகுதியில் அதிகமாக இருந்தது.
சுவேந்துவின் போராட்டத்தினால் தான் அந்தப் பகுதியின் மிக வலிமையான தலைவராக இருந்த சேத் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
பட மூலாதாரம், Sanjay Das
‘ஜங்கிள்மஹால்’ என்று அழைக்கப்படும் மேற்கு மேதினிப்பூர், புரூலியா மற்றும் பாங்குரா மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸிற்குப் பலமான அடித்தளத்தை உருவாக்கியதிலும் சுவேந்துவின் பங்கு இருந்தது. இப்போது அவரால்தான் பாஜக அந்தப் பகுதிகளில் இதுவரை இல்லாத சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது.
சுவேந்து தனது அரசியல் ஆசைகள் காரணமாகவே திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகினார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், பல ஊழல் வழக்குகளில் சிக்கியதால், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவே அவர் பாஜகவில் இணைந்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது தீவிரச் செயல்பாடுகளால், திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்கு மிக்க கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் பாஜக ஊடுருவிப் பல இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. இதில் சுவேந்து அதிகாரியின் பங்களிப்பு அதிகம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மமதா பானர்ஜி அரசில் நம்பர் டூ-வாக இருந்த சுவேந்து, இப்போது பாஜக சார்பில் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.