• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி அரச திணைக்களங்களுக்கு காணியில்லை | மருதலிங்கம் பிரதீபன்

Byadmin

May 22, 2025


யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனிவரும் காலத்தில் எந்த திணைக்களத்துக்கும் காணி வழங்குவதில்லை எனவும், பழைய பூங்கா வளாகத்திற்கென நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்  யாழ்ப்பாண மாவட்ட செயலர்  மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில்,

பழைய பூங்கா வளாகமானது முதலாவது அரசாங்க அதிபர் தனியாரிடம் காணியை கொள்வனவு செய்து அரசாங்க அதிபர் பெயரில் எழுதப்பட்ட வளாகம். அவ்வளாகத்தில் உள்ள சில காணிகள்  ஏற்கனவே அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டு அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன.

வளாகத்தினை சரியான பொறிமுறைகள் ஊடாக பராமரிக்கவேண்டிய தேவைப்பாடுகள் உள்ள  நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக முறையாக பேணவேண்டிய அவசியமும் உள்ளது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1. பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்துக்கும் காணி வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

3. வளாகத்தில்  உள்ள திணைக்களங்களிலிருந்து காணிக்கான விலைமதிப்பீட்டிற்கு அமைய, வாடகை அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

4. பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரியின் பாதுகாப்பு கருதி வேலி அமைப்பது தொடர்பாகவும், புனரமைப்பது தொடர்பாகவும்  தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

5. வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பழைய பூங்கா வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு தொடர்பாக மாவட்ட செயலரின் தலைமையில்  நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.

By admin