• Sun. Jan 25th, 2026

24×7 Live News

Apdin News

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

Byadmin

Jan 25, 2026


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம், கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதற்கு எதிராக மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு, இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரைகள் 10, 12(1), 12(2), 14(1)(e) மற்றும் 14(1)(f) ஆகியவற்றிற்கு முரணாக முதலாம் எதிர்மனுதாரர் செயற்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு 23.01.2026 ஆம் திகதியன்று பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த வழக்கின் விடயப்பொருளாக, 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம், அப்போதைய அதிபரால் அகற்றப்பட்டதுடன், பின்னர் அதனை வேறொரு இடத்தில் மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயற்பாடு அடிப்படை உரிமை மீறலாகும் எனக் குறிப்பிட்டு மனுதாரர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், குறித்த வழக்கு 03.07.2026 ஆம் திகதியன்று விவாதத்திற்காக திகதியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர்களான அமிர்தலிங்கம் லதாங்கன், திருநாவுக்கரசு சிவகுமரன் மற்றும் நடராஜா சிவானந்தராஜா ஆகியோர் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.எஸ். கணேஷராஜன் தலைமையில், சட்டத்தரணிகள் விதுஷா லோகநாதன் மற்றும் மங்களேஸ்வரி சங்கர் ஆகியோரின் அனுசணையுடன் தோன்றினர்.

முதலாம் எதிர்மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் தோன்றியதுடன், இரண்டாம் எதிர்மனுதாரர் முதல் ஏழாம் எதிர்மனுதாரர்கள் வரை சார்பில் சட்டமாஅதிபர் தோன்றினார்.

By admin