பட மூலாதாரம், Reuters
சர்வதேச அரசியலில் மற்றொரு கொந்தளிப்பான வாரம் முடிந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற காரசாரமான உரையாடல், யுக்ரேனின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி சந்தித்தது, ரஷ்யா குண்டுகள் வீசி யுக்ரேனை தாக்கியது என்று பல நிகழ்வுகள் நடைபெற்றன.
செளதி அரேபியாவில் அடுத்த வாரம் புதிதாக அமெரிக்கா – யுக்ரேன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த முக்கிய நாடுகள் என்ன நினைக்கின்றன?
கடந்த வாரம் உலக அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஐந்து பிபிசி செய்தியாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
அமெரிக்கா: ரஷ்யா மீது அரிய விமர்சனம்
டாம் பேட்மேன், வெளியுறவு செய்தியாளர், வாஷிங்டன்
டொனால்ட் டிரம்பும், ஜேடி வான்ஸும் ஸெலன்ஸ்கியை அவமானத்தப்படுத்தும் வகையில் நடத்திய பின்னர், அமெரிக்க அதிபர் யுக்ரேனுக்கு வழங்கப்படும் ராணுவ மற்றும் உளவுத் தகவல் பரிமாற்ற உதவிகளை நிறுத்திவைத்தார்.
இதனால் காலம் செல்ல செல்ல யுக்ரேன் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன் அடிமட்ட அளவில் பாதிக்கப்படும். டிரம்பை எதிர்க்கும் ஜனநாயக கட்சியினர் அவர் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபரின் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவும் ஸெலன்ஸ்கிக்கு அளிக்கப்படும் அழுத்தமாக இந்த நடவடிக்கையை அமெரிக்க நிர்வாகம் பார்க்கிறது.
டிரம்பின் தூதர் ஜெனரல் கீத் கெல்லாக் அமெரிக்கா ராணுவ உதவியை திரும்பப் பெற்றுக்கொள்வது “கழுதையை அதன் முகத்தில் (ஒரு கட்டையால்) அடிப்பதை போன்றது…இப்போது நீங்கள் அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளீர்கள், இது மிகவும் முக்கியமானது…. அதன் பின்னர் (அதிபர் விரும்புவதை) செய்வது அவர்களைப் பொறுத்தது.”
இவ்வளவு அழுத்தங்களை கொடுத்த பின்னர், செளதி அரேபியாவில் யுக்ரேனைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்பின் முதன்மையான வெளிநாட்டு கொள்கை குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று சமரசமான குரலில் பேசத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா யுக்ரேன் மீதான குண்டுவீச்சுகளை தீவிரப்படுத்துவதை தடுக்கும் நோக்கோடு, வெள்ளிக்கிழமையன்று அரிதாக ரஷ்யாவை விமர்சித்த டிரம்ப், ஏற்கனவே கடும் தடைகள் விதிக்கப்பட்ட அந்த நாட்டின் மீது மேலும் அதிக தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
ஆனால், இந்த ஒரு தருணத்தை தவிர, இந்த நிர்வாகம் தனது கூட்டாளியாக கருதப்படும் நாட்டை திரும்ப திரும்ப கண்டித்ததுடன், தனது விரோதியை நோக்கி அதுபோன்ற விமர்சனங்கள் செய்வதை தவிர்த்து வந்திருக்கிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜய் லேவரோவ் யுக்ரேனில் ஐரோப்பிய அமைதிப்படையினரை அனுமதிக்க முடியாது என தெரிவித்த கருத்தை பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டேமி புருஸிடம் வியாழக்கிழமை கேட்டேன். அது மேற்கின் “பகைமையான குறிக்கோள்” என குறிப்பிட்ட செர்ஜெய் இதில் “சமரசத்திற்கு இடமில்லை” என தெரிவித்திருந்தார்.
இது குறித்து பதிலளிக்க மறுத்த புரூஸ், வெளிநாட்டு தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் குறித்து கருத்து தெரிவிக்க தனக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார். ஆனால் அதற்கு சற்று முன்னர்தான் ஸெலன்ஸ்கி “அமைதிக்கு தயாராக இல்லை” என டிரம்ப் கூறியதை புரூஸ் திரும்பக் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
ரஷ்யா: யுக்ரேன் மீதான தாக்குதல் தொடரும் நிலையில் மேற்குலகின் பிளவை ரசிக்கும் தலைவர்கள்
வைட்டாலிட்டி ஷெவ்சென்கோ, பிபிசி மானிட்டரிங் ரஷ்ய ஆசிரியர்
தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுக்கும் வரை, ரஷ்யா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள தேவையான நேரம் இருந்தது. ஏனெனில் யுக்ரேன் மீது அழுத்தம் இருக்கும் ஒரு வாரமாகத்தான் இது இருந்தது.
அமெரிக்கா ராணுவ மற்றும் உளவு தகவல்கள் உதவிகளை நிறுத்தி வைத்தது முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய பின் யுக்ரேனுக்கு நேர்ந்த மிக மோசமான பின்னடைவாக இருப்பது மட்டுமல்லாது ரஷ்யாவின் வாய்ப்புகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து யுக்ரேன் முழுவதும் நிகழ்ந்த தாக்குதல்கள், ரஷ்யா வழக்கம் போல் தாக்குதலை தொடர்வதில் மகிழ்ச்சியடைவதை காட்டுகிறது.
“சிறப்பு ராணுவ நடவடிக்கையின்” குறிக்கோள்கள் நிறைவேற வேண்டும், கூடுதல் யுக்ரேன் பகுதிகள் கைப்பற்றவேண்டும் என ரஷ்யா நினைக்கிறது.
போர் நிறுத்தம் அல்லது அமைதிப்படை மூலம் யுக்ரேன் மீதான அழுத்தத்தை நீக்க யுக்ரேனின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ரஷ்யா நிராகரித்துள்ளது.
“டிரம்பின் அமெரிக்கா இனிமேல் நம் பக்கம் இல்லாமல் இருக்கலாம்.” என்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் கருத்துக்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் காதுகளுக்கு இசையாக இருக்கின்றன.
மேற்குலகு கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை ரசிக்க புதினுக்கு இது ஒரு சந்தர்ப்பம். இந்த நிலையை அடைவதற்காக அவர் பல ஆண்டுகள், பல பத்தாண்டுகள் முயன்று வந்திருக்கிறார்.
அவர் அதை போர்க்களத்தில் நடத்திய தாக்குதல்கள் மூலம் அடையவில்லை, யுக்ரேனின் மிகப்பெரிய கூட்டாளியின் திடீர் திருப்பத்தால் அதை அடைந்துள்ளார்.
அடுத்த செவ்வாய்கிழமை, யுக்ரேன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் செளதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ரஷ்யா அதை நெருக்கமாக கவனிக்கும், ஆனால் நம்பிக்கையாக உணரும்.
பட மூலாதாரம், Reuters
யுக்ரேன்: அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஸெலன்ஸ்கி
மைரோஸ்லாவா பெட்சா, பிபிசி யுக்ரேன் மற்றும் டேனியல் ரிட்டென்பெர்க், பிபிசி உலக சேவை
அமைதி திரும்ப தனது உறுதியை மீண்டும் தெரிவித்து, மேற்கத்திய ராணுவ ஆதரவை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், யுக்ரேன் அதிபருக்கு இது உணர்ச்சிப்பூர்வமான, புண்படுத்துகிற, இடைவிடாத சோதனைகள் நிறைந்த வாரமாக இருந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் டிரம்புடன் நடந்த மோதலின் விளைவு, ராணுவ உதவி மற்றும் உளவு தகவல் பரிமாற்றத்தை அமெரிக்கா நிறுத்திய பிறகு மேலும் மோசமானது.
“துரோகத்தின் வாசம் காற்றில் தெரிவதாக,” யுக்ரேன் அரசுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். “அதிபரும் அவரது குழுவினர் உட்பட மொத்த நாடும் அதை உணர்கிறது.”
“வெளிப்படையான பொது மன்னிப்பு கேட்கவேண்டும்” என்ற டிரம்பின் கோரிக்கை நிராகரித்த ஸெலன்ஸ்கி, அதற்கு பதிலாக, வெள்ளை மாளிகையில் நடத்த மோதல் “வருத்தத்திற்குரியது” என கூறி அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
சேதத்தைக் கட்டுப்படுத்தி, ஐரோப்பாவின் ஆதரவை பெருக்க ஸெலன்ஸ்கி பிரஸ்ஸல்ஸுக்கு சென்றார். ஆனால் அவருடன் இருப்பதாக பொதுவெளியில் வாக்குறுதிகளை பெற்றாலும், அவர் எதிர்பார்த்த உறுதியான ராணுவ உதவிக்கான வாக்குறுதிகள் அவருக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையில், கடலிலும், வான்பரப்பிலும் குறைந்த அளவிலான போர்நிறுத்தத்தை ஆதரிக்கும்படி ஸெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்தினார். இதற்கு பிரான்ஸ் அதிபர் ஆதரவு தெரிவித்தார்.
யுக்ரேன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் செளதி அரேபியாவில் அடுத்த வாரம் பேச்சுவார்தை நடத்துவார்கள். ஆனால் அமைதிக்கான பாதை நிச்சயமற்றதாக இருக்கிறது.
பின்னடைவுகள் இருந்தாலும், அதிபரின் குழுவுக்கு நெருக்கமான ஒருவர், அதிபர் சவால்விடும் துணிச்சலுடன்தான் இருப்பதாக கூறினார்: “மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கீவ்வில் தங்கியிருக்க முடிவு செய்தார். அவருக்கு எந்த அளவு அழுத்தம் அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அவர் உறுதியுடன் இருக்கிறார்.”
பட மூலாதாரம், Reuters
ஐரோப்பா: அமெரிக்கா ஆதரவு விலகிவிட்ட நிலையில் பிரான்ஸ் அணு ஆயுத பாதுகாப்பை அளிக்கக்கூடுமா?
பால் கிரிபி, ஐரோப்பா டிஜிட்டல் ஆசிரியர்
தொடருவதற்கே கடினமாக இருக்குமளவு நிறைய ஐரோப்பிய உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கு மேலும் நடைபெறவுள்ளன.
இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்தே தாங்கள் நம்பியிருந்த பாதுகாப்பு வளையம் இனிமேலும் இல்லாமல் போகலாம் என்பதை ஐரோப்பாவின் தலைவர்கள் திடீரென உணர்ந்திருக்கிறார்கள். அதனால் முன்னெடுப்புகள் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கின்றன.
ஐரோப்பா யுக்ரேனுக்கு உதவவேண்டும் என பொதுவான ஒத்த கருத்து நிலவுகிறது. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் கள அளவில் “விரும்புபவர்களின் கூட்டணியை” தர பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் முன்வருகின்றன.
ரஷ்யா இந்த எண்ணத்தை வெறுக்கிறது ஆனால் ஒரு திட்டத்தை உருவாக்க ராணுவ தளபதிகளை செவ்வாய்கிழமை மக்ரோங் ஒருங்கிணைப்பார்.
ஆனால் “தெளிவான தற்போதைய அபாயம்” என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வான் டெர் லேயென் விவரிக்கும் அபாயத்திலிருந்து ஐரோப்பா தன்னைத் தானே தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்த பெரிய கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன.
அமெரிக்கா உதவுவதற்கு இல்லையென்றால் “நாம் தயாராக இருக்கவேண்டும்.” என்கிறார் மக்ரோங். பாதுகாப்புகளை வலுப்படுத்த பல பில்லியன் யுரோ மதிப்புள்ள திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பேசிக்கொண்டிருக்கிறது.
ஐரோப்பா முழுமைக்கும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தங்களது அணு ஆயுத பாதுகாப்பை வழங்கும் சாத்தியக்கூறுகளை ஜெர்மனியின் சான்சிலராக பதவியேற்கவுள்ள பிரெட்ரிச் மெர்ஸ் எழுப்பியுள்ளார்.
மக்ரோங் இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருக்கிறார். ஆனால் பிரான்ஸின் அணு ஆயுத வளையம் ஓரளவுதான் விரிவடையும் என்பதுடன் இறுதி முடிவு பாரீஸில் எடுக்கப்படும்.
இது ஐரோப்பாவின் பாதுகாப்பு பிரச்னையின் மையப் பகுதிக்கு நீள்கிறது.
அமெரிக்கா இல்லாமல், ஐரோப்பாவின் தனித் தனி நாடுகள் தங்கள் வளங்களை ஒருங்கிணைந்து ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கமுடியுமா?
லித்துவேனியா போன்ற சிறிய நாடுகளுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.
ஆனால் இது பற்றிய விவாதம் தொடங்கிவிட்டது. “நம்முடைய சொந்த அணு ஆயுதங்கள் இருப்பது” பாதுகாப்பானதாக இருக்கும் என போலந்தின் டொனால்ட் டஸ்க் சொல்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.