பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியாவில் நடைபெற்ற நீண்ட நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு யுக்ரேனும் அமெரிக்காவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் ரஷ்யாவை நோக்கி திரும்பியது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியது போல், “இப்போது முடிவு ரஷ்யாவின் கையில் உள்ளது”
எதிர்பார்க்கப்பட்ட பதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடமிருந்து வந்துள்ளது.
யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக புதின் தெரிவித்துள்ளார். ஆனால் பல கேள்விகளை எழுப்பியுள்ள அவர், அது குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் அந்த போர் நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும், இந்த மோதலுக்கான ‘மூல காரணிகளை’ தீர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது சாத்தியமாக தோன்றினாலும், அமைதி ஏற்படுவதற்கு இன்னும் பல தடைகள் உள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்ததால் யுக்ரேனுக்கு கிடைத்த பலன் என்ன?
யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையில் மோசமான சந்திப்பு நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவுடனான ஆக்கபூர்வமான உரையாடலை மீட்டெடுக்க யுக்ரேனால் முடிந்தது.
30 நாள் போர் நிறுத்தத்திற்கான யுக்ரேனின் உடன்பாடு, ஆயுத விநியோகம் மற்றும் உளவுத்தகவல்கள் பகிர்வை அமெரிக்கா மீண்டும் தொடங்க வழி வகுத்தது.
பட மூலாதாரம், Salah Malkawi/Getty Images
யுக்ரேன், போரை நிறுத்த விரும்பவில்லை என தொடர்ந்து ரஷ்யாவும், சமீபத்தில் அமெரிக்காவும் கூறி வரும் நிலையில், யுக்ரேன் அந்த கருத்தை மாற்றியுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளது.
மறுபுறம், போரின் முதல் இரண்டு ஆண்டுகளாக யுக்ரேன் கடைபிடித்து வந்த அடிப்படைக் நிலைப்பாட்டுக்கு மாறாக, போர் முனை முழுவதும் போர்நிறுத்தத்துக்கு உடன்படுவது ஒரு மிகப்பெரிய மாற்றமாக காணப்படுகிறது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யுக்ரேன் பிரதேசத்தில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறும் வரை, போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாது என யுக்ரேன் கூறி வந்தது
போரினை தற்காலிகமாக நிறுத்துவது, புதிய தாக்குதல்களுக்கு ரஷ்யா மீண்டும் தயாராவதை மட்டுமே அனுமதிக்கும் என்று யுக்ரேன் வாதிட்டது.
அதனால் தான் யுக்ரேன் தரப்பினர், “வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல்களுக்கு மட்டும் போர்நிறுத்தம் – தரை வழி தாக்குதலுக்கு அல்ல” என்ற முன்மொழிவுடன் செளதி அரேபியாவுக்கு சென்றனர்
மேலும் போர்நிறுத்தத்தை பயன்படுத்தி ரஷ்யா மீண்டும் புதிய தாக்குதல் நடத்துவதைத் தடுக்க எந்த வகையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படும் என்பது தொடர்பான கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இருப்பினும், போர்நிறுத்தத்திற்கு பிறகே பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்க முடியும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டால், யுக்ரேன் சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அளித்த வாய்ப்புகள் யாவை ?
கடந்த காலத்தில், விளாதிமிர் புதின் தற்காலிக போர்நிறுத்தம் குறித்த சாத்தியமான வாய்ப்புகளை பரிசீலித்திருந்தார். ஆனால் யுக்ரேன் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், நீண்டகால போர்நிறுத்தம் தொடர்பாக புதினும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசுக்கு நெருக்கமான ஒரு நபரிடமிருந்து, பிபிசிக்கு கிடைத்துள்ள தகவலின்படி, எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் போர்நிறுத்தம் ஏற்படுத்துவது முதன்மையாக யுக்ரேனுக்கு ஆதரவாகவே அமையும் என்று ரஷ்ய அதிகாரிகள் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் எந்த விதமான சலுகைகளையும் வழங்காமல் போர் நிறுத்தம் எட்டப்பட்டால், புதின் மீண்டும் மோதலை தொடரும் வாய்ப்பு உள்ளது. அவரது வார்த்தைகளில் கூறுவது என்றால், ‘இலக்குகளை எட்டும் வரை’.
இதனால் ‘ரஷ்யா நம்பிக்கைக்குரிய நாடாக இல்லை’ என்ற கருத்து மேலும் வலுப்பெறும்.
ஜூன் 2024 இல், விளாதிமிர் புதின் போர்நிறுத்தத்திற்கான தனது முக்கிய நிபந்தனைகளை பட்டியலிட்டார்.
அவற்றில், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகள் முழுவதிலும் இருந்து யுக்ரேனிய படைகள் திரும்பப் பெற வேண்டும். இப்போது இவை அனைத்தும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.
மேலும், யுக்ரேன் நேட்டோவில் இணையவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
இவை எதுவும் செளதி அரேபியாவில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பகுதியாக இல்லை.
அதே நேரத்தில், அமெரிக்கா யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நடவடிக்கையும், உளவுத்தகவல்களை பகிர்வையும் மீண்டும் தொடங்கியிருப்பது புதினுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
யுக்ரேனுக்கு வழங்கப்படும் இந்த ராணுவ உதவிகளே மோதலை தொடர செய்யும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் தொடர்ந்து வாதிட்டு வந்தார்.
நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான திட்டம் உள்ளதா?
ரஷ்யாவும் யுக்ரேனும் போரில் ஒரு குறுகிய இடைநிறுத்தம் மட்டுமல்லாமல், மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகின்றன.
அப்படியென்றால், இரு நாடுகளும் ஒரு நிலையான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை தடுப்பது எது?
ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே நேரடி உரையாடல் இல்லாததால், போரிடும் இரு தரப்பினரின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான முன்மொழிவு யாரிடமும் இல்லை என ரஷ்ய அரசுக்கு நெருக்கமான நபர் பிபிசியிடம் கூறினார்.
“நாங்கள் ஆவணங்களை உருவாக்க வேண்டும், அதற்கு நேரம் எடுக்கலாம். நாங்கள் யுக்ரேனியர்களுடன் அமர்ந்து யுக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றி விவாதிக்க வேண்டும், மேலும் புதினின் ‘வரம்புகள்’ என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
ரஷ்யாவோ அல்லது யுக்ரேனோ அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சிறப்புப் பிரதிநிதியை நியமிக்காததால் நிலைமை சிக்கலானது.
ஐரோப்பா ஒரு திட்டத்திற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக யுக்ரேனின் கூட்டாளி நாடுகள் இந்த விஷயத்தில் பல அவசர உச்சி மாநாடுகளை நடத்தியுள்ளன.
ஆனால், அங்கும் கூட யுக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற பிரச்னைகளில் ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
“இவை மிகவும் கடினமான மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பிரச்னைகள்,” என்கிறார் அமெரிக்காவின் லாப நோக்கற்ற உலகளாவிய கொள்கை சிந்தனைக் குழுவான ராண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் சாமுவேல் சாரப்.
“நம்பமுடியாத அளவு வன்முறையுடன் கூடிய கொடூரமான போரில் ஈடுபட்டிருந்த இரண்டு நாடுகள் கடினமான சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது மிகவும் கடினமானது,” என்று அவர் கூறுகிறார்.
மேலும், ரஷ்யாவும் யுக்ரேனும் அமைதிக்கான ஒரு விரிவான திட்டத்திற்காக நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சமரசம் எப்படியானதாக இருக்கும்?
அமைதி காக்கும் படைகளை யுக்ரேனுக்கு அனுப்புவது பற்றிய விவாதம், நாடுகளின் நிலைப்பாடுகள் எவ்வளவு வேறுபட்டுள்ளன என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்த யோசனைக்கு வலுவான ஆதரவாளர்களாக உள்ளன.
மேலும் இந்த கோட்பாட்டில், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளும் இணைய தயாராக உள்ளன.
ஆனால், 2025 லண்டன் உச்சி மாநாட்டில் யுக்ரேன் குறித்து நடந்த விவாதங்களை அறிந்த ஒரு ஐரோப்பிய ராஜ்ஜீய அதிகாரி, அதிகாரப்பூர்வமாக ‘எங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் லண்டன் உச்சி மாநாடு’ என்று பெயரிடப்பட்ட இந்த மாநாட்டில், பல நாடுகள் ஆர்வமாக பங்கேற்கவில்லை என்கிறார்
பட மூலாதாரம், Getty Images
அமைதி காக்கும் படையினரை அனுப்பும் யோசனையை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்று பிரிட்டன் நம்பியிருக்கலாம், ஆனால் அது நடக்கவில்லை. ஏனெனில் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் தற்போது கடினமான உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன என்கிறார் அந்த ராஜ்ஜீய அதிகாரி.
ஐரோப்பிய அமைதி காக்கும் படையினருக்கு அமெரிக்க அதிகாரிகள் ஏதேனும் ஆதரவை அல்லது உத்தரவாதத்தை வழங்க தயாராக இருக்கிறார்களா என்பதும் தெளிவாக இல்லை.
மேலும் அமெரிக்க ஆதரவு இல்லாமல் அமைதி காக்கும் பணி சாத்தியமற்றது என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
மறுபுறம், ஐரோப்பிய அமைதிப்படையின் யோசனையை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. மேலும் தனது எல்லைகளுக்கு அருகில் நேட்டோ படைகளைப் பார்க்க விரும்பவில்லை என்று தொடர்ந்து கூறியுள்ளது.
அமெரிக்க நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் யுக்ரேனுக்கு ராணுவ ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாக ஐரோப்பிய தலைவர்கள் உறுதியளிக்கின்றனர்.
ஆனால், ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில், ரஷ்யா யுக்ரேன் ராணுவத்தின் அளவை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று கோரியது மற்றும் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது நாட்டின் அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் குறிப்பிட்டது.
அதேபோல், ரஷ்யா எவ்வித சமரசங்கள் செய்ய தயாராக உள்ளது என்ற கேள்வியும் இன்னும் உள்ளது.
“நம்முடையதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று புதின் கடந்த வாரம் ரஷ்ய வீரர்களின் குடும்பங்களுக்கு உறுதியளித்தார்.
ரஷ்யா சமரசம் செய்யவில்லை என்றால், கூடுதலான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்துகிறார்.
ஆனால் போர்நிறுத்தம் தவிர, ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா வேறென்ன சலுகைகளை எதிர்பார்க்கிறது என்பது தெரியவில்லை.
புதிய அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவுடனான அதன் உறவிலிருந்து ஒட்டுமொத்தமாக என்ன எதிர்பார்க்கிறது என்பது குறித்து தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழலும் இதற்குக் காரணமாக உள்ளது.
“ரஷ்யாவுடன் இயல்பு நிலை அடைவதை அவர்கள் குறிக்கோளாகக் கருதுகிறார்களா, அதற்காக போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார்களா? அல்லது போர்நிறுத்தத்தையே நோக்கமாகக் கருதுகிறார்களா? மற்றும் உறவுகளை இயல்பாக்குவதையே அதை அடைவதற்கான ஒரு வழியாகக் கருதுகிறார்களா? என்பது தெரியாது” என்கிறார் சாமுவேல்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.