சென்னை: மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பின்னர் பேசியதாவது: “தமிழ்நாடு ‘இயல் இசை நாடக’ மன்றத்தின் சார்பில், நடைபெறக்கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு, தலைசிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி, பாராட்டுகின்ற வாய்ப்பை பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுடைய கலையை – கலைத் தொண்டை – இத்தனை ஆண்டு காலம் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அந்த உழைப்பை – அரசு அங்கீகரித்து போற்றக்கூடிய இந்தப் பாராட்டுதான் தலைசிறந்த பாராட்டு. 2021 – 2022 – 2023 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து, பல்வேறு கலைப் பிரிவுகளில் விருதுகளை வழங்கி நானும் பெருமை அடைகிறேன்.
இங்கே விருது பெற்றிருக்கின்ற பெரும்பாலானோர் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர்கள் தான். பலருடைய கலைத்தொண்டு பற்றியும் எனக்குத் தெரியும். மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு, மிகச் சரியானவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
நீங்களே பார்க்கலாம். 90 வயதான மதிப்பிற்குரிய முத்துக்கண்ணம்மாள் அவர்களும் விருது பெறுகிறார்கள். இளம் இசை அமைப்பாளர் அனிருத் அவர்களும் விருது பெறுகிறார். அந்த வகையில், மிகச் சிறப்பான விழா இந்த விழா.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் தங்கத்தின் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும். ராக்கெட் வேகத்தில், ஒருநாளைக்கு இரண்டு முறை விலை ஏறிக்கொண்டு இருக்கிறது. இந்த விருது அறிவித்த அன்றைக்கு இருந்த தங்கத்தின் விலையும், இன்றைக்கு இருக்கக்கூடிய விலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். ஆனால், அவ்வளவு மதிப்புமிக்க தங்கத்தைவிட, “கலைமாமணி” என்று புகழ் சேர்க்கும் பட்டத்திற்குத்தான் மதிப்பு அதிகம். ஏனென்றால், இது தமிழ்நாடு தருகின்ற பட்டம்.
கலைஞர் வழியில், கலைஞர்களை போற்றும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. கலைஞரின் அரசு கலைகளைப் போற்றும் அரசாக, முத்தமிழைப் போற்றும் அரசாகத்தான் எப்போதும் இருக்கும். அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுதான், சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இசைஞானி இளையராஜாவுக்கு, திராவிட மாடல் அரசு எடுத்த மாபெரும் பாராட்டு விழா.
உலகில் எந்தக் கலைஞருக்கும், எந்த அரசாங்கமும் இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தியதில்லை என்று இசைஞானியே குறிப்பிட்டார். “என் மீது ஏன் இவ்வளவு பாசம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று சொன்னார்.
இசைஞானி மீது நமக்கு இருப்பது கலைப் பாசம் – தமிழ்ப் பாசம் – தமிழர் என்கிற பாசம். அதனால்தான், அந்த விழாவை எடுத்தோம். இன்று உங்களுக்கும் அதே பாசத்தின் அடிப்படையில்தான், விருதுகள் வழங்குகிறோம். மூன்று தமிழையும் வளர்த்த இயக்கம்தான், திராவிட இயக்கம். திராவிட இயக்கம் – மேடைத் தமிழை வளப்படுத்தியது. நாடகத் தமிழை வளர்த்து, சமூகத்தையே பண்படுத்தியது. இசைத் தமிழையும் வளர்த்தது; அது தமிழிசையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியுடன் இந்தக் கலைகளும் வளர்ந்தது என்று சொல்லப்படுவதுதான் இந்த வரலாறு.
இந்தக் கலைகள், தமிழை வளர்க்கும் பெரும் தொண்டைச் செய்தது – செய்து கொண்டிருக்கிறது. கருத்து – கொள்கை – பாணி – பரப்புரை ஆகிய அனைத்தையும் நாடகக் கலையில் நுழைத்தது நம்முடைய திராவிட இயக்கம் தான். எழுத்தும், பேச்சும், இலக்கியமும், கலையும், மொழியை வளர்க்கின்றது. மொழியைக் காக்கின்றது. மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம்.
தமிழர் என்ற தகுதியையும், சுயமரியாதையையும் இழந்து, வாழ்வதில் என்ன பயன்? அதனால், கலைகளைக் காப்போம். மொழியைக் காப்போம். இனத்தைக் காப்போம். அடையாளத்தை காப்போம். நம்முடைய கலைஞர்கள், இங்கே மட்டுமல்ல, உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும். தமிழ்க் கலைகளை பரப்பவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் இயல் – இசை – நாடக மன்றம் செய்யவேண்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.