0
நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘படை தலைவன்’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் யு. அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ படை தலைவன் ‘ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜய்காந்த், கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த் , கருடன் ராம், ரிஷி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஜே கம்பைன்ஸ் – தாஸ் பிக்சர்ஸ் – ஓபன் தியேட்டர் – டைரக்டர்ஸ் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரசிகர்கள் மகிழும் வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் – அவருடைய கலை உலக வாரிசான ‘படை தலைவனை’ காண ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இதனால் இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் ஓரளவிற்கு வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.