யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி சந்திப்பு அருகே இன்று (10) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்தபோதும், அந்த வாகனம் உத்தரவை பின்பற்றாமல் மண்டைதீவு நோக்கி வேகமாக சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற வேன் தொடர்பான தகவல், ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரி பயணித்த ஜீப்பிற்கு வழங்கப்பட்டு, வாகனத்தை இடைமறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வேனை நிறுத்த பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது நிற்காத காரணத்தால், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்குப் பிறகும் வாகனம் தொடர்ந்து சென்றதால், அதை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் நேரடி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சூட்டில் வேனை ஓட்டிச் சென்ற இளைஞன் காயமடைந்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞனே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த போது வாகனத்தில் இருந்த ஏனைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவும் மேற்கொண்டு வருகின்றன.
The post யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் உயிரிழப்பு appeared first on Vanakkam London.