சமுதாய தலைவர், கல்வியாளர், கட்சி தலைவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் ஏ.சி.சண்முகம். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, எம்ஜிஆரின் அன்பைப் பெற்று அதிமுகவில் முன்னணி தலைவராக விளங்கி, தற்போது புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருக்கும் ஏ.சி.எஸ்., ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து…
திராவிட இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நீங்கள், தமிழக மாணவர்கள் இந்தி படிக்காததால், கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிவிட்டதாக கூறுவது முரண்பாடாக உள்ளதே..?
இந்தியாவின் தொடர்பு மொழியான இந்தியைப் படிக்காததால், நாடு முழுவதும் அரசியல், தொழில், வணிகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் நாம் பின்தங்கி விட்டோம். ஆனால், மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றிய மாநிலங்கள் வளர்ந்து உள்ளன. எங்களது கல்லூரிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள், இந்தி தெரியாததால், இந்தியாவில் பணியாற்ற விரும்பினாலும், முடியாத சூழல் உள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இப்போதும் எதிர்ப்பு உள்ளதே?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தபால் அலுவலகம் மீது கல்லடித்து போராட்டத்தில் ஈடுபட்டவன் நான். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் தப்பியவன். அப்படிப்பட்ட போராட்டங்களால், தமிழகத்தில் மூன்று தலைமுறையினர் இந்தி தெரியாமல் வளர்ந்து விட்டனர். இந்தி படிக்காததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து என் அனுபவத்தில் தெரிந்து கொண்டுள்ளேன். எனவே, இனியும் திராவிடம் என்ற பெயரில் இந்தி படிக்கக் கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது. நமது 40 எம்.பி-க்களையும் ரகசியமாக, மனசாட்சிப்படி வாக்களிக்கச் சொன்னால், இந்தி வேண்டும் என்று தான் வாக்களிப்பார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கு என்ன காரணம்?
நான் புதிய கட்சி ஆரம்பித்தாலும் எனது தாய் வீடாக அதிமுகவை நினைக்கிறேன். கூட்டணி, நிர்வாகிகளின் தவறு உள்ளிட்டவை வாக்கு சரிவுக்குக் காரணமாக இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு, எம்ஜிஆர் வாக்கு வாங்கி சரிந்து விட்டது, இரட்டை இலைக்கான மவுஸ் குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்று சொல்லும் அமித் ஷா, இபிஎஸ் தான் முதல்வர் என்று தெளிவுபடுத்தாமல் இருக்கிறாரே?
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் என்டிஏ இயங்குகிறது என்றால், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்பதே பொருள். இதில் ஒன்றும் குழப்பம் இல்லை. தொகுதி பங்கீட்டின்போதே, அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளை அதிமுக பெற்று விடும்.
எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கிய போது கிடைத்த வரவேற்பையும் விஜய்க்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் ஒப்பிட முடியுமா?
திமுகவிலிருந்து எம்ஜிஆரை நீக்கிய போது தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ரோட்டுக்கு வந்துவிட்டனர். எனவே. விஜய் உடன் அவரை ஒப்பிட முடியாது. விஜய்க்கு என இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு சட்டமன்ற தொகுதியில் 25 ஆயிரத்தில் இருந்து, 40 ஆயிரம் வாக்குகள் வரை அவருக்கு உறுதியாகக் கிடைக்கும்.ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தாலும், அந்த வாக்குகள் வேறு கட்சிக்குப் போகாது. அந்த அளவுக்கு அவர் மீது பற்றாக, வெறியாக இருக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவுடன் பயணித்துள்ள நீங்கள் அதனால் பெற்றது என்ன… இழந்தது என்ன?
நான்கு ஐந்து தேர்தல்களில் போட்டியிட்டு இழந்துள்ளேன். கஷ்டப்பட்டுள்ளேன். வரவு என்று எதுவும் இல்லை. அதேசமயம், புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து நான் மதிக்கும் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தான். விஸ்வகுருவாக அவரை ஏற்றுக் கொள்கிறேன். பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியா அடைந்துள்ள பெரும் வளர்ச்சியை உணர முடிகிறது. பிரதமர் மோடி தான் இதற்கெல்லாம் காரணம். வரவு செலவு பார்ப்பதை விட, அவருடன் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.