பட மூலாதாரம், ANI
இந்தியா – அமெரிக்கா உறவு டிரம்பின் வரிக்கு வரி யுத்தத்தால் சமீப நாட்களில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நேற்றைய தினம், இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் என தனது ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்பிடம் இந்திய-அமெரிக்க உறவுகள் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு “நான் எப்போதும் மோதியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர்” எனப் பதிலளித்துள்ளார் டிரம்ப்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிறப்பான உறவு உள்ளது. அதனால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.” எனத் தெரிவித்தார்.
இந்தியாவை இழந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்த கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது நாம் இந்தியாவை இழக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“உங்களுக்குத் தெரிந்ததைப் போல நான் இந்தியப் பிரதமர் மோதியுடன் நன்றாகப் பழகுவேன். அவர் சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். நாங்கள் ரோஸ் பூங்காவிற்குச் சென்றோம்” என்று கூறினார் டிரம்ப்.
டிரம்பின் கருத்துக்கு இந்திய பிரதமர் மோதியும் எதிர்வினையாற்றியுள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில், “அதிபர் டிரம்பின் உணர்வுகள் மற்றும் நம் உறவுகள் பற்றிய நேர்மறையான மதிப்பீட்டை மிகவும் பாராட்டுகிறேன் மற்றும் முழுமையாக வழிமொழிகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு கொண்ட முழுமையான மற்றும் உலகளாவிய உத்தி சார்ந்த கூட்டணி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்க தரப்பிலிருந்து தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்களும் முதன் முறையாக நேர்மறையாக கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக இந்தியா பற்றிய டிரம்பின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இதைப் பற்றி நான் கூறுவதற்கு எதுவுமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் தவிர அவரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவும் இந்தியாவை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்தியா உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்னையை திசைதிருப்ப பார்க்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு முன்பாக, ‘இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பீட்டர் நவரோவின் கருத்துகள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
இந்திய – அமெரிக்க உறவுகள் முன்பு போல இருக்க முடியுமா?
சீனாவிடம் இந்தியாவை இழந்துவிட்டோம் என டிரம்ப் முன்னர் கூறியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், “நாம் இந்தியாவை இழக்கவில்லை. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனை 50 சதவீத வரி விதித்ததன் மூலம் நான் அவர்களுக்கு தெரிவித்துள்ளேன். ஆனால் மோதியுடன் நன்றாக பழகுகிறேன்.” எனத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இதர நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேசிய டிரம்ப், “பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மற்ற நாடுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நாம் அனைவருடனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்தியாவைக் குறிவைக்கும் பீட்டர் நவரோ மற்றும் ஹாவர்ட் லுட்னிக்
பீட்டர் நவர்ரோ தனது எக்ஸ் தளப் பதிவில் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது பற்றி மீண்டும் குறிப்பிட்டிருந்தார்.
“இந்தியா விதிக்கும் அதிகப்படியான வரிகள் அமெரிக்க வேலைவாய்ப்புகளை பாதிக்கின்றன. இந்தியா லாபம் சம்பாதிப்பதற்காக மட்டுமே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. இந்த பணம் ரஷ்ய போர் இயந்திரத்திற்குச் செல்கிறது. இதில் யுக்ரேனிய மற்றும் ரஷ்ய மக்கள் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க மக்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தியா உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் திசைதிருப்பி வருகிறது” என அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார் பீட்டர்.
டிரம்பின் மிகவும் நம்பத்தகுந்த ஆலோசகரான பீட்டர் நவரோ சமீப நாட்களில் இந்தியா மற்றும் பிரதமர் மோதி தொடர்பாக கடினமான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார்.
முன்னதாக ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையேயான மோதலை ‘மோதியின் போர்’ எனக் குறிப்பிட்டார் பீட்டர்.
ரஷ்ய எண்ணெயிலிருந்து கிடைக்கும் லாபம் இந்தியாவுடன் அரசியல் ரீதியாக தொடர்புள்ள எரிபொருள் வர்த்தகர்களுக்கும் புதினின் போர் இயந்திரத்திற்கும் நேரடியாக செல்கிறது என்றும் கூறியிருந்தார் பீட்டர்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு மத்தியில் ஒன்றை இந்தியா தேர்வு செய்ய வேண்டும் என அமெரிக்க வர்த்தக செயலர் ஹாவர்ட் லுட்னிக் தெரிவித்திருந்தார்.
“ரஷ்யா-யுக்ரேன் போருக்கு முன்பாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து 2% எண்ணெய் மட்டுமே வாங்கி வந்தது. ஆனால் போருக்குப் பிறகு இது 40% ஆனது. இந்தியா அதன் சந்தையை திறக்க விரும்பவில்லை. ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள். பிரிக்ஸில் ஒரு அங்கமாக இருப்பதை நிறுத்துங்கள். அமெரிக்காவையும் அதன் டாலரையும் ஆதரியுங்கள், இல்லையென்றால் 50% வரியை எதிர்கொள்ளுங்கள்” என ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இந்தியா விரைவில் மன்னிப்பு தெரிவித்து டிரம்புடன் பேச்சுவார்த்தைக்கு வரும் என்றும் லுட்னிக் பேசியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
நிர்மலா சீதாராமன் என்ன கூறினார்?
பிராமணர்கள் லாபம் பார்க்கிறார்கள் என்கிற பீட்டர் நவரோவின் கருத்து பிரிட்டிஷின் பிரித்தாளும் கொள்கையைப் போன்றது என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இத்தகைய கருத்துகளை நியாயப்படுத்தும் முயற்சிகளால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் எனக் கூறிய நிர்மலா சீதாராமன் இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் என்பது பொருளாதார மற்றும் வணிக காரணங்கள் அடிப்படையிலானது எனத் தெரிவித்தார்.
பீட்டர் நவரோவின் கருத்துகளை நிராகரித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வர்த்தக பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்கா உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு