பட மூலாதாரம், Special Arrangement
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின், 9 குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
அனைத்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட சில பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பு வந்ததும் இனிப்புகளைப் பரிமாறி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.
வழக்கு பதியப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இந்த குற்றவாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டபோது, ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டன. தண்டனை பெற்றுள்ள 9 குற்றவாளிகள் யார், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? என்பது குறித்து காணலாம்.
முதல் குற்றவாளி
பட மூலாதாரம், Special arrangement
சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த் (வயது 34). இவர் பொள்ளாச்சி ஜோதிநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரின் மகன். சிவில் இன்ஜினியர். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேர் தந்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும், 4 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.