இலங்கை வருகைத் தந்த பிரதமர் நரேந்திர மோதி, இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புக்களில் கலந்துக்கொண்டதுடன், உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
தனது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 6) அநுராதபுரம் நோக்கி பயணித்து, அங்கிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டார். அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் இராமேஸ்வரம் நோக்கி பிரதமர் நரேந்திர மோதி பயணித்தார்.
அநுராதபுரம் ஏன் சென்றார்?
படக்குறிப்பு, புத்த விகாரையின் வருகைப் பதிவேட்டில் மோதி கையெழுத்திடுகிறார்
வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்ற மோதி வழிபாடுகளில் ஈடுபட்டார். மோதியுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் கலந்துக்கொண்டிருந்தார்.
விகாரைக்கு வருகைத் தந்த பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரை சந்தித்து ஆசிப் பெற்றதுடன், அவருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
தான் பிறந்த குஜராத் மாநிலத்தில் 1960ம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் புனித சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி, இதன்போது நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, புத்த கயா தொடர்பான கோரிக்கைகளை வழங்கிய தேரர்
இந்த புனித சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மேலும், இந்தியாவின் புத்த கயாவை ஆன்மீக நகரமாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அட்டமஸ்தானாதிபதி, பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மோதி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பை அடுத்து, ஜயஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்துள்ளார்.
வடக்குக்கான ரயில் மார்க்கம் திறப்பு
படக்குறிப்பு, இலங்கையில் இந்திய உதவியுடன் புதிய ரயில் திட்டங்கள் தொடக்கம்
இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் தண்டவாளம் மற்றும் அநுராதபுரம் – மஹவ ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்துள்ளார்.
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர், அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவையை பச்சை கொடியை அசைத்து தொடக்கி வைத்திருந்தனர்.
சுமார் 91.27 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் மஹவ – ஓமந்தை ரயில் தண்டவாளம் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், 14.89 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு, இந்திய நிதியுதவியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் பணிகளை இந்தியா முன்னெடுத்திருந்ததுடன், அநுராதபுரம் தொடக்கம் ஒமந்தை வரையான ரயில் தண்டவாள பணிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்தியா முன்னெடுத்திருந்தது.
இவ்வாறான நவீனமயப்படுத்தப்பட்ட ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் தண்டவாளம் ஆகியனவே இன்று (ஏப்ரல் 6) திறந்து வைக்கப்பட்டன.
படக்குறிப்பு, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் நோக்கி பயணித்தார் நரேந்திர மோதி
ஜயஸ்ரீ மகா போதி விகாரையின் சிறப்பு என்ன?
படக்குறிப்பு, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு கிளையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள மரம் அநுராதபுரம் விகாரையில் உள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு இன்று வழிபாடுகளுக்காக சென்ற நிலையில், அந்த விகாரையின் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.
புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையிலிருந்து வளர்க்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளரசு மரத்துடன் அமையப் பெற்ற விகாரையாக அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரை கருதப்படுகின்றது.
இந்த வெள்ளரசு மரமானது கி.மு 288ம் ஆண்டில் நடப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இலங்கை மாத்திரமன்றி உலக வாழ் பௌத்த மக்களினால் புனித பூமியாக இந்த இடம் கருதப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித சின்னமாக கருதப்படுகின்ற வெள்ளரசு மரத்தின் கிளையை, தற்போது இந்தியாவில் உள்ள பகுதியை ஆண்ட அசோக பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியுமான சங்கமித்தையினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அநுராதபுரத்தை ஆட்சி செய்த அரசரான தேவநம்பியதீசனால் இந்த மரம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தியாவின் புத்த கயாவிற்கும், அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு தனது முதலாவது விஜயத்தில் ஈடுபட்ட 2015ம் ஆண்டு, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.