பட மூலாதாரம், Getty Images
யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் பல கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் போர்நிறுத்தத்தின் தன்மை குறித்து “கேள்விகள்” எழுந்துள்ளன.
அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, யுக்ரேன் இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட 30 நாட்கள் போர்நிறுத்தத் திட்டம் பற்றி பேசும்போது, புதின் இந்த கருத்தை கூறியுள்ளார்.
போர் நிறுத்த திட்டம் குறித்து, புதின் கூறிய கருத்தை “சூழ்ச்சி” என்று விவரித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கித் துறைகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், “இந்த யோசனை சரியானது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ஆனால் நாங்கள் விவாதிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன “என்று போர்நிறுத்தம் குறித்து கூறினார்.
போர்நிறுத்தம், “நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் வேண்டும்” என புதின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களது அமெரிக்க நண்பர்கள் மற்றும் கூட்டணிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் “ஒருவேளை நான் டொனால்ட் டிரம்புடன் பேசலாம்”’ என்றும் கூறினார்
மேலும், “யுக்ரேன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்தை எட்டுவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அதில் சில நுணுக்கங்கள் உள்ளன” என்றும் புதின் தெரிவித்தார்.
இரு தரப்பும் கடுமையாக முரண்படும் விஷயங்களில் ஒன்று, மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம்.
கடந்த ஆண்டு யுக்ரேன் அங்கு ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பகுதிகளை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
குர்ஸ்க் பிராந்தியத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா மீட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள யுக்ரைன் படைகள் “தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்கள், ஆனால் கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது. அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.”
“குர்ஸ்கில் யுக்ரேனியர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது இறப்பது” என்றார்.
அதனைத் தொடர்ந்து, “அந்த 30 நாட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? யுக்ரேன் மீண்டும் படைகளை திரட்டி ஆயுதங்களைச் சேகரிப்பதற்கா? படைக்குப் பயிற்சி அளிக்கவா? அல்லது இவற்றில் எதுவும் இல்லையா? அப்படி என்றால், இதை எவ்வாறு கண்காணிப்பது?” என புதின் கேள்வி எழுப்பினார்.
”சண்டை நிறுத்த உத்தரவை விடுப்பது யார்? 2,000 கிலோமீட்டருக்கு மேலான எல்லையில் யார் போர்நிறுத்த உடன்பாட்டை மீறியது என முடிவெடுப்பது யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் இரு தரப்பும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடுதல் அவசியம். இதை கண்காணிக்கப்போவது யார்?”என்கிறார் புதின்.
புதின் “நேரடியாக இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் உண்மையில் அவர் மறுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்”என யுக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தனது வீடியோ உரையில் கூறினார்.
“நிச்சயமாக, புதின் இந்த போரைத் தொடர விரும்புவதையும், யுக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதையும் அதிபர் டிரம்புக்கு நேரடியாகச் சொல்ல பயப்படுகிறார்” என்றார் ஸெலன்ஸ்கி.
மேலும், ”புதின் பல முன்நிபந்தனைகளை விதித்ததால் எதுவுமே நடக்காது” என்றும் கூறினார்
புதினின் கருத்துகளுக்கும் ஸெலன்ஸ்கியின் பதிலுக்கும் பிறகு, இரு தரப்புகளின் நிலைப்பாடுகளுக்கு இடையில் இப்போது தெளிவான பிளவு இருப்பது தெரிகிறது.
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் இரண்டு கட்ட செயல்முறையை விரும்புகிறது. முதலில் விரைவான போர்நிறுத்தம், அதன் பிறகு நீண்டகால அமைதி உடன்படிக்கையைப் பற்றிய பேச்சுவார்த்தைகள்.
ரஷ்யா இரண்டு செயல்முறைகளாக பிரிக்க முடியாது என்றும், அனைத்து பிரச்னைகளும் ஒரே உடன்படிக்கையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறது.
யுக்ரேன், ரஷ்யாவை அமைதியை விரும்பாத நாடாக சித்தரித்து, அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கலாம் என கருதுகிறது.
மறுபுறம், நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேனின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்ப இப்போது ஒரு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா நம்புகிறது.
ஆனால் இது டொனால்ட் டிரம்புக்கு ஒரு சிக்கலை அளிக்கிறது. சில நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர, விரைவான முடிவை விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது, புதின் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.
புதினின் கருத்துகளைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திக்க விரும்புவதாகவும், ரஷ்யா “சரியானதைச் செய்யும்” என்றும், 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார்.
மேலும் “ரஷ்யாவிடம் இருந்து போர் நிறுத்தம் வருவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் உடனான சந்திப்பின்போது, யுக்ரேனுடன் ஏற்கனவே குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் டிரம்ப்.
“யுக்ரேனுடன் நிலம் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். எந்த பகுதிகள் பாதுகாக்கப்படும், எவை இழக்கப்படும் என்பது குறித்தும் , இறுதி ஒப்பந்தத்தின் மற்ற அம்சங்கள் குறித்தும் விவாதித்து வருகிறோம்” என டிரம்ப் கூறினார்.
“இறுதி ஒப்பந்தத்தின் பல விவரங்கள் உண்மையில் விவாதிக்கப்பட்டுள்ளன.”
மேலும், நேட்டோ ராணுவக் கூட்டணியில் யுக்ரேன் இணைவது குறித்து, “அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார் டிரம்ப்.
அமெரிக்க பரிவர்த்தனை முறைகளுக்கான அணுகலை டிரம்ப் நிர்வாகம் கட்டுப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், பிற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது கடினமாகியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்டை ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.
பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குப் புதின் பயணம் செய்ததாகக் கூறும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டது. அந்த வீடியோவில், ரஷ்ய அதிபர் புதின் ராணுவ உடை அணிந்திருந்தார்.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது, இப்போது யுக்ரேனிய பகுதிகளில் சுமார் 20 சதவீதம் அதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு