யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்லும் நோக்குடன் ஆபிரிக்க நாட்டில் சில காலம் தங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய நாட்டுக்குச் செல்லும் முயற்சி கைகூடாத நிலையில் கடந்த 2 ஆம் திகதி மீண்டும் நெடுந்தீவை வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன.
கடந்த 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம், இவர் ஆபிரிக்க நாட்டுக்குச் சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு மலேரியா நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டன .
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவுக்கான குருதிப் பரிசோதனையில் கடந்த 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியாக் கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டன என்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறு நோய் நிலைகளால் அவர் சுயநினைவற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
The post யாழ்ப்பாணத்தில் மலேரியாவால் ஒருவர் மரணம்! appeared first on Vanakkam London.