யுக்ரேன் மீதான போரை நிறுத்தி வைப்பது குறித்து ரஷ்யா முடிவெடுக்கும் வரை அந்த நாட்டின் மீது பெரிய அளவில் பொருளாதார தடை விதிக்க தீவிரமாக சிந்தித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா யுக்ரேன் மீது பலத்த தாக்குதலை தற்போது நடத்துவதால் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க யோசிப்பதாக அவர் தெரிவித்தார்.
ரஷ்ய விவகாரம் குறித்து அவர் பேசும் தொனியில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டதை இந்த கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. அதிபராக அவர் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு ரஷ்ய அதிபர் புதினை தொடர்ச்சியாக பாராட்டி வந்தார்.
ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட யுக்ரேன் அதிபருக்கு விருப்பமில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி வந்தார்.
சில மணி நேரம் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்யாவைக் காட்டிலும் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது,” என்று கூறினார். மேலும் ரஷ்ய அதிபர் புதின் மீது நம்பிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் டிரம்ப்
அண்மையில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் வைத்து கடுமையாக விமர்சனம் செய்தார் டிரம்ப். சில வாரங்களுக்கு முன்பு அவரை ‘சர்வாதிகாரி’ என்றும் டிரம்ப் அழைத்தார். 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 அன்று யுக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சில் படையெடுப்பில் ஈடுபட்டதற்கு யுக்ரேன் தான் காரணம் என்றும் குற்றம் சுமத்தினார் அவர்.
யுக்ரேன் அதிபருடன் ஏற்பட்ட வார்த்தைப் போரை தொடர்ந்து, யுக்ரேனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், புலனாய்வுத் தகவல்களை யுக்ரேனுடன் பகிரவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதான், ரஷ்யா வியாழக்கிழமை பெரியளவில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலமாக யுக்ரேனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வழிவகை செய்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை காலை, இந்த தாக்குதலை ஒட்டி பேசிய டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நினைத்திருப்பதாக ஓவல் அலுவலகத்தில் பேசுகையில் தெரிவித்தார்.
“அவர்கள் (யுக்ரேன்) மீது மோசமான தாக்குதலை ரஷ்யா நடத்துகிறது.” என்று டிரம்ப் தெரிவித்தார்.
யுக்ரேனுக்கு அமெரிக்கா அளித்த ராணுவ உதவிகளை நிறுத்தியதன் விளைவாக தான் இது நடந்ததா என்ற எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த இடத்தில் எவர் ஒருவர் இருந்திருந்தாலும் என்ன செய்திருப்பார்களோ அதைத்தான் புதின் செய்திருக்கிறார் என்று கூறினார்.
“போர் முடிவுக்கு வருவதை அவர்கள்(யுக்ரேன்) விரும்புகிறார்களா என்று அறிய விரும்புகிறேன். ஆனால், அவர்களின் விருப்பம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்று அமெரிக்காவின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் பதில் அளித்தார் டிரம்ப்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அதிபர் மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு யுக்ரேனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது அமெரிக்கா
புத்திசாலித்தனமாக செயல்பட்ட புதின்
வெள்ளிக்கிழமை சமூக வலைதள பதிவு ஒன்றில் டிரம்ப், “நான் ரஷ்யா மீது வங்கிகளில் பணப் பரிமாற்றத் தடை, பொருளாதார தடை மற்றும் வரியை அதிகரித்தல் போன்றவற்றை செயல்படுத்த மிகவும் தீவிரமாக சிந்தித்து வருகிறேன்.
ரஷ்யா, யுக்ரேன் மீதான போரை நிறுத்துவதற்கான இறுதி ஒப்பந்தத்தை எட்டும் வரையில் இதை நீட்டிக்க யோசித்து வருகிறேன். கால தாமதமாவதற்கு முன்பு யுக்ரேனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு தயாராகுங்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ரஷ்யா மீது எத்தகைய வரிகளும் தடைகளும் விதிக்கப்படும் என்பது குறித்த முழு தகவல்களை அவர் வழங்கவில்லை.
ஏற்கனவே ரஷ்யா, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணியை குறிவைத்து தடைகளை விதித்துள்ளன.
இந்தியா மற்றும் சீனாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதன் மூலமாகவும், கஜகஸ்தான் போன்ற நாடுகள் வழியாக மேற்கத்திய நாடுகளில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்வதாலும் இந்த இழப்பை ரஷ்யா ஈடுகட்டி வருகிறது.
ரஷ்யா ராணுவ தளவாடங்களை தயாரிக்கத் தேவையான தொழில்நுட்ப சாதனங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அனைத்து அழுத்தங்களும் யுக்ரேன் மீது மட்டுமே குவிக்கப்படுகின்றன என்று எழும் விமர்சனங்களை வெள்ளை மாளிகையால் மறுக்க இயலாது. எனவே ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் முன்வைத்துள்ள கருத்து அவர் இந்த விவகாரத்தில் பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்வதாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
பிரச்னை என்னவென்றால், டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதினுடன் நடத்திய 90 நிமிட அலைபேசி உரையாடலில் என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெரியாது.
ஆனால் புதின் மிகவும் புத்திசாலித்தனமாக காயை நகர்த்தியுள்ளார். அமைதியாக அமர்ந்த வண்ணம் அவர் டிரான்ஸ் அட்லாண்டிக் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்) கூட்டணியில் ஏற்பட்ட கருத்து மோதல்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தல் புதினை தொந்தரவு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு.