பட மூலாதாரம், @narendramodi
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள நான்காவது சர்வதேச தலைவராகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
அதிபரானவுடன் டிரம்ப் பல நாடுகளின் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய கூடுதல் வரிகளை அறிவித்தார். இந்தியா மீது இதுவரை தனியாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை.. ஆனால், எஃகு மற்றும் அலுமினியம் மீது இறக்குமதி வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்தியாவும் அவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
டிரம்ப் பல வழிகளில் இந்தியாவை சங்கடப்படுத்தியுள்ளார். ஆனால், மோதி அரசு அவற்றுக்கு மிக எச்சரிக்கையாகவே எதிர்வினையாற்றி வருகிறது.
கடந்த காலங்களில் இந்தியாவை ‘வரி மன்னன்’ என டிரம்ப் அழைத்தார். இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக இருந்ததாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுடைய கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது.
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான புகாரை இந்தியாவிடம் டிரம்ப் ஏற்கெனவே எழுப்பியிருந்தார். பொருளாதாரம் சார்ந்தும் இரு நாடுகளுக்கிடையே தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ளன.
அமெரிக்காவுடனான இருதரப்பு வணிகத்தில் இந்தியா வர்த்தக உபரியுடன் இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை. ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகளவில் ஏற்றுமதி செய்வதைத்தான் வர்த்தக உபரி என்கிறோம். அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் என்றும் டிரம்ப் விரும்புகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ந்துவரும் சூழலில், டிரம்ப் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தக உபரியில் இருப்பது இந்தியாவுக்கு முக்கியம். அமெரிக்க முதலீடுகளும் இந்தியாவுக்கு தேவை.
மோதி – டிரம்ப் சந்திப்புக்கு முன் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தேர்தல் சமயத்தில் இந்தியா மீது இறக்குமதி வரி குறித்து டிரம்ப் எச்சரித்திருந்தாலும், அதிபரானவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விதித்தது போன்று இந்தியாவுக்கு செய்யவில்லை.
அமெரிக்காவிற்கான தன் பயணத்துக்கு முன்பே நரேந்திர மோதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
உதாரணத்துக்கு, அமெரிக்க இருசக்கர வாகனம் ஹார்லி டேவிட்சன் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அமெரிக்க விஸ்கி மற்றும் இன்னும் சில பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் எனும் நிறுவனத்தின் அஜய் ஸ்ரீவஸ்தவா புளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் விஸ்கி ஆகியவற்றை விடுத்து, 75 சதவிகித அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா 5% இறக்குமதி வரிதான் விதித்துள்ளது. இந்தியா வரி மன்னன் இல்லை என்பதை மோதி டிரம்புக்கு விளக்க வேண்டும். வர்த்தகத்தைத் தாண்டி இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பார்க்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, அமேசான் முதல் ஓபன் ஏஐ உள்ளிட்ட அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்காக இந்தியா தன் சந்தையை வழங்கியுள்ளது. இந்த வசதி அமெரிக்காவுக்கு சீனாவில் இல்லை” என கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
அத்துடன், சமீப ஆண்டுகளில் ரஷ்ய ஆயுதங்களை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான கூட்டுறவை இந்தியா அதிகரித்துள்ளது. இந்த உறவு, மோதியின் பயணத்துக்குப் பின் அதிகரிக்கலாம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
100 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ள இந்தியா, அந்த இலக்கை எட்டும் நோக்கில் அணுசக்தி விபத்து இழப்பீட்டுச் சட்டத்தில் (Nuclear Liability Act) திருத்தம் செய்யயும் முடிவு செய்துள்ளது. இது அமெரிக்க நிறுவனங்களுக்கும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. டிரம்பை மோதி சந்திப்பதற்குள் நேர்மறையான சூழலை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்தியா எதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்?
ஆவணங்களின்றி அமெரிக்காவில் இருந்த இந்தியர்களை அந்நாடு அனுப்பிய விதம் அவமானகரமானது என, எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால், இந்த விமர்சனத்துக்கு மோதி அரசாங்கம் மிகுந்த பொறுமையுடன் பதிலளித்தது.
தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் எனும் சிந்தனை மையத்தின் மூத்த ஆய்வு மாணவர் தான்வி மதன் தன் எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கா இந்தியர்களை அனுப்பிய விதம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால், மோதி அரசாங்கம் அதனை விமர்சிக்கவில்லை. டிரம்பின் முதல் ஆட்சியைவிட இரண்டாம் ஆட்சியை மோதி அரசாங்கம் வித்தியாசமாக அணுகுகிறது. இந்தியா பொதுவாகவே எந்த நாட்டையும் பொதுவெளியில் விமர்சிக்காது. பொதுவெளியில் விமர்சிப்பது பிரச்னையை தீர்க்காமல் மேலும் சிக்கலாக்கும் என்பதே இந்தியாவின் வியூகமாக உள்ளது. டிரம்புடன் குழப்பத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என இந்தியா நினைக்கிறது. அமெரிக்காவுடன் பிரச்னைகள் குறித்து எழுப்புவோம் என்றே இந்தியா கூறுகிறது.” என பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டிரம்பை கையாள்வதே நரேந்திர மோதிக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்.
கடந்தாண்டு இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 45 பில்லியன் டாலராக இருந்தது. இதன் அர்த்தம், இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா எதிர்கொள்கிறது என்பதல்ல. இந்த வரிசையில், அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா 11வது இடத்தில் உள்ளது. ஆனால் டிரம்ப் எதையும் ஒருதலைபட்சமாக அனுமதிக்கும் மனநிலையில் இல்லை.
டிரம்பின் வரி அச்சுறுத்தல் தொடர்பாக இந்திய வெளியுறவு முன்னாள் செயலாளர் கன்வால் சிபல், “இந்தியா மீது டிரம்ப் வரி விதித்தால், அது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை காட்டுவதாகும். அமெரிக்காவின் பொருளாதாரம் இந்தியாவை விட மிகவும் பெரியது. அமெரிக்க பொருளாதாரம் 29 டிரில்லியன் டாலர் மதிப்புடையது, அதேசமயம் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு வெறும் 4 டிரில்லியன் டாலர்களே.” என பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
‘இந்தியா-அமெரிக்காவை ஒப்பிடுவது நியாயமல்ல’
சிபல் தன் பதிவில், “அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 66 ஆயிரம் டாலராக உள்ளது, அதுவே இந்தியாவில் 2,400 டாலராக உள்ளது. உலகின் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. சர்வதேச வர்த்தகம் அனைத்தும் டாலரில் தான் நடைபெறுகிறது, இதுவும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகரிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், “அமெரிக்காவின் கொள்கைகள் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை தன்னுடன் ஒப்பிடாது. சரிசமமாக உள்ள இருவரிடையே நடப்பதுதான் போட்டி. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகளவில் சீனாவுடன் தான் உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை சீனாவுடன் 30%, ஐரோப்பிய ஒன்றியத்துடன் 16%, கனடாவுடன் 15% என்கிற அளவில் உள்ளது. அதேசமயம், இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 3.2 சதவிகிதம்தான்” என கூறியுள்ளார்.
ஜனவரி 27-ஆம் தேதி, டிரம்ப் இந்திய பிரதமர் மோதியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மோதியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப். அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். இருநாட்டு வர்த்தகத்தை சமநிலையில் வைக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்பை ‘அமெரிக்க தேச பற்றாளர்’ என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அழைத்தார். மோதியின் கொள்கைகள் வெளிநாட்டுச் சார்பைக் குறைக்கும் தேசியவாதத்தின் அம்சத்தையும் வலியுறுத்துகின்றன.
அமெரிக்காவிடம் இருந்து முடிந்தளவுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். மற்றொருபுறம், பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க மோதி விரும்புகிறார். இம்மாதிரியான சூழலில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மூத்த இயக்குநர் லிசா கர்ட்டிஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “மோதியின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கைக்கும் டிரம்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (America First) கொள்கைக்கும் நேரடி மோதல் நடப்பதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக, பாதுகாப்பு வர்த்தகத்தில் மோதல் இருக்கிறது. முதல் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான தடைகளை டிரம்ப் நீக்கினார். ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதியாக ஏழு ஆண்டுகளாகின. நிச்சயமாக, டிரம்ப் இந்த முறை தாமதத்தை விரும்ப மாட்டார்.” என்றார்.
“இந்தியாவை பொருத்தவரை அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவாலாக உள்ளது. அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். இந்தியாவிலேயே அதை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன. ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் எதிர்பார்ப்பார்.”
ஆனால், டிரம்பை இதில் சமாதானம் செய்வது எளிதானது இல்லை என்றும், அதற்கு முடிவே இல்லை என்றும் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான நிபுணரும் பொருளாதார நிபுணருமான அமிடெண்டு பலிட் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “டிரம்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதில் இந்தியாவுக்கு உள்ள சவால்களுக்கு எல்லையே இல்லை. எதிர்காலத்தில் டிரம்ப் பல விவகாரங்களில் அழுத்தம் தரலாம். டிரம்புடன் ஒரு விஷயத்தில் ஒருமுறை ஒப்புக்கொண்டால், அதுவே இறுதி அல்ல என்பதே டிரம்பின் வழக்கமாக உள்ளது. இது, இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு