போரை முடிவுக்கு கொண்டு வரவும், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேனை பாதுகாக்கவும் யுக்ரேனுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார்.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்து முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும், யுக்ரேன் தரப்பில் அமெரிக்காவையும் இருக்கச் செய்ய முயல்வோம் என்றும் அவர் கூறினார்.
“நாம் இன்று வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்” என்று 18 தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின் முடிவில் ஸ்டார்மர் கூறினார். அந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
யுக்ரேன் ஒரு “வலுவான ஆதரவை” உணர்ந்ததாகவும், இந்த மாநாடு ” பல காலமாக பார்த்திராத வகையில், ஐரோப்பிய ஒற்றுமையை மிக உயர்ந்த மட்டத்தில் காட்டியது” என்றும் ஸெலன்ஸ்கி கூறினார்.
வெள்ளை மாளிகையில் யுக்ரேன் அதிபருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு லண்டனில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
“உண்மையான அமைதி மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையைக் கண்டறிய நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்” என்று மாநாட்டுக்குப் பிறகு ஸெலன்ஸ்கி கூறினார்.
ஐரோப்பிய நாடுகள் ஒப்புக் கொண்ட 4 அம்ச செயல் திட்டம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேனை ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் நான்கு அம்ச திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறினார்.
தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸ்டார்மர், கூட்டத்தில் 4 அம்சங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்:
யுக்ரேனுக்கு ராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும், ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்
எந்தவொரு நீடித்த சமாதானமும் யுக்ரேனின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தையிலும் யுக்ரேன் இருக்க வேண்டும்
சமாதான உடன்பாடு ஏற்பட்டால், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க யுக்ரேனின் தற்காப்பு திறன்களை அதிகரிப்பது
யுக்ரேனில் ஒரு உடன்பாட்டை கோரவும், அதற்குப் பின்னர் சமாதானத்தை உத்தரவாதப்படுத்தவும் ஒரு கூட்டணியை கட்டமைப்பது.
5,000 க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க பிரிட்டன் ஏற்றுமதி நிதியில் கூடுதலாக 2 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் ஸ்டார்மர் அறிவித்தார். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் யுக்ரேனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க 2.77 பில்லியன் டாலர்கள் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
“கடந்த கால தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஷ்யா எளிதாக மீறக்கூடிய ஒரு பலவீனமான ஒப்பந்தத்தை நாம் ஏற்க முடியாது. அதற்கு பதிலாக எந்தவொரு ஒப்பந்தமும் மீறப்பட முடியாத அளவுக்கு வலிமையானதாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன், “தரையில் துருப்புகள், வான்வெளியில் விமானங்கள்” கொண்டு யுக்ரேனுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.
“ஐரோப்பா அதிக சுமையை ஏற்க வேண்டும்,” என்று கூறிய அவர், இந்த உடன்படிக்கைக்கு அமெரிக்க ஆதரவு தேவைப்படும் என்பதுடன், ரஷ்யாவையும் உள்ளடக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் விதிகளை வகுக்க ரஷ்யாவை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.
“நான் தெளிவாக கூறுகிறேன், நீடித்த அமைதிக்கான அவசர தேவை குறித்து நாங்கள் டிரம்புடன் உடன்படுகிறோம். இப்போது நாம் ஒன்றாக அதனை வழங்க வேண்டும்” என்று ஸ்டார்மர் கூறினார்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஒரு நம்பமுடியாத கூட்டாளியாக உள்ளதா என்று கேட்கப்பட்ட போது, “கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததை யாரும் பார்க்க விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கா ஒரு நம்பமுடியாத கூட்டாளி என்பதை நான் ஏற்கவில்லை” என்றார் ஸ்டார்மர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன்
இந்த மாநாட்டில் பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், துருக்கி, நார்வே, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் கூறுகையில், “ஐரோப்பா மீண்டும் ஆயுதமேந்த” வேண்டிய அவசர தேவை இருப்பதாக தெரிவித்தார்.
இதே உணர்வுகளை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவும் வெளிப்படுத்தினார். யுக்ரேன் “போரை தொடர வேண்டியிருக்கும் வரை” அதற்கு தேவையானவற்றை உறுதி செய்ய ஐரோப்பிய நாடுகள் முன் வருவதை இந்த மாநாட்டின் போது காண முடிந்தது என்று கூறினார்.
கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட யுக்ரேன் தயார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி இடையில் சூடான விவாதம் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்குப் பிறகு, ஸெலன்ஸ்கி சாண்ட்ரிங்ஹாமுக்குச் சென்றார். அங்கு அவர் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுடன் கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறினார்.
ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தின் போதே இந்த ஒப்பந்தத்தில் யுக்ரேன் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் டிரம்புடன் ஏற்பட்ட ஒரு சூடான விவாதத்துக்குப் பிறகு யுக்ரேனிய தூதுக்குழு உடனே புறப்பட்டுவிட்டது.
யுக்ரேனின் அரிய கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கு வழிவழி செய்யும் வகையில் அது இருந்தது.
லண்டன் மாநாட்டைத் தொடர்ந்து, கனி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து பிபிசி கேட்டபோது, அது கையெழுத்திட தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி கூறினார்.
“சம்பந்தப்பட்ட தரப்புகள் தயாராக இருந்தால் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, மூன்றாம் சார்லஸ் மன்னரை ஸெலன்ஸ்கி சந்தித்த போது அவருக்கு நல்ல வரவேற்பு வழங்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் ஸெலன்ஸ்கி ஆகியோரின் வாஷிங்டன் பயணங்களுடன் ஒரு வாரம் முழுக்க நிலவிய பரப்பரப்பை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த மாநாடு நடைபெற்றது.
ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஒரு சூடான கருத்து பரிமாற்றத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. டிரம்ப் ஸெலன்ஸ்கியை மூன்றாம் உலகப் போர் என்ற பேராபத்துடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்ய அதிபர் புதின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனை தவிர்த்து விட்டு ரஷ்யாவுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியவர் புதின் என்றாலும், யுக்ரேன் போரைத் தொடங்கியதாக ஒரு கட்டத்தில் ஸெலன்ஸ்கியை டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.