• Fri. May 23rd, 2025

24×7 Live News

Apdin News

யாழில் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்த யுவதி கடத்தல்!

Byadmin

May 23, 2025


யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குச் சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு, யுவதியைக் கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட யுவதியை மீட்கப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த யுவதியும், பூநகரி பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர்.

இந்நிலையில், யுவதியின் பெற்றோர், தமது பிள்ளையைக் காணவில்லை என்று தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அந்த யுவதி திருமணம் செய்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

அதனையடுத்து அந்த யுவதியையும், அவரது கணவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துப் பெற்றோரின் முறைப்பாட்டை முடிவுறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதற்கு யுவதியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தமையால் மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்

குறித்த வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்துக்கு நேற்று யுவதியும் அவரது கணவரும் வந்த பின்னர், இருவரும் நீதிமன்றை விட்டு வெளியே வந்த நிலையில், நீதிமன்றத்துக்கு அருகில் பட்டா ரக வாகனத்தில் காத்திருந்த யுவதியின் சகோதரன் அடங்கிய கும்பல், யுவதியின் கணவன் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு யுவதி மீதும் தாக்குதலை மேற்கொண்ட பின்னர், யுவதியை வாகனத்தில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கடத்திச் செல்லப்பட்ட யுவதியை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

By admin