பட மூலாதாரம், Getty Images
“தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை தி.மு.க மோசமாக நடத்துகிறது” – பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறாக குற்றம் சுமத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக பிரதமர் மோதி வெளிப்படுத்துவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பிரதமர் கூறுவதைப்போல தமிழ்நாட்டில் பிகார் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களா? பிபிசி தமிழிடம் புலம்பெயர் பிகார் மக்கள் கூறியது என்ன?
பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலைமையில் மகா கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன.
தேர்தல் தேதி நெருங்குவதால் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வியாழக்கிழமையன்று (அக்டோபர் 30) பிகாரில் உள்ள சப்ரா (Chhapra) மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோதி பங்கேற்றார்.
மோதி பேச்சும் ஸ்டாலின் பதிலும்
அப்போது பேசிய பிரதமர் மோதி, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் பிகார் மக்களை அவமதிப்பதாகக் கூறினார்.
“தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பிகார் மக்களை அவமதிக்கின்றனர். தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை தி.மு.க மோசமாக நடத்துகிறது. பிகார் மக்களை அவமதித்த காங்கிரஸ் தலைவர்களை பரப்புரைசெய்வதற்காக ஆர்ஜேடி அழைத்துள்ளது” என பிரதமர் நரேந்திர மோதி விமர்சித்தார்.
பிகார் மக்களை தி.மு.க மோசமாக நடத்துவதாகப் பிரதமர் மோதி குற்றம் சுமத்தியிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை பிரதமர் நரேந்திர மோதி அடிக்கடி மறந்து இதுபோன்ற பேச்சுகளால் பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
‘ஒடிஷா, பிகார் என எங்கு சென்றாலும் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக பா.ஜ.கவினர் வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ‘தமிழர்களுக்கும் பிகார் மக்களுக்கும் பகையை உண்டாக்கும் வகையில் நடந்துகொள்வது போன்ற செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.கவினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புலம்பெயர் பிகார் மக்களின் நிலை என்ன?
பட மூலாதாரம், UGC
தமிழ்நாட்டில் புலம்பெயர் பிகார் மாநில தொழிலாளர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்கான முயற்சிகளில் பிபிசி தமிழ் இறங்கியது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள கவுல் பஜாரில் வசித்து வரும் தனஞ்செய் திவாரி, பிகார் மாநிலம் சிவான் (siwan) மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு ரீனா தேவி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
வெல்டிங் வேலை பார்த்து வரும் தனஞ்செய் திவாரிக்கு தினசரி 700 ரூபாய் முதல் 800 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. “முன்பு போல தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. இரண்டு நாட்கள் வேலை இருந்தால் மற்ற சில நாட்களில் வேலை இருப்பதில்லை” என, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சென்னையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகக் கூறுகிறார், தனஞ்செய் திவாரியின் மனைவி ரீனா குமாரி. இவர்களின் மகள் ஜியா குமாரி கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 93 மதிப்பெண்ணை எடுத்திருந்தார்.
“கொரோனா தொற்று காலத்தில் ரேசன் அட்டையை வாங்கினோம். வீட்டில் ரேசன் அரிசியை சமைத்து சாப்பிடுகிறோம். பிகாரில் அன்றாட உணவுக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தாலும் போதிய தொழில்வாய்ப்புகள் இல்லை” என பிபிசி தமிழிடம் ரீனா குமாரி தெரிவித்தார்.
“அங்கு போதிய தொழில் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தால் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்காது” எனக் கூறும் ரீனா தேவி, “தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வசித்து வருகிறேன். இங்கு போதிய பாதுகாப்பு கிடைக்கிறது” என்கிறார்.
தொடக்கத்தில் தமிழ் மொழியைப் புரிந்துகொண்டு பேசுவதில் சிரமம் இருந்ததாகக் கூறும் ரீனா குமாரி, “அருகில் வசிக்கும் மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகளைச் செய்தனர்” என்கிறார்.
‘ஏமாற்றவும் செய்கின்றனர்’
பட மூலாதாரம், UGC
“உற்பத்தி சார்ந்த துறைகளில் பிகார் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் கட்டுமானப் பணிகளுக்கும் பிளாஸ்டிக் வார்ப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியவும் அழைத்து வரப்படுகின்றனர்” எனக் கூறுகிறார், சி.ஐ.டி.யு மாநில துணைச் செயலாளர் கண்ணன்.
“கட்டுமானப் பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் கேம்ப் கூலி முறையில் அழைத்து வரப்படுகின்றனர். எங்கெல்லாம் கட்டுமானம் நடக்கிறதோ அங்கேயே தற்காலிகமாக தங்கி வேலை பார்க்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டுமான வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் புலம்பெயர் தொழிலாளர்களை சிலர் ஏமாற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சஞ்சய், “கொத்தனார் வேலையில் தினசரி 1300 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வேலை இருப்பதாகக் கூறி கட்டட பொறியாளர் ஒருவர் அழைத்துச் சென்றார். சுமார் 2 மாதங்களாக வேலை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார்” எனக் கூறுகிறார்.
தன்னைப் போல பத்து பேர் ஏமாந்துவிட்டதாகக் கூறும் சஞ்சய், இதுதொடர்பாக தொழிற்சங்கம் ஒன்றில் புகார் அளித்திருப்பதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பிகாரில் உள்ள நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், அம்பத்தூரில் உள்ள சத்யா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
’12 மணிநேரப் பணி’
பட மூலாதாரம், UGC
அம்பத்தூர் பகுதி முழுவதும் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். “காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்கிறோம். எட்டு மணிநேரம் போக மீதமுள்ள 4 மணிநேரத்தை மிகை நேரப் பணியாக செய்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது” எனக் கூறுகிறார், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான கிருஷ்ணா.
இவர் அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதில் வீட்டு வாடகைக்கு மட்டும் ஐந்தாயிரம் ரூபாயை அவர் செலுத்தி வருகிறார்.
அம்பத்தூரில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ஹிரா பாஸ்வான், பிகாரில் உள்ள நாளந்தா (Nalanda) மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
“சென்னை வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. மனைவி, குழந்தைகள் எல்லாம் ஊரில் உள்ளனர். என்னுடைய அறையில் இரண்டு பேர் தங்கியுள்ளனர். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லை” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மாதம் முழுவதும் வேலை பார்த்தால் 12 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாகக் கூறும் ஹிரா பாஸ்வான், “வேலை கடுமையாக இருப்பதால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. பிகாரை ஒப்பிடும்போது இங்கு வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன” என்கிறார்.
‘அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை’

“எதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்கு பத்துக்கு பத்து என்ற அளவில் அறை ஒதுக்கப்படுகிறது. அதில் சுமார் ஆறு பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர்” எனக் கூறுகிறார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மோகன்.
“புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் நிறுவனங்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கு சில நிறுவனங்கள் தயாராக இல்லை. இதை தொழிலாளர் நலத்துறையும் கண்டுகொள்வதில்லை” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக, மாநில அரசின் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒடிஷா, பிகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.
‘இரண்டாம் இடத்தில் பிகார் தொழிலாளர்கள்’
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 2,86,500 தொழிலாளர்களும் பிகாரை சேர்ந்த 2,47,016 தொழிலாளர்களும் ஜார்கண்டை சேர்ந்த 1,90,518 தொழிலாளர்களும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 1,90,518 தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருவதாக, தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் அசாம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பணிபுரிந்து வருவதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“அரசிடம் பதிவு செய்யப்பட்ட தரவுகளில் இருந்து இவை வெளியிடப்பட்டாலும் அதிகாரபூர்வமற்ற வகையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்” எனக் கூறுகிறார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மோகன்.
பட மூலாதாரம், Getty Images
சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு 1979 ஆம் ஆண்டு சட்டம் ஒன்று (THE INTER-STATE MIGRANT WORKMEN (REGULATION OF EMPLOYMENT AND CONDITIONS OF SERVICE) ACT, 1979) இயற்றப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் நியாயமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,
*புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.
*புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
*தொழிலாளர்களின் விவரங்களை தொடர்புடைய அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
*புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதர தொழிலாளர்களைப் போல ஊதியம், பயண ஊக்கத்தொகை, பயணக் காலத்தில் ஊதியம், தங்குமிடம், இலவச மருத்துவ வசதிகள், பாதுகாப்பு உடைமைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
“ஆனால், இதனை சில நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை” எனக் கூறுகிறார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மோகன்.
“தமிழ்நாட்டில் சிறிய தொழிற்சாலைகள் முதல் காய்கறிக் கடைகள் வரை என அனைத்திலும் பிகார் மாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். மொழி பிரச்னை இருந்தாலும் குறைவான ஊதியம் என்பதால் உரிமையாளர்களும் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
‘வேறு வேலை தேடிச் செல்வதில்லை’

“உழைப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நேரம், காலம் பார்ப்பதில்லை. வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை கிடைப்பதால் அதை அனுபவிக்கின்றனர். விரக்தியும் கோபமும் ஏற்பட்டிருந்தால் தமிழ்நாட்டை நோக்கி அவர்கள் வந்திருக்க மாட்டார்கள்” என்கிறார், சி.ஐ.டி.யு மாநில துணைச் செயலாளர் எஸ்.கண்ணன்.
தொடர்ந்து பேசிய அவர், “பிகாரை விட தமிழ்நாடு பரவாயில்லை என அம்மாநில தொழிலாளர்கள் நினைக்கின்றனர். இங்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது” என்கிறார்.
“தமிழ்நாட்டு தொழிலாளிக்கு குறைந்தபட்சம் ஊதியம் என்பது 18 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இவர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்தால் வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களோ தங்களை அழைத்து வந்த முகவர்களைத் தாண்டி வேறு வேலைகளைத் தேடிப் போவதில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது. “விரைவில் பதில் அளிக்கிறேன்” என்று மட்டும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க அளித்த விளக்கம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “பிகாரில் உள்ள மக்கள் தங்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதால் திசைதிருப்பும் வேலையை பிரதமர் மோதி செய்கிறார்” எனக் கூறினார்.
“தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் கவலையில்லாமல் நள்ளிரவில் கூட உணவருந்திவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு பிரதமர் மோதி அவதூறு பரப்புகிறார்” எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “ஆபரேஷன் எம்கேஎஸ் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. நாங்கள் எந்தக் காலத்திலும் இந்தியை எதிர்த்ததில்லை. இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்து வந்தோம். இந்திக்காரர்களுக்கு எதிர்ப்பும் காட்டுவதில்லை” எனக் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், “பிரதமர் மோதி, தமிழ்நாட்டு மக்களைக் குறை சொல்லவில்லை. பிகார் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் தி.மு.கவினரைதான் அடையாளம் காட்டியுள்ளார்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் பிகார் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார் கூறுவது முதல் முறையல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டு இதேபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிகார் மக்கள் தாக்கப்படுவதைப் போன்ற காணொளிகள் இணையதளங்களில் பரவின. இதுதொடர்பாக தனது ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ‘தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகளிடம் பேசி பிகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு, இரண்டு காணொளிகளும் போலி எனவும் அதில் ஒன்று புலம்பெயர் பிகார் தொழிலாளர்களுக்கு இடையே நடந்த மோதல் எனவும் மற்றொன்று உள்ளூர் மக்களிடையே நடந்த மோதல் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனை ஆய்வு செய்வதற்கு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வு நடத்தியது.
“போலி காணொளிகளை பரப்பியதாக பிகாரை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். எங்கள் பதிலை ஏற்காமல் சிறப்புக் குழு ஒன்றை நிதிஷ் குமார் அனுப்பினார்” என, வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
“நிதிஷ்குமாரின் ஆட்சியில் உள்ள அதிகாரிகளே தமிழ்நாட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அதைப் பிரதமர் மோதி படித்துப் பார்க்க வேண்டும்” எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு