• Mon. Apr 7th, 2025

24×7 Live News

Apdin News

யாழ். பல்கலை சிரேஷ்ட மாணவர்கள் இருவர் மறியலில்

Byadmin

Apr 6, 2025


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியிருந்தனர்.

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்திருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சிரேஷ்ட மாணவர்களைக் கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதை அடுத்து மேற்படி இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், தலைமறைவாகவுள்ள அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

By admin