• Mon. Oct 28th, 2024

24×7 Live News

Apdin News

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் ஆவணங்களை ஐகோர்ட் கிளைக்கு மாற்ற உத்தரவு  | High Court order on Scool Education

Byadmin

Oct 28, 2024


மதுரை: மைக்கேல்பேட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவி தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பின்னர், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகி சகாயமேரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘மாணவி உயிரிழப்பிற்கும், எனக்கும் தொடர்பும் இல்லை. அவரை, மதம் மாற யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில், என் மீது விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், ”நன்கு படிக்கும் மாணவியை பிற வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தியதால் அவர் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் வழக்கை ரத்து செய்யக்கூடாது. அதே நேரத்தில் மாணவியை மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை” என வாதிடப்பட்டது.

வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து மாணவியின் தந்தை தரப்பில இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ”விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தஞ்சை மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.



By admin