• Sun. Oct 20th, 2024

24×7 Live News

Apdin News

‘யானை சின்னத்தை 5 நாளில் எடுக்காவிட்டால்…’ – தவெக தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் | Bahujan Samaj Party warning to vijay party to remove elephant symbol

Byadmin

Oct 19, 2024


சென்னை: தமிழக வெற்றிக் கழக கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடிகர் விஜய்க்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்க்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவரான எஸ்.சந்தீப் விடுத்துள்ள வழக்கறிஞர் நோட்டீஸின் விவரம்: “யானை சின்னம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட சின்னம். அந்த சின்னத்தை எங்களைத் தவிர இந்தியாவில் வேறு யாரும் பயன்படுத்தவில்லை. அதன்படி எங்களது கட்சிக்கான யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியி்ல் சட்டவிரோதமாக பயன்படுத்தி இருப்பது குறித்தும், அந்த யானை சின்னத்தை கொடியில் இருந்து எடுக்க வேண்டுமென ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் போன்றோ, கொடி போன்றோ மற்ற கட்சி பயன்படுத்தாமல் இருப்பது அக்கட்சியின் தார்மிக பொறுப்பாகும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ராவுக்கு கடந்த ஆகஸ்டு 30-ம் தேதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தின்படி தமிழக வெற்றிக் கழகம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளைப்போன்றோ அல்லது சி்ன்னத்தைப் போன்றோ பயன்படுத்தக் கூடாது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என நாங்கள் ஆட்சேபம் தெரிவித்த பிறகும்கூட நீங்கள் அதை அகற்றவில்லை. எனவே 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருந்து யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.



By admin