• Sun. Mar 23rd, 2025

24×7 Live News

Apdin News

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறப்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்: கோட்டாட்சியர் | Melpathi Draupadi Amman Temple will open soon

Byadmin

Mar 22, 2025


விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை பின்பற்றி நடப்பதாக இருதரப்பினரும் உறுதியளித்துள்ளனர்.

மேல்பாதி திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7 ஆம் தேதி வருவாய்த்துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டதன் பேரில், 2024, மார்ச்22 ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகாலப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் போட்டப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.

இதுதொடர்பான சமாதானக் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்ச் 19 ஆம் தேதி நடத்தி முடிவெடுக்கப்படாமல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை தொடங்கி இரவுவரை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியர் முருகேசன் கூடுதல் எஸ்.பி. திருமால், விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார்,வட்டாட்சியர் கனிமொழி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடர்பாக சமாதானம் செய்வதாக ஒப்புக் கொண்டனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யார் யாரையும் தடை செய்யமாட்டோம் எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் முருகேசன் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக கோயில் பக்தர்கள் தரிசனமின்றி பூட்டிக் கிடப்பதால், கோயில் வளாகத்திலுள்ள முள்புதர்களை அகற்றி தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டியிருப்பதாலும் சில நாள்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் கோயிலைத் திறப்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த நாளிலிருந்து அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம் என்றார்



By admin