பட மூலாதாரம், Getty Images
ஒரு பரபரப்பான இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால் இந்திய அணியின் வெற்றியை விட, இந்திய வீரர்கள் கோப்பையைப் பெற மறுத்ததைப் பற்றிய விவாதம்தான் கிரிக்கெட் உலகில் அதிகமாக உள்ளது.
இந்த மறுப்புக்கு பின்னால் உள்ள காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் மொஷின் நக்வி தான்.
போட்டியை வென்ற பிறகு, பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இந்திய அணி முன்வராத போது, “இந்திய வீரர்கள் ஏசிசி தலைவர் மொஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற வேண்டாம்” என்று முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறினார்.
செய்தி முகமையான ஏஎன்ஐ-யிடம் பேசிய அவர், இதற்கான காரணத்தை விளக்கினார். “மொஷின் நக்வி பாகிஸ்தானின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். அதனால்தான் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தோம்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு, ‘ஒரு சிறந்த இறுதிப் போட்டியைக் காண ஆவலாக இருப்பதாகவும், வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை ஒப்படைக்கக் காத்திருப்பதாகவும்’ நக்வி கூறியிருந்தார்.
ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
பிரதமர் மோதியின் பதிவுக்கான பதில்
பிரதமர் நரேந்திர மோதியின் சமூக ஊடகப் பதிவிற்கு நக்வி பதிலளித்திருப்பதும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
“விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். ஆனால் முடிவு ஒன்று தான் – இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்,” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “போர் தான் பெருமைக்கான உங்களின் அளவீடு என்றால் பாகிஸ்தானிடம் இந்தியா பெற்ற அவமானகரமான தோல்வியை வரலாறு பதிவு செய்துள்ளது, அதை எந்த கிரிக்கெட் போட்டியாலும் மாற்ற முடியாது. விளையாட்டிற்குள் போரை இழுப்பது ஏமாற்றமளிக்கிறது மற்றும் விளையாட்டு உத்வேகத்தை அவமதிப்பதாக உள்ளது.” என மொஷின் நக்வி பதிவிட்டுள்ளார்.
யார் இந்த மொஷின் நக்வி?
பட மூலாதாரம், Getty Images
நக்வி தற்போது மூன்று முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ளார், அவர் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பையும் வகிக்கிறார்.
பிபிசி உருது செய்தியின்படி, சையத் மொஷின் நக்வி 1978ஆம் ஆண்டு லாகூரில் பிறந்தார். அவரது குடும்பம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜாங் நகரைச் சேர்ந்தது. அவர் தனது ஆரம்பக் கல்வியை கிரசண்ட் மாடல் பள்ளியில் பயின்றார், பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் (ஜிசி) பயின்றார். அங்கு பட்டம் பெற்ற பிறகு, உயர்கல்விக்காக அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் நக்வி.
அமெரிக்காவில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்ற அவர், அதன் பிறகு அமெரிக்க செய்தி சேனலான சிஎன்என்-இல் தனது இன்டர்ன்ஷிப்பை முடித்தார்.
பத்திரிகைத் துறையில் நுழைதல்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனலான சிஎன்என் செய்தி தயாரிப்பாளராக நக்வியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. அதன் பின்னர், அவர் இளம் வயதிலேயே பதவி உயர்வு பெற்று, சிஎன்என் சேனலின் தெற்காசிய பிராந்தியத் தலைவர் என்ற பதவியை அடைந்தார்.
அது 9/11 தாக்குதலுக்குப் (செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுரத்தின் மீதான விமான தாக்குதல்) பிந்தைய காலகட்டம், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. அப்போது, மொஷின் நக்வி சிஎன்என்-க்காக செய்தி சேகரித்து வந்தார். அந்த சமயத்தில், முக்கிய நபர்களின் நட்பு அவருக்கு கிடைத்தது.
நக்வியின் LinkedIn சுயவிவரத்தின்படி, அவர் 2009 வரை சிஎன்என்-இல் பணிபுரிந்தார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் ‘சிட்டி நியூஸ் நெட்வொர்க்’ எனும் ஊடக நிறுவனத்தைத் தொடங்கி, பத்திரிகைத் தொழிலில் சுயாதீனமாக செயல்படத் தொடங்கினார். அவருக்கு அப்போது வெறும் 31 வயதுதான்.
சையத் மொஷின் நக்வியின் குடும்பத்தினர் ஒரு தனியார் தொலைக்காட்சியை சொந்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் தற்போதைய அதிபருமான ஆசிப் அலி சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவராக நக்வி கருதப்படுகிறார்.
பாகிஸ்தான் பஞ்சாபின் தற்காலிக முதலமைச்சர் பதவி
2023ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவருமான பர்வேஸ் இலாஹி சட்டமன்றத்தைக் கலைத்தபோது, புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒரு தற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டிய சூழல் இருந்தது.
அத்தகைய சூழ்நிலையில், அப்போதைய பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவரும், ஷெபாஸ் ஷெரீப்பின் மகனுமான ஹம்சா ஷெபாஸ், தற்காலிக முதல்வர் பதவிக்கு இரண்டு பெயர்களை பரிந்துரைத்திருந்தார், அதில் ஒருவர் மொஷின் நக்வி.
ஆனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ‘யார் தற்காலிக முதல்வர்’ என்பதில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாத போது, இந்த விஷயம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றது. பின்னர் ஆணையம் நக்வியின் பெயரை அங்கீகரித்தது.
நக்வி, 22 ஜனவரி 2023 முதல் 26 பிப்ரவரி 2024 வரை பஞ்சாபின் தற்காலிக முதலமைச்சராக இருந்தார்.
2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பாகிஸ்தானில் அமைக்கப்பட்ட போது, நக்விக்கு நாட்டின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்
பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 2024இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) 37வது தலைவராக மொஷின் நக்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிபி-இன் தலைவராக அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் நக்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நக்வியின் தகுதிகள் குறித்த கேள்விகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து, நக்வியின் தகுதிகள் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களே இந்தக் கேள்விகளை எழுப்புகின்றனர்.
உதாரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில், ராவல்பிண்டியில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்த பிறகு நக்வி மீது அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் விமர்சனங்களை முன்வைத்தது.
“மற்ற விளையாட்டுகளைப் போலவே, கிரிக்கெட்டும் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த அழிவுக்குக் காரணம் பிசிபி தலைவர் பதவிக்கு முற்றிலும் தகுதியற்ற ஒருவரை நியமித்ததே” என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான சையத் அலி ஜாபர் விமர்சித்துள்ளார். நக்வி ராஜினாமா செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Reuters
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெசாத் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் நக்வி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குள் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றால் அது நக்விதான் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது, ஆனால் அத்தகைய மாற்றங்கள் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அவர் இதுவரை செய்த விஷயங்கள், அவருக்கு கிரிக்கெட் பற்றிய புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது” என்று அவர் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் நக்வியை விமர்சிப்பவர்களில் ஒருவர்.
செப்டம்பர் 2024இல் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, “தொலைக்காட்சியில் முழு தேசமும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கும் ஒரே விளையாட்டு கிரிக்கெட், ஆனால் அதுவும் சக்திவாய்ந்த அதிகாரிகளால் அழிக்கப்படுகிறது. கிரிக்கெட் மீதான தங்கள் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள, இந்த அதிகாரிகள் ஒரு திறமையற்ற நபரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமையில் அமர்த்தியுள்ளனர்.” என்று ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார் இம்ரான் கான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.