படக்குறிப்பு, 60 வயதாகும் இத்தாலிய திரைக்கலைஞர் மோனிகா பெலூசிகட்டுரை தகவல்
‘கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் பிடித்திருப்பதாக ஐரோப்பிய நடிகையான மோனிகா பெலுசி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த பாடலில் கூறப்படும் மோனிகா பெலூசி யார், இந்தப் பாடல் கூலி திரைப்படத்தில் ஏன் வருகிறது?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மோனிகா’ பாடல், படம் வெளியாகும் முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் பாடலை இத்தாலியத் திரைக்கலைஞரான மோனிகா பெலூசி விரும்பியிருப்பதாக அந்தப் பாடலில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவித்திருக்கிறார்.
‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஆமிர் கான், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார்.
“மோனிகா பெலூசி இறங்கி வந்தாச்சு, கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி” என்ற அந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளனர். சுபாஷினி, அனிருத், அசல் கோளார் ஆகியோர் பாடியுள்ளனர்.
பட மூலாதாரம், Anirudh Ravichander
படக்குறிப்பு, ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
யார் அந்த மோனிகா பெலூசி?
இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் மோனிகா பெலூசி, ஒரு பிரபல இத்தாலிய திரைக்கலைஞர். சுமார் 60 வயதாகும் மோனிகா பெலூசி, ஐரோப்பியத் திரையுலகிலும் ஹாலிவுட் திரையுலகிலும் துணிச்சலான பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்குப் பிரபலமானவர்.
The Matrix Reloaded, The Matrix Revolutions, The Passion of the Christ, Spectre, Irreversible உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இவரை மையமாக வைத்தே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த Malèna, இவரை உலகம் முழுக்க பிரபலமாக்கிய திரைப்படங்களில் ஒன்று. 2001ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் வெளியான இந்தத் திரைப்படம், ஒரு பதின் பருவச் சிறுவனுக்கு தன்னை விட வயது மூத்த பெண்ணின் மீது வரும் ஈர்ப்பு, அந்தப் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உருவானது.
இந்தப் படத்திற்குப் பிறகு மோனிகா பெலூசிக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் வட்டம் உருவானது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, Malèna படத்திற்குப் பிறகு மோனிகா பெலூசிக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் வட்டம் உருவானது.
‘மோனிகா’ பாடலை விரும்பிய மோனிகா
‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மோனிகா’ பாடல் யுடியூபில் வெளியானதிலிருந்து சுமார் 68 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் பாடலை மோனிகா பெலூசியே விரும்பியதாகக் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இந்தியா இதழுக்குப் பேட்டியளித்த பூஜே ஹெக்டே, மோனிகா பெலூசி அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு, மிகவும் விரும்பியிருப்பதாகத் கூறியிருக்கிறார் என்றார்.
மோனிகா பெலூசிக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 6 மில்லியன் பின்தொடர்வோர் இருக்கின்றனர். ஆனால், அவரது சமீபத்திய புகைப்படப் பதிவுகளுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மோனிகா பெலூசியை இன்ஸ்டாகிராமில் சுமார் 6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
கூலிக்கும் மோனிகாவுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனால், ‘கூலி’ படத்தின் கதைக்கும் மோனிகா பாடலுக்கும் பெரிய தொடர்பு இருக்காது என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பாடலைப் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் அவர், “மோனிகா பாடல் வியாபார நோக்கத்திற்காக வைக்கப்பட்டது. படம் முழுமையான த்ரில்லராக இருக்கும் நிலையில், சின்னதாக ஆசுவாசம் அளிக்கும் வகையில் ஒரு பாடல் தேவைப்பட்டது. அதற்காகத்தான் இந்தப் பாடலை வைத்தோம். படமாக பார்க்கும்போது தவறாகத் தெரியாது. கதைப்படி இந்தப் பாடலில் ரஜினிகாந்த் வர முடியாது. மேலும், சௌபின் ஷஹீரும் இந்தப் பாடலுக்கு முக்கியக் காரணம். ஏனென்றால் ‘பீஸ்ம பரவம்’ படத்தில் அவருடைய நடனம் ரொம்பவே நன்றாக இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் இப்படியொரு நடனம் ஆடினால் எப்படியிருக்கும் என்று யோசித்து, அந்தப் பாடலை வைத்தோம்” என்று கூறியிருக்கிறார்.
பேட்டி ஒன்றில் ‘கூலி’ படத்தில் மோனிகா பெலூசி பெயரில் பாடல் இடம்பெற வேண்டும் என்பது யாருடைய யோசனை என இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது, “நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் ரசிகர்கள். முதலில் இந்த பாடலை முடிவு செய்த பிறகுதான் பூஜா ஹெக்டேவை தேர்வு செய்தோம்” எனப் பேசினார்.
மேலும் பேசிய அவர், “சிலர் இந்த பாடலை கேட்கும்படி மோனிகா பெலூசியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு மெசேஜ் அனுப்புகின்றனர்” எனக் கூறினார்.
‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.